சேலம், ஜூன் 24– சேலத்தில் 5 மாதங்களில் 29 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட 928 குழந்தைகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அலுவலர் கூறினார்.
கள ஆய்வு
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்ட ரீதியாக குழந்தைகளை தத்து எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிறீமுரளி கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க தொழிலாளர் நலத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு நடத்தப்பட்டு வரப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குழந்தை உதவி மய்யம் மூலம் குழந்தைகளுக்கு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளி யேறிய குழந்தைகள், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட 928 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
குழந்தைகள் பாலியல் தொந்தரவில் இருந்து தற்காத்து கொள்ள கடந்த 3 மாதத்தில் 12 ஆயிரத்து 149 குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
