ஆளுநர் அர்லேகருக்கு ‘வைகை’மீது திடீர் அக்கறை ஏன்?

2 Min Read

ஆளுநர் அர்லேகருக்குவைகைமீது திடீர் அக்கறை ஏன்? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய பொறுப்பு ஆளுநரான அர்லேகர் அவர்கள் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘வைகை நதியை மீட்கும் பொறுப்பை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். யாரும் முன்னெடுக்கவில்லையானால் ​லோக் பவன் தலைமை தாங்கி, (அதாவது பழைய ராஜ் பவன் – ஆளுநர்  இல்லம்) முன்னின்று நடத்தும்’’ என்று அவர் கூறியிருப்பது, ​ஆழம் பார்க்கக்கூடிய ஒரு வேலை.

எதிர்க்கட்சித் தலைவர்
உதயநிதி ஸ்டாலினும் சுட்டிக்காட்டினார்!

தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய, அதன் அதிகா ரத்திற்குட்பட்ட ஒன்றை, ஆளுநர் திடீரென்று இப்படிச் சொல்வது நமக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி யதைப் போல, உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இதனைச் சுட்டிக்காட்டினார்.

​அதனுடைய விளைவு இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களும், அமைச்சர் வன்னியரசு அவர்களும் ​தெளிவாகவே, ‘‘ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் அது பற்றிக் கிடையாது. அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’’ என்று சொல்லி, மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

​எனவே, ஆளுநர், ‘ஏதோ இவர்கள் நமக்குச் சாதகமாக இருக்கிறார்கள், தலையாட்டுவார்கள்’ என்று தவறாக நினைத்துக் கொண்டு, அந்த வகையில் தான் இந்த ஆழம்பார்க்கும் முயற்சியை செய்துள்ளார் போலும்.

வைகையின் மீது என்ன திடீர் அக்கறை?

அவருக்குத் திடீரென்று வைகையின் மீது என்ன அவ்வளவு பெரிய அக்கறை வரவேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. அப்படியே வந்தாலும் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

‘தன்னுடைய ஆட்சி நடக்கிறது என்ற மாயையில்’ இருக்கிறாரா ஆளுநர்?

​ஒன்றிய அரசுக்குச் சொல்லி ஏராளமான நிதியை ஒதுக்கித் தாருங்கள். அதன் மூலமாகச் செய்யலாம் என்று சொல்லியிருக்கலாம். அல்லது அந்த மதுரையின் மீது அக்கறை இருந்தால், பக்கத்திலேயே இருக்கக்கூடிய, நீண்ட நாளாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி (எய்ம்ஸ்) இருக்கிறது அல்லவா, அந்த மருத்துவக் கல்லூரியை விரைந்து கட்டச் சொல்லி இருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சுட்டிக்காட்டி இருப்பதன்மூலம் தன்னுடைய ஆட்சி நடக்கிறது என்ற மாயையில் இருக்கிறாரா?

​அல்லது இப்படிச் சொன்னால் உடனடியாக மற்றவர்களும் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று கருதுகிறாரா? என்று புரியவில்லை. என்ன இருந்தாலும் இந்த ஆட்சி, உடனடியாக இதில் எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்களோ, அதே போலத்தான் மற்ற பிரச்சினைகளிலும் விழிப்போடு இருக்க வேண்டும். உறவுக்குக் கை கொடுப்பது என்ற சாக்கில் உரிமைகளைப் பலி கொடுக்கக் கூடாது.

எப்போதும் தமிழ்நாடு அரசு
விழிப்போடு இருக்க வேண்டும்!

​பலி கொடுக்கக்கூடிய வாய்ப்பு வரும் என்று கருதி, அவர்கள் ஒத்திகை பார்க்கும் நேரத்தில், எப்போதும் தமிழ்நாடு அரசு இதில் விழிப்போடு இருக்க வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை          

3.7.2026 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *