சென்னை, ஜூன் 3- எஸ்டிபிஅய் கட்சி மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது:
இதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி), தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை ஒன்றிய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணை குறைத்து, முதலில் தமிழ்நாட்டு மருத்துவர்களை கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளி மாநிலத்தவருக்கு செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழ்நாட்டின் உரிமையை அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
