இதனால் ராகுல் தகுதி உயருமே தவிர, வீழாது!
சட்டப்போராட்டம், மக்கள் போராட்டம்தான் சரியான பரிகாரம்!
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்திக்கு ஈராண்டு தண்டனையும், அதனையொட்டி எம்.பி., பதவி பறிப்பும் – அரசியலில் அவரை எதிர் கொள்ள முடியாதவர்களின் செயல்பாடே! இதனால் ராகுலின் தகுதி உயருமே தவிர, வீழாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சட்ட விளக்க அறிக்கை வருமாறு:
2019 இல் ராகுல் காந்தி – தேர்தல் பிரச்சாரத்தின்போது கருநாடகா மாநிலம் கோலாரில் பேசிய ஒரு பேச்சுக்கு எதிராக குஜராத்தில் உள்ள சூரத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வும், மேனாள் அமைச்சருமான பர்னேஷ் மோடி என்பவர் கிரிமினல் அவதூறு (Criminal Defamation) வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.
தன்னையும், தனது வகுப்பார்களான மோடிகளையும் இந்தக் கருத்து வெகுவாக அவதூறு செய்கிறது என்பதே வழக்கில் முக்கிய குற்றச்சாற்று!
ராகுல் பேசியது யாரையும் தனிப்பட்ட முறையில் குறித்துப் பேசப்பட்டதல்ல!
தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் பேசியது ஒருவகை பொத்தாம் பொதுவான நகைச்சுவைப் பேச்சு, அவ்வளவுதான்!
‘‘ஏன் அனைத்துத் திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது” என்று பேசினார்.
‘‘கடன் மோசடி வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு, வெளி நாடுகளுக்குத் தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி.
அய்.பி.எல். எனப்படும் ‘இந்தியன் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்து தப்பிய தொழில திபர் லலித் மோடி ஆகியோருடன் ஒப்பிட்டு இப்படி ‘மோடி’ என்ற பெயருடைய சிலர் என்று குறிப்பிட்டார்.
இதுபற்றிய வழக்கு, அதுவும் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த கிரிமினல் அவதூறு வழக்கில், அச்சட்டத் தின்படி உள்ள அதிகபட்ச தண்டனை அந்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்த நீதிமன்றம் (மாவட்ட நீதிபதி அளவில்) அளித்ததோடு, பாதிக்கப்படும் ராகுல் காந்தி இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்துகொள்ள வசதியளிக்கும் வகையில், அந்நீதிபதி அத்தீர்ப்பின் செயலாக்கத்தை 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்து, மேல்முறையீடு செய்துகொள்ளும் உரிமையை யும், வாய்ப்பினையும் வழங்கியுள்ளார்.
ராகுலை அரசியலில் எதிர்க்க முடியாதவர்களின் செயல்பாடு இது!
உடனே அந்தத் தீர்ப்பு எழுதிய மை கூட காயாத நிலையில், அவசர அவசரமாக ராகுல் காந்தியின் எம்.பி., பதவி நீக்கம் உடனே அறிவிக்கப்படுகிறது மக்களவை செயலகத்தால்!
இதில் காட்டப்பட்ட அவசரம் எதைக் காட்டுகிறது?
ராகுல் காந்தியை அரசியலில் எதிர்க்க முடியாத அரசியல் எதிரிகளான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகை யறாவினர் இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கியிருக் கிறார்களோ என்ற பரவலான அய்யத்தை நாட்டு மக்களுக்கு உருவாக்கத்தானே செய்யும்?
தீர்ப்பினை எதிர்த்து அவர் (அப்பீல்) மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் தந்து அதற்குக்கூட காத்திருக்காமல், இது ஒன்றும் கடைசி நீதிமன்றமல்ல – இறுதித் தீர்ப்பும் அல்ல!
இரண்டாவது, அது தாண்டி, உயர்நீதிமன்றம், அதற்குமேல் உச்சநீதிமன்றம் என மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகள் வழங்கும் நீதிமன்றங்களுக்குச் செல்லக்கூட, அவற்றின் தீர்ப்புக்குக்கூட காத்திருக்க மனமின்றி, இப்படி அவசர அவசரம் – அதிதீவிர அவசரம் காட்டி யது – அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் திட்டம்தானே என்ற எண்ணம்தானே எவருக்கும் தோன்றும்?
