சமூக நீதிக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம்
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள அமைச்சர் சாஜி செரியன் சந்தித்து, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் இணைந்து நடத்தப்படவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். வைக்கம் போராட்டம் என்பது நாடு முழுவதும் சமூக நீதிக்காக வித்திட்ட ஒரு பெரிய போராட்டமாகும். பெரும்பான் மையான உழைக்கும் மக்களை தீட்டானவர்களாக கருதிய சமூக சூழலை களைய தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட இந்த போராட்டம், நாடு தழுவிய கவ னத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியாரை சமூகப் போராளியாக இந்தியா முழு வதிலும் அடையாளம் காணவைத்த முதல் மனித உரிமை போராட்டமாகும்.
வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப் பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ கோவி லுக்குள் நுழைவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அங்குள்ள கோவிலை சுற்றியுள்ள தெருக் களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக் கூடாது என்ற அக்கிரமத்தை எதிர்த்து, தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டமாகும். இந்த போராட்டம் நடந்தபோது தந்தை பெரியார் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். அப்போது திருவனந்த புரம் என்பது ராஜாவுடைய மாநிலமாக இருந்தது என்று சொன்ன பெரியார், இந்த போராட்டத்தைப்பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். அங்கு ஈழவர் என்று ஒரு ஜாதியினர் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் நாடாரை போன்றவர்கள்தான்.
திருவனந்தபுரத்தில் ராஜாவுடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். ராஜாவுடைய பிறந்தநாளை கொண்டாடும் இடத்தில் கொட்டாரம் இருக்கும். கோர்ட்டு அங்கேதான் இருந்தது. பிறந்த நாள் கொண்டாடுகிற காலத்தில் ஈழவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் அங்கே நடக்கக்கூடாது. அப்படி
1920-களில் ராஜாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நேரத்தில் ஈழவ சமுதாயத்தை சேர்ந்த வக்கீலை உள்ளே வரக்கூடாது என்று தடை விதித்துவிட்டார்கள். அந்த வக்கீல் காங்கிரஸ் கட்சியில் பிரபலமாக இருந்தார். அவரும் தமிழ்நாட்டிலும் பிரபலமாக இருந்த ஜார்ஜ் ஜோசப் என்பவரும் இதை எதிர்த்து போராடவேண்டும், இதற்காக கொட்டாரத்துக்குள் போகவேண்டாம், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வகையில் வைக்கத்தில் நடத்துவது என்று முடிவு செய்து தினமும் ஒன்றிரண்டு பேராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்கள்.
18-ஆவது நாள் போராட்டத்தில் ஈடுபட யாரும் இல்லை. இதனால் போராட்டம் நீர்த்துப்போய்விடுமோ என்று கருதிய சூழ்நிலையில் ஜார்ஜ் ஜோசப் சிறையில் இருந்தே தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதினார். உடனடியாக தந்தை பெரியார் அங்கு சென்று தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டம் சூடுபிடித்தது. பெரியார் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதல் முறை சாதாரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண் டாவது முறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அரைக்கால் டிரவுசருடன் காலில் விலங்கிடப்பட்டு கடுமையான வேலைகளை செய்ய வைக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராஜா மறைந்து நிர்வாகத