புதுடில்லி, மே 21 சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது. உ.பி.யில் தொடர்ந்து இடைவிடாத வெப்ப அலை வீசுகிறது. நேற்றுமுன்தினம் (19.5.2026) பண்டாவில் 48.2 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெப்பநிலை பதிவானதால், உலகின் மிகவும் வெப்பமான நகரமாக அது மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி 47.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பண்டாவில் வெப்பநிலை அதிகளவாக 49.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய கலாச்சாரம்
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு துறையின் விஞ்ஞானி முகமது டேனிஷ் கூறுகையில், பந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள கடினமான கற்கள் நிறைந்த மேற்பரப்பு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. திறந்தவெளி பாறை நிலப்பரப்பு வெப்பத்தை விரைவாக உறிஞ்சி, மெதுவாக வெளியிடுகிறது. பண்டா மாவட்டத்தில் நடைபெறும் பெரிய அளவிலான மணல் கடத்தலும், ஆற்றில் நீர்வரத்து குறைந்ததுமே இதற்கு காரணமாகும் என்றார். கடும் வெப்பஅலை தாக்கம் காரணமாக உலகின் அதிக வெப்பமான நகரங்களின் பட்டியலிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியாவின் வெப்ப நகரங்கள்
உலகளவில் அதிக வெப்பம் பதிவாகும் முதல் 100 நகரங்களின் பட்டியலில் சுமார் 95 முதல் 98 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. மத்திய, மேற்கு மற்றும் வட இந்தியாவில் வீசும் கடுமையான வெப்ப அலைகளால் இத்தகைய வெப்பநிலை காணப்படுகிறது. உபி மாநிலம்,பண்டா மட்டுமில்லாமல் பதேப்பூர், எட்டாவா ஆகிய நகரங்களும் தீவிர வெப்ப அலையின் மய்யங்களாக விளங்கி 46 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளன.
அதே போல் ராஜஸ்தானின் கோட்டா, பிகானீர், ஜெய்சால்மர் போன்ற நகரங்களில் தொடர்ந்து 44 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளன.
சட்டீஸ்கரின், ராய்ப்பூர், மகாராட்டிராவின் நாக்பூர், வட இந்திய பகுதிகளான ஆக்ரா, லூதியானா ஆகிய நகரங்களும் உலகின் மிக வெப்பமான இடங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.
காரைக்கால் – பேரளம் இடையே ரயில் போக்குவரத்து
40 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் தொடங்கியது

காரைக்கால், மே 21 காரைக்கால் – பேரளம் இடையே ரயில் போக்குவரத்து சேவை 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கப் பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இதற்கான இறுதிகட்ட சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக சரக்கு ரயில் போக்குவரத்து சேவை மட்டும் நடைபெற்று வந்த நிலையில் இன்று (21.5.2026) முதல் காரைக்கால் – பேரளம் இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதனையடுத்து இன்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்த திருநள்ளாறு ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து பேரளம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு செல்கின்ற ரயிலுக்கு, காரைக்கால் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் திருநள்ளாறு பகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், 40 ஆண்டுகளுக்கு பிறகு திருநள்ளாறு பகுதியில் ரயில் வந்ததால் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் திருநள்ளாறு கோயில், நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி கிறிஸ்தவ கோயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொதுமக்கள் சிரமமின்றி போகலாம். மேலும் இந்த ரயில் போலவே திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தங்களுக்கு ரயில் சேவை வேண்டும் என்று காரைக்கால் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