அரசியலில் ராகுலை ‘அஞ்ஞானவாசம்’ ஆக்கும் செயல்தானே இது?
இரண்டாண்டு தண்டனை – 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று ஆக 8 ஆண்டுகளுக்கு அவரை அரசியல் ‘அஞ்ஞானவாசம்’ செய்யத் திட்டமிட்ட ஏற்பாடு என்றுதானே நடுநிலையாளர்கள் – பொது வானவர்கள் கருதுவார்கள்?
இ.பி.கோ.499 ஆவது பிரிவின்படி இதற்குமுன் பல கிரிமினல் அவதூறு (Defamation) வழக்குகளில், எந்த ஒரு பிரிவினரையும் பொத்தாம் பொதுவில் ஒருவர் குறிப்பிட்டால், அது அவதூறு ஆகாது; குறிப்பிட்ட நபர், தனி நபர் அவரைச் சுட்டிக்காட்டும் அடையாளம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர் வழக்கு சட்டப்படி சரியானதாகும் – பொதுவில் கூறினால் சரியானதாக முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!
உதாரணமாக, ‘எழுத்தாளர்கள் எல்லாம் மோசடி யாளர்கள்’ என்று எழுதினால், அதற்காக தனியே நான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அவதூறு வழக்குப் போட முடியாது; குறிப்பிட்டவரைக் குறித்தால் மட்டுமே அந்த வழக்கு ஏற்பதற்குரிய தகுதியே உடையதாகும். மற்றபடி வழக்குக்குரியதாகாது என்று பல தீர்ப்புகள் உண்டு – முன்னுதாரணங்கள் உண்டு.
அவதூறு கிரிமினலாகுமா? என்ற சர்ச்சை ஏற்கெனவே இருந்து வருகிறது!
அண்மைக்கால சட்டத் திருத்தப்படி பலரும் முன்வைக்கும் இந்த அவதூறு கிரிமினல் குற்றமாக்கப் படுவதையே நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும்கூட சட்ட வல்லுநர்கள் – ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும் கருத்தாகவும் உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மையாகும்!
எனவே, ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட கொடு மையை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டியது – ஜனநாயகக் காவலர்களின் முக்கிய கடமையாகும்!
சட்டப் போராட்டம்,
மக்கள் போராட்டம் தேவை!
சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் ஆகிய இரண்டு முனைகள்மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்; கருத்துரிமை பறிபோகக்கூடாது; அரசியல் பழிவாங்கும் படலத்தின் பீடமாகிவிடக் கூடாது!
சட்டமுன் உதாரணம் உண்டு. தகுதி நீக்கம் செய்ததை நாடாளுமன்ற செயலகம் நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிடவேண்டும்.
இதற்கு முன்மாதிரி (Precedents) உண்டு.
ஏற்கெனவே ஒரு சம்பவம்; லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி., முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கவரட்டி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு அளித்தது!
அத்தீர்ப்பை அடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டது.
உடனே அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், கேரள உயர்நீதிமன்றம் தண் டனையை நிறுத்தி வைத்ததுடன், செஷன் கோர்ட் தீர்ப்புக்கும் தடை விதித்தது.
நீதிமன்றத் தீர்ப்பு ராகுலுக்கு கிடைக்க, நாடாளுமன்றம் இதில் ஜனநாயக மாண்பினைக் காக்க முன்வரவேண்டும்.
ராகுல் தகுதி உயருமே தவிர, வீழாது!
இம்மாதிரி நடவடிக்கைகளால் ராகுல் காந்தியின் தகுதி உயருமே தவிர, கீழே வீழாது!
அதனால் பெருமையும் மேலும் வலிமையும், ராகுலுக்குக் கூடும். அவர் மேலும் பெருந்தலைவராக, ஜனநாயகக் காவலராகவே உலகத்தாருக்குத் தெரிவார்.
இதைப் புரிந்து செயல்படுவீர்!
ஆத்திரம் அறிவுக்கு எப்போதுமே விரோதி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.3.2023