மதத்தின் பெயரால் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக சனாதன, வருணாசிரம, ஹிந்து மதத்தின் பெயரால் பெண்கள்மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஹிந்துத்துவாவாதிகள், மத அடிப்படைவாதிகள், மூடநம்பிக்கை வியாபாரிகளாக உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்கள், ஜோதிடர்கள், சாமியார்கள் என பலராலும் பலவாறாக மோசடிகள் பெருகி வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளுக்கு பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் என ஊடகங்கள் துணைபோவதும், வியாபார நோக்கில் அவற்றை அப்படியே செயல்படுத்தி வருவதும் கண்கூடு.
அப்பாவி மக்களிடம் மூடநம்பிக்கையை வேரூன்றச் செய்து நடை பெற்றுவருகின்ற மோசடிகள், நரபலிகள், சுரண்டல்கள் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்திட மக்களிடையே விழிப்புணர்வு எவ்வளவு தேவையோ, அதே அளவில் சட்டமும் தேவைப்படுகிறது.
மோசடியான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில், பத்திரி கைகளில் வெளியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மக்களிடம் அறிவியல் கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 51 ஏ (எச்) தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவ னங்கள், அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இதனைக் கண்காணித்திட தனியே அதிகாரமிக்க ஓர் அமைப்பு செயல்பட வேண்டும்.
மோசடிகளில் முதன்மையானதாக இருப்பது பெண்கள்மீதான வன்கொடுமைகள், பெண்களை உயிருள்ள – மனித இனத்தின் ஒரு கூறாக பாவிக்காமல்,உயிரற்ற ஜடப்பொருளை பார்ப்பதுபோல் பார்ப் பதும், நடத்துவதுமாக இருக்கின்ற அவல நிலை இந்த நூற்றாண்டிலும் தொடரலாமா?
உதாரணத்துக்கு மராட்டிய மாநிலத்தில் மாந்திரீகத்துக்காக குழந்தை பெற்றிராத பெண்ணின் மாதவிலக்கின்போது வெளியாகின்ற குருதியை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்கிற செய்தியும், அதனைத் தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவமானமும்,இழிவும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பெண் காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது மாதவிலக்கு நேரத்தில் வெளியாகின்ற குருதியைக் கட்டாயப்படுத்தி பெற்று, மாந்திரீ கத்துக்காக ரூ.50ஆயிரத்துக்கு விற்றார்கள் என்கிற அதிர்ச்சித்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
மகாராட்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது பீட் என்ற பகுதி. இங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்னர் காதலித்து திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வரும் இந்த பெண்ணை, குடும்பத்தார் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டு அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவரிடம் அனைவரும் சேர்ந்து சமரசம் பேசி, வழக்கை திரும்பப் பெற வைத்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
அதன்படி தனது மாமியார், மாமனார், கணவர், கணவரின் சகோதரர் ஆகியோர் தன்னுடைய மாதவிடாய் இரத்தத்தை எடுத்து கட்டாயப் படுத்தி விற்றதாக கடந்த மார்ச் 7-ஆம் தேதி விஷ்ராந்த்வாடி என்ற பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், “கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் எனது கணவரின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எனது கணவரின் சகோதரர் என்னிடம் வந்து, எனது ‘மாதவிடாய் இரத்தம்’ தேவைப்படுவதாக கூறினார். நான் கோபமடைந்து அவரை திட்டினேன்.
மேலும் அவரது மனைவியிடம் கேட்குமாறு கூறினேன். அதற்கு அவர், ‘குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தம்’ தேவைப்படுவதாக கூறினார். அதோடு இந்த இரத்தத்தை விற்றால் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் சொன்னார். நான் கோபப்பட்டு அவரை திட்டி இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை மீறி எனது மாதவிடாய் இரத்தத்தை எடுத்துச் சென்று விட்டனர்.
இதற்கு என் மாமனார், மாமியார் என அனைவரும் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த புகார் காவல்துறை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் தத்தாத்ரே பாப்கர் கூறுகையில், “இந்தப் பெண் அளித்த புகார் பெரும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. இவர் அளித்துள்ள புகாரின் பேரில் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வு அவரது கணவரின் சகோதரர் பணிபுரியும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. பெண் அளித்த புகாரின்படி அவரது மாதவிடாய் இரத்தம் மாந்திரீகத்துக்கு பயன்படுத்த விற்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். தனது மாதவிடாய் இரத்தத்தை வற்புறுத்தி எடுத்து விற்றதாக கணவர் குடும்பத்தார் மீது மருமகள் புகார் அளித்துள்ளது மகாராட்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்டுள்ளதைப் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் – தொடர்ச் சியான கொடுமைகளுக்கு ஒரு பெண் உள்ளாக்கப்படும்போதுதான் வெளியாகிறது. மற்றபடி, பெண்ணே புகார் அளிக்க முன்வந்தாலும், சமுதாயத்தில் ஒரு பெண்குறித்த சமுதாயத்தின் கருத்து, பார்வை என்கிற பிற்போக்குத்தன கருத்துகளைக் கூறிக்கொண்டு, அப் பெண்ணின் துயருக்கு நிவாரணம் அளிக்க முன்வராமல், அப் பெண்ணுக்கு வேறு கதி கிடையாது என்று கூறிக்கொண்டு, கொடுமைப் படுத்தினாலும், அதை அப்பெண் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுபோல், கணவன் மற்றும் கணவன் குடும்பத்தாரை கடுமையாகத் தண்டிக்க முன்வருவதில்லை. தண்டிக்க சட்டத்தில் இடமிருந்தாலும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அப்பெண் பெரும் போராட்டம் நடத்தியாக வேண்டும்.
மூடநம்பிக்கைகளால்தான் செவ்வாய் தோஷங்கள், ஜாதகங்கள், இதர பலாபலன்கள், குழந்தைகள், பெண்கள்மீதான வன்கொடுமைகள், நரபலிகள் என்று அனைத்து வகையிலும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மதமும் நம்பிக்கைகளும் மக்களை எவ்வளவுக் காட்டுமிராண்டி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன! பக்தி வந்தால் ஆபாசம்கூட சர்க்கரையாக இனிக்கிறதே! வெட்கக்கேடு!