நாட்டு அரசியல் தற்போது எல்லை மீறிய தட்பவெப்ப அனல் அலைகளைத் தாண்டியதாக உள்ளது; அந்த நச்சுக் காற்றிலிருந்து சற்று இளைப்பாறிட, மாற்றம் தேடி, மகிழ்ச்சி அடையலாம் என்று கருதி, வள்ளுவர் குறளிடம் என்னை ஒப்படைத்து – குறளைப் புரட்டினேன்!
நட்பு என்பதை எத்தனை எத்தனைக் கோணங்களில் திருவள்ளுவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டி ‘பாடம்’ எடுக்கிறார் என்பதைப் படித்தும், சிந்தித்தும் பார்த்தபோதுகூட, அதில் அறம் பிறழ்ந்த அரசியல், பதவிக்காக எந்தக் கீழ்நிலைக்கும் செல்லும் அருவெறுப்பு அரசியல் ஒருபுறம்! தோல்வியைத் தாங்க முடியாத அரசியல் ஒருபுறம்!
ஜனநாயகத் தேர்தலில் தோல்வியும் ஒரு தவிர்க்க முடியாத பகுதி என்று பெருந்தன்மையோடும், ‘நனி நாகரிகத்துடன் நடந்து, ஒரு நன்னம்பிக்கையை ஏற்படுத்தும் அரசியல் ஒருபுறம்.
நன்றி கெட்ட நயவஞ்சகர்கள் கூடாரமான பாசறை – ‘‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு’’ என்ற பழமொழிப்படி, பொழுது விடியும் வரைகூட காத்திருக்காமல் அதற்கு முன்பே, சரணம், சரணம், மகா சரணம்… பாடி, மக்களின் இதயச் சிம்மாசனத்தின் இடத்தை இழந்து, (அற்ப) பதவிச் சிம்மாசனப் பவிசுக்கு நீண்டகாலமாகத் தொங்கவிட்ட நாக்கை; ஏதோ ஒரு பதவி பெற்றாலும் மடக்கத் தெரியாத மஹா ‘தேசியர்கள்’!
ஏற்கெனவே பைத்தியக்கார உளறலுக்காகவே வாய்த்த வாடகை ஒலிபெருக்கிகள், 234 தொகுதிகளிலும் சீர்மையோடு ‘டெபாசிட்’ இழந்து ‘‘கத்தி கத்தி சாவுதான் எனக்குப் பரிசு’’ என்று புலம்புகின்றன. பைத்தியக்காரர்களுக்கு மேலும் ‘கள்’ளையும் ஊற்றி மீண்டும் ‘வீர வஜனம்’, ‘கர்ஜிப்புகள்’ என்ற நகைச்சுவைக் காட்சி வேறு! அந்த கர்ஜனைக்காக ஜாதி அடிப்படையில் பெரும் முதலாளி தொழிலதிபர்களிடம் பெரும் ‘நன்குடை’ நிழல்… இத்தியாதி பெற்றும் பாடம் கற்றுக் கொள்ளாமல் விளம்பரம் கூடுதலாகக் கிடைத்தால்போதும் – என்ற வீம்பு கலந்த வீராப்பு வெற்றுக் கூச்சல்! இவற்றைக் கண்டும் கேட்டுக் கொண்டும் உள்ள நிலையில் வள்ளுவர் நட்பைப் பற்றி எத்தனை எத்தனை தலைப்புகளில் மனிதர்களுக்கு வகுப்பு நடத்தி, வாழ்வளிக்க வந்தும் அவர் உள்ளத்தின் அறிவுசால் ஆழம் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
நட்பு,
நட்பாராய்தல்
தீ நட்பு
கூடா நட்பு
சிற்றினம் சேராமை
பெரியாரைத் துணைகோடல்
பெரியாரைப் பிழையாமை
என்ற அதிகாரத்தில் வரும் குறள் மணிகள் எல்லாம் நம் அறிவை அகண்டமாக்கி மண்டைச் சுரப்புக்கு வழிகாட்டிக் கூடியவை.
‘நட்பு’ என்ற தலைப்பில், ஒரு குறள்
‘‘நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு’’
நிலவில் எப்படி நிறைமதி (வளர்பிறை), குறைமதி என்று (தேய்பிறை) வருகிறதோ அதைப் போன்றது அறிவுடையோர் நட்பும், அறிவில்லாதவர்கள் நட்பும் என்று எச்சரிக்கை மணியடிக்கிறார் வள்ளுவர்!
மேற்கண்ட குறளின் பொருள் இதோ;
அறிவுடையோருடன் கொள்ளும் நட்பு, பிறைமதி வளருவதைப்போன்று, அன்றாடம் வளரக்கூடிய தன்மையை (நிறைமதி) உடைய தாகும்; அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்பு முழுமதி குறைவதைப்போல, அன்றாடம் குறையக்கூடிய தன்மையை (குறைமதி) உடையதாகும்.
அன்றாட வாழ்வில் அதுவும் உங்கள் வாழ்வின் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விருப்பு, வெறுப்பின்றி அலசி ஆராய்ந்து உய்த்து உணர்ந்து பாருங்கள்! அந்த உண்மையின் ஆழங்கால் பற்றி உங்களுக்குப் புரியும்!!
(வளரும்)
