சென்னை, மே 28- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை விட்டு விலகியதில் சட்டவிரோத அரசியல் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி, அதுகுறித்து சிபிஅய் விசாரணை நடத்தக் கோரியும், சம்பந்தப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரியும் தேர்தல் ஆணையம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மதுரையைச் சேர்ந்த வழக் குரைஞர் செல்வகுமார், சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொறடா உத்தரவு மீறல்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தற்போது சட்டப் பேரவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளன.
இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவி களை விட்டு விலகியுள்ளனர். இவர்களது பதவி விலகலை சட்டப் பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்ட நிலையில், இவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
கோரிக்கை: இந்த பதவி விலகல்கள் திட்டமிட்ட அரசியல் குதிரை பேரத்தை நிரூபிப்பதால், சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே பதவி விலகிய உறுப்பினர்கள், அச்சட்டமன்றத்தின் மீதமுள்ள காலம் முழுவதோ அல்லது குறைந்தது 5 ஆண்டுகளோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் அவசர சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இதேபோல வழக்குரைஞர் செல்வகுமார், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கும் ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், கொறடா உத்தரவை மீறி த.வெ.க.வுக்கு வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற பதவி விலகலால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணமும், அரசு அதிகாரிகளின் உழைப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 தொகுதிகளிலும் மீண்டும் தேர்தல் நடத்த அரசுக்கு ஏற்படும் செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட அந்த நான்கு நபர்களிடமிருந்தே வசூல் செய்ய வேண்டும். அத்துடன், அவர்கள் இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலிலும் போட்டி யிட முடியாதவாறு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.
இந்த மனுவின் நகல்கள் இந்திய தேர்தல் ஆணையர், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற சட்டப் பேரவைத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளன.
