அக்கம் பக்கம்
‘இதென்ன புது தலைவலி?’
‘மக்கள் விழிப்புணர்வோடு இருக்கும் இந்த காலத்தில், இவர் இப்படி செய்யலாமா…’ என, மத்தியபிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரபுராம் சவுத்ரி பற்றி, அவரது கட்சியினரே கடுப்புடன் பேசுகின்றனர்.
இந்த மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தற்போது, மத்திய அமைச்சராக உள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த ஜோதி ராதித்யா சிந்தியா வின் தந்தை மாதவ்ராவ் சிந்தியா; காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச் சராக இருந்தவர். இவர், விமான விபத்தில் இறந்தார். இந்நிலையில்,
தன் தந்தையின் பிறந்த நாளையொட்டி சமீபத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார், ஜோதிராதித்யா சிந்தியா. இதில், பங்கேற்பதற்காக போபால் நகரில் இருந்து புறப்பட்டார், பிரபுராம் சவுத்ரி. கடைசி நேரத்தில், அவரது ஷூவை காணவில்லை. டென்ஷனான அவர், ஷூவை தேடிப் பிடிக்கும்படி, தன் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். கடைசி வரை ஷூவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கட்சி நிர்வாகி ஒருவரின் செருப்பை வாங்கி அணிந்து, நிகழ்ச்சிக்கு சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘ஷூவை தேடும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட அமைச்சர்…’ என, சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சி யினர் கிண்டலடித்தனர்.
இதைக் கேள்விப்பட்ட பா.ஜ., தலைவர்கள், ‘தேர் தல் நெருங்கும் நேரத்தில், இவர் நமக்கு புது தலைவலியை ஏற்படுத்துகிறாரே…’ என, புலம்புகின்றனர்.
‘தினமலர்’ – 19.3.2023