பொதுவாக வாரத்திற்கு ஒருமுறையாவது நூலகம் சென்றுவிடுவது வழக்கம். ஒரு நிகழ்வில் பேசுவதற்காக நேற்றைய நாளின் பெரும்பாலான நேரத்தை நூலகத்தில் செலவிட வேண்டியிருந்தது.
எனக்குத் தேவையான நூல்களை எடுத்துக்கொண்டு, வாசிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில்போய் வாசிக்கலாம் என்று சென்றேன். பத்து-பனிரெண்டு வயது ஆண் குழந்தைகள் நிறைய பேர் எந்த நூல்களையும் எடுக்காமல், கையில் கைப்பேசி வைத்துக்கொண்டு கேம் விளையாட்டிக்கொண்டும், காட்சிப் பதிவு பார்த்துக்கொண்டும் அங்கே அமர்ந்து இருந்தனர். நூலகத்தில் வைஃபை இணையம் இலவசம் என்பதால் அங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. இத்தனை இலட்சம் நூல்களுக்கு நடுவில் அமர்ந்து கைப்பேசியில் சுயத்தை இழக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.
அந்தச் சிறுவர்களிடம் இருந்து கவனத்தைத் திருப்பி நூல்களில் மூழ்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் யாரோ பேசுவதைப் போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அந்த சிறுவர்களுக்கு அருகில் நூலகர் அமர்ந்தார்.
“நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டார் அந்தச் சிறுவர்களிடம்.
“காட்சிப் பதிவு பாக்குறேன்” என்றார்கள் ஒருசிலர்.
“கேம் விளையாடுறேன்” என்றார்கள் இன்னும் சிலர்.
“சரி, நீங்க இவ்ளோ நேரம் காட்சிப் பதிவு பாத்தீங்கல்ல. அதுல புதுசா தெரிஞ்சிக்கிட்ட எதையாவது சொல்லுங்க” என்று கேட்டார்.
நூலகத்தை விட்டு வெளியே துரத்திடுவாரோ என்கிற பயத்தால் அச்சிறுவர்கள் பதில் சொல்லத் தொடங்கினர்.
அவர்கள் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல, பெரும்பாலும் ஃபேக் நியூசாகவே இருந்தது. அந்த ஒவ்வொன்றையும் அழகாக விளக்கினார் நூலகர்.
இறுதியாக, “சரி நாங்க காட்சிப் பதிவு பாத்து ஒன்னும் கத்துக்கல. சரி நீங்க காட்சிப் பதிவு பாக்காம என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க சொல்லுங்க பாப்போம்” என்று ஒரு சிறுவன் சொல்லிவிட்டான்.
அந்த சிறுவர்கள் எல்லோரையும் நூலகர் இப்போது வெளியே துரத்தப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல், அவர் மெதுவாக எழுந்து நின்று, குதித்து, நடித்து, ஓடி, ஆடி ஒரு கதை சொன்னார். அடுத்த அரை மணி நேரத்திற்கு அத்தனை குழந்தைகளையும் கதைசொல்லிக் கட்டிப் போட்டார் அந்த நூலகர். அந்தக் குழந்தைகளுடன் சேர்த்து நானும் கதையில் மூழ்கிப் போனேன்.
“சரி. இப்ப இந்த மாதிரி கதை உங்களுக்கும் தெரியனும்னா, இந்த நூலகத்தில் நிறைய நூல்கள் இருக்கு. அதைப் படிக்கலாம் நீங்க” என்று சொல்லிவிட்டு, அவர்களைக் கூட்டிக்கொண்டு, எந்தெந்த நூல்கள் எதைப்பற்றியெல்லாம் இருக்கு என்று காட்டினார். அதன்பிறகு அவர்கள் ஆளுக்கொரு நூலை எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினர்.
மாற்றத்தை நிகழ்த்தும் எளிய மனிதர்கள் மிக இயல்பாக எந்த விளம்பரத்தையும் தேடாமல் செய்துவிட்டுக் கடந்துவிடுகிறார்கள்.
அந்த நாள் மகிழ்வானதாக மாறியது.
– எழுத்தாளர் இ.பா.சிந்தன், பெல்ஜியம்
