அறிவின் பயன்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனு டைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும்.

மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப் பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனே யானாலும், மற்ற ஜீவன்களின் உயிர் போலவே மனிதனுடைய உயிரும் ஒரு உயிரேயானாலும், மற்ற ஜீவன்களுக்குக் குறிப்பிடும் சரீரதத்துவம், ஜீவ தத்துவம் போலவே மனிதனுக்கும் உடையது என்றாலும், பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரம் உண்டு என்று சொல்லப் படுவதனாலே தான் மனிதன் மற்ற ஜீவப்பிராணிகளை விட வேறுபட்ட வனாகவும் மேலானவனாகவும் உலக வழக்கில் மதிக்கப்படுகிறான்.

இப்படி மதிக்கப்படுவது சரியா தவறா என்பது விவகாரத் திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனா யிருப்பதன் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் தரப்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூடச் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், இதைச் சரியென்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்குச் சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியட்சத்தில் அப்படித்தான் காணப்படு கின்றது.

ஆகவே, இதற்கு ஏதாவது காரணம் இருந்தாக வேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தா மலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷ யங்களை மனிதன் ஏற்றுக் கொள்வதாலும், மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது.

மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக் கொண்டு, மனித ஜென்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது ‘சாகரம்’, ‘துக்கம்’ என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.

இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத் துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகின்றன என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கு பகுத்தறிவைச் சுதந்திரத்தோடும், துணி வோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.

இந்தப்படி சுதந்திரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதைப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக் கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றாலும் அதிலிருந்து விடுதலை பெற முடியாது என்று தீர்மானித்துவிடுதல் கூடாது.

இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தியும், தன்னைச் சூழ்ந்து, தனக்குள் புகுத்தப்பட்டும் இருக் கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கி விட்டுத் தனியாகச் சுதந்திர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப் படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக் கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.

இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில் முக்கிய மானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன் ஜென்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களேயாகும்.

இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற் கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு சந்தோஷமும், திருப்தியும், அடையும் பேற்றை எவனும் அடையவே முடியாது. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும், திருப்தியுமான வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத் தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.

இந்த நிலைமையையும், தன்மை யையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே “பகுத்தறிவு” உலகில் உலவி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

(‘பகுத்தறிவு’ மே மாத இதழ் 1, 1935)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *