குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கு முழு உடல் பரிசோதனை

2 Min Read

சென்னை, ஜூலை 3  குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்களைப் பாராட்டி கவுரவிப்பதுடன், அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு சோதனைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆகியவை தொடர்ந்து குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி திட்டத் தொகுப்பை அறிவித்துள்ளன.

குருதிக் கொடை வழங்கு பவர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் 2026-ஆம் ஆண்டு நடை பெற்ற உலக குருதிக் கொடையாளர் நாள் விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், தலைமை இயக்க அதிகாரிகள் நீலேஷ் மற்றும் பத்மநாபன் ஆகியோர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, புதிய எம்ஜிஎம் குருதிக் கொடை அட்டையின் மாதிரியையும் வெளி யிட்டனர்.

‘மனிதத்தின் ஒரு துளி! குருதியை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) மய்யக் கருத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், பிரபல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

குறித்த கால அளவுகளில், பாதுகாப்பாக குருதிக் கொடை வழங்க  வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது. மேலும், தொண்டு நிறுவனங்கள், முதன்முறை குருதி  கொடை வழங்கியவர்கள் மற்றும் தொடர்ந்து வழங்கும்  கொடையாளர்கள் வரை அதன்  மூலம் சமூக நலனுக்காகச் சிறப்பாக பங்களித்தவர்களை எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் கவுரவித்தது.

கொடையாளர்களுக்கும், மருத்துவமனைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும், இணையத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும் வசதியாக மருத்துவமனையின் இணையதளத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கலை நிகழ்ச்சிகள் மூலம் பாதுகாப்பான குருதிக் கொடை மீதான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எம்ஜிஎம் ஹெல்த்கேரின் குருதி மாற்று மருத்துவத் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆர்.ஏ.சண்முகப்பிரியா, “அவசர காலங்களில் மட்டும் குருதிக் கொடை செய்வதற்குப் பதிலாக, தொடர்ந்து குறித்த கால இடைவெளிகளில், தன்னிச்சையாக குருதிக் கொடை செய்யும் பழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவது அவசியம்” என வலியுறுத்தினார்.

எம்ஜிஎம் குழும மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கே.ஆர். பால கிருஷ்ணன், டாக்டர் எம்.ஏ.ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *