செய்திச் சிதறல்கள்

நிலவில் நேரடியாகத் தரையிறங்கும் முயற்சியை மாற்றியது நாசா!

வாசிங்டன், மே 22 2028 இல் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நாசாவின் லட்சியத் திட்டம், தற்போது தனியாரால் உருவாக்கப்பட்ட இரண்டு நிலவுத் தரையிறங்கிகளான ஸ்பேஸ் எக்ஸின் “ஸ்டார்ஷிப் ஹியூமன் லேண்டிங் சிஸ்டம்” மற்றும் “ப்ளூ ஆரிஜினின் ப்ளூ மூன் லேண்டர்” ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது.

இந்த இரண்டு விண்கலங்களும் முன்னேற்றம் கண்டு வந்தாலும், விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வ தற்கு முன்பு, ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் சோதனை மைல்கற்களை இன்னும் கடக்க வேண்டியுள்ளது.

நிலவுத் தரையிறங்கிகள் மீதான இந்த புதிய கவனம், விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பூமிக்கு அனுப்பிய ஆர்டெமிஸ் 2 திட்டம் வெற்றி கரமாக நிறைவடைந்த சிறிது காலத்திலேயே வந்துள்ளது. அப்பல்லோ காலத்திற்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவில் தரை யிறக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆர்டெமிஸ் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாசா இப்போது தயாராகி வருகிறது.

நாசாவின் திருத்தப்பட்ட செயல்திட்டத்தின்படி, ஆர்டெமிஸ் 3 ஆனது, நிலவில் நேரடியாகத் தரையிறங்கும் முயற்சியை மேற்கொள்வதற்குப் பதிலாக, 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புவி சுற்றுப்பாதையில் மனிதர்களுடன் சந்தித்து இணைக்கும் சோதனையை நடத்தும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்டெமிஸ் 4 விண்கலம் 2028 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முழு நிலவில் தரையிறங்குவதை தற்போது இலக்காகக் கொண்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த அணுகுமுறையின் கார ணமாக, நாசாவின் வர்த்தகக் கூட்டாளிகள் தங்களது விண்கலங்களை முக்கிய செயல்விளக்கங்களுக்குத் தயார்படுத்துவதற்கு குறைந்த நேரமே உள்ளது.

ஒரு தமிழ்ச் சொல்  கூட இல்லாத என்சிஇஆர்டி இணையதள பக்கம்!
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு
ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்

திண்டுக்கல், மே 22 – ஒன்றிய அரசின் என்சிஇஆர்டி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கோடைப் பயிற்சி முகாம் விளம்பர ஸ்டைடுகளில் ஒரு தமிழ்ச் சொல் கூட இடம்பெறாததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தமது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

என்சிஇஆர்டி (NCERT) எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் அதி காரப்பூர்வ இணையதள பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே பிரதானமாக உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய பாஷா கோடைப் பயிற்சி முகாம் (Bharatiya Bhasha Summer Camp 2026) பற்றிய ஸ்லைடுகளில் தமிழ் மொழியின் ஒரு சொல் கூட இல்லை. ஹிந்தி, சமஸ்கிருதம், அரபு உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சமக்ர சிக்ஷ அபியான் (SSA) திட்ட நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது, தமிழ் மொழியின் ஒரு சொல் கூட இல்லாமல் ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் இணையதள பக்கத்தை மாற்றி உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இந்த இணையதளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும் வகையில் உரிய மாற்றங்களை செய்திட வேண்டும்.

இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கூறியுள்ளார்.

‘ஸநாதனிகளின் ஹிந்துத்துவா பாதைகள்’ நூலை வெளியிட்டார் பினராயி விஜயன்!

கண்ணூர், மே 22 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு உறுப்பினர் பி.ஜெயராஜன் எழுதிய ‘ஸநாதனிகளின் ஹிந்துத்துவா பாதைகள்’ என்ற நூலை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஏகேஜி அரங்கில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிவகிரி தர்மசங்கம் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சுபங்கானந்த சுவாமி நூலைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ் தலைமை தாங்கினார். கே.டி.குஞ்ஞிக்கண்ணன் நூலை அறிமுகம் செய்தார். டாக்டர் வினில் பால், எம். பிரகாஷன் பேசினார். பி. ஜெயராஜன் நன்றி கூறினார்.

சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் ஹிந்துத்துவவாதிகளால் போதிக்கப்படும் ஸநாதன தர்மம் என்றால் என்ன என்பதையும், மக்களைப் பிரிக்கும் அத்தகைய கருத்துக்களை சிறீ நாராயண குரு எவ்வாறு பார்த்தார் என்பதையும் விளக்குகிறது. ஹிந்து சாஸ்திரங்களின் படி ஜாதியும், தீண்டாமையும் சரியானவை என்று ஸநாதனிகள் வாதிடுகின்றனர்.

மேலும், மறுமலர்ச்சிக் காலத் தலைவர்கள் அதற்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களையும் இந்நூல் விவாதிக்கிறது. இந்நூல், கொடுங்கல்லூர் காவு உள்பட கேரளாவின் காவு பாரம்பரியத்தையும் ஆராய்கிறது.

சிந்தா, தேசாபிமானி புத்தகக் கடைகளிலும் அமேசான் இணையதளத்திலும் ரூ.400 விலையுள்ள இந்நூல் கிடைக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *