ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கலாமா? இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மையும் இருக்கலாமா? – இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதான தன்மை இருக்கலாமா? – இருக்கின்ற வரையிலும், பணக்காரர்களெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுயவாழ்விற்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கலாமா? – இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும் என்பதில் அய்யமென்ன? மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்வியக்கத்தை ஒழிக்க இந்த உலகத்தில் யாராலும் முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
