தொண்ணூற்று மூன்று வயதிலும் தொய்வில்லாமல் பெரியார் பணியாற்றும் தமிழர் தலைவர் அவர்களின் ஆணைக் கேற்ப முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி, ஜூன் 20- திராவிடர் கழகத்தின் சார்பாக திராவிடர் எழுச்சி நாளாக 103 கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க  திருச்சி நவல்பட்டு காவலர் குடியிருப்பின் அருகே ஜூன் 10 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருவெறும்பூர் ஒன்றிய கழக தலைவர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்று உரையாற்றினார். பெல் ம.ஆறுமுகம்  தலைமையேற்று நிகழ்வினை ஒருங்கிணைத்தார். திராவிட தொழிலாளர் கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திருச்சி மாவட்டத்தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,  மாவட்ட செயலாளர் மகாமணி, மாவட்ட மகளி ரணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாநில மகளிர் பாசறை துணைச்செயலாளர் க.அம்பிகா, மாவட்ட மகளிர் பாசறைத்தலைவர் ரூபியா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ம.சங்கிலிமுத்து, முன்னாள் ஆணையர் கி.நாராயணசாமி, சு.சாமந்தன் மு.இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்டோ பொன்னுசாமி  கலைஞரின் சிறப்புகளை எடுத்துப் பேசினார். நிகழ்ச்சியில் புனித வளனார் கல்லூரிப் பேராசிரியர் திருமலை நெடுஞ்செழியன்  கலைஞரின் ஆளுமைகளை எடுத்து ரைத்தார்.

திராவிட முன்னேற்றக்கழக திரு வெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.கங்காதரன் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தாய்க்கழகத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்;.  திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் க.கயல்விழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் பொறியாளர் தேவ.நர்மதா  சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். ஆட்சி சிம்மாசனத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் இதய சிம்மாசனத்தில் எப்பொழுதும் வீற்றிருப் பவர்தான் கலைஞர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர்  கலைஞரைப்பற்றிக் கூறுவார்கள். கலைஞர் பெரியார் திடலைப்பற்றிக் கூறுகின்ற பொழுது ‘கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கின்றபொழுது பாம்பின் விசத்தால் தீண்டப்பட்ட கீரியானது மூலிகைக்ள் அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்று அந்த மூலிகையிலே படுத்துப் புரண்டால் அந்த விஷமெல்லாம் நீங்கி விடுமாம். அதுபோல பார்ப்பன நச்சரவங்களால் தீண்டப்படுகின்ற பொழுதெல்லாம் அந்த நச்சு நீங்குவதற்கான அந்த மூலிகைகள் நிறைந்த இடம்தான் பெரியார் திடல். இங்கு வந்தால் என்மீது படர்ந்துள்ள அந்த விஷமெல்லாம் நீங்கிவிடும். அதற்காகத்தான் நான் பெரியார் திடல் வருகிறேன்’ என்று சொல்வாரர்கள். அதனால்தான் திராவிடர் கழகம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறது.

14 வயதில் திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடியைப் பிடித்துக் கொண்டு “ஓடிவந்த ஹிந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழைநாடு இதுவல்லவே” என்று மாணவப் பருவத்திலேயே போர்க் குரல் எழுப்பியவர் கலைஞர். அதன் காரணமாகத்தான் ஹிந்தி என்கிற ஆரிய வடவர் ஆதிக்கமொழி தமிழ்நாட்டில் இன்னும் நுழைய முடியாமல் தவிக்கிறது. தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டில் காவல்துறையில் பெண்களைச் சேர்க்க வேண்டும் என்று போட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் 1973இல் தமிழ்நாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் பெண்களுக்கு பரம்பரை சொத்தில் ஆண்களைப் போலவே உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றியர் கலைஞர் என்பதனை தேவ.நர்மதா சுட்டிக்காட்டினார்.

அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்கு உயிர் கொடுத்தவர் கலைஞர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டுதான் தீர்ப்பளித்தது. ஆனால் அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுக்கு திருநங்கை என்ற மரியாதையான பெயரைக் கொடுத்து அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தவர் கலைஞர். ஆனால் அந்த திருநங்கைகளில் ஒருவர் கலைஞரை இழிவாகப் பேசியிருப்பது வேதனையளிக்கிறது என்று செய்தியைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

தற்பொழுது இதழியல் துறையில் தான் உயர்படிப்பு படித்ததைச் சுட்டிக் காட்டிப் பேசிய நர்மதா தன்னுடன் ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஒரு மாணவி படித்ததாகவும், அதற்கு கலைஞர் மலைப்பிரதேசங்களில் உண்டு உறைவிடப்பள்ளிகளைத் துவக்கியதே காரணம். அதனால்தான் இன்று மலைவாழ் பழங்குடியினரும் உயர்ந்த இடத்தை அடைய முடிகிறது என்பதைப் பெருமையுடன் எடுத்துப் பேசினார். அத்துடன் அடுக்கிய மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கக் கூடிய அருந்ததியினத்தவர்களுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்ததன் மூலம் அந்த சமுதாயத்தில் இன்றைக்குப் பல மருத்துவர்களும் பொறியாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பதைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டிப் பேசினார்.“அவரது வழியில் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எந்த உரிமையுமின்றி சமூக அங்கீகாரமின்றி உழைத்துப் போடும் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கியது என்பது மாபெரும் சமுதாயப் புரட்சி என்பதையும் விளக்கிப் பேசினார்.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய் அரசு மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்காவிட்டாலும் மாதம் ரூ.1000 வழங்குவதை நிறுத்திவிடாதீர்கள் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் கொடுத்தார். இந்த அரசு முந்தைய அரசு செய்த நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிதான் தொடர்கிறது என்று எடுத்துச் சொல்லி திராவிடம் என்றைக்கும் தோற்றுப் போகாது. அது மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும். அப்படி அமர்கின்ற வரை தமிழர் தலைவர் வழிகாட்டுதலோடு நாம் ஓயாது உழைப்போம் என்று பேசினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திமுகவின் ஒன்றியச் செயலாளர் கங்காதரன் நான் இதற்கு முன்பு திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனியின் உரையைப் பல முறை கேட்டிருக்கிறேன். தற்பொழுதுதான் பொறியாளர் நர்மதாவின் உரையைக் கேட்கிறேன். இவரும் மதிவதனியைப் போலவே சிறப்பாக உரையாற்றியுள்ளார் என்று தனது மகிழ்ச்சியினையும் வாழ்த்துதலையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளருடன் ஏராளமான திமுகவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

திமுக கிளைச் செயலாளர்கள் முருகேசன், மோகன், ஆனந்த், சின்னப்ப ராஜ், பெரியசாமி, தமிழ்வாணன், சமத் துவபுரம் முனியாண்டி சுவிக்கின்ராஜ் சிவலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகர விடுதலை வாசகர் வட்டத்தலைவர் ஏ.வி.எம். குண சேகரன், காட்டூர் ராசேந்திரன், பாலகங்கா தரன், ஜெயில்பேட்டை குணா, துப்பாக்கித் தொழிற்சாலை கருணாநிதி, பால்ராஜ், தி.அன்பழகன், பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்த ஆண்டிராஜ், அசோக்குமார், மகளிரணியைச் சேர்ந்த புனிதா, நிர்மலா, ரமணி, கீதா, பெ.கணேசன், முருகானந்தம், செம்மல், தமிழ்ச்செங்கோ, தமிழ்ச்செல்வி, அசோக், சர்மிளா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வாசகர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மூத்த விடுதலை வாசகர் ஆணையர் கி.நாராயணசாமிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. அறிவுச்சுடர் வலைக்காட்சியின் சார்பாக பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த அழகிரிசாமி நர்மதாவின் உரை முழுவதையும் வலைக்காட்சியில் ஒளிபரப்பும் வகையில் பதிவு செய்தார்.

இப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் 15 பேருக்கு தமிழ்ச்சுடரின் துணைவியாரின் பிறந்தநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கப்பட்டது. குழந்தை ஈகவரசன்  பெரியார் குறித்த பாடல்களையும், தமிழிசைப்பாடல்களையும் பாடினார். காவலர் குடியிருப்பைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *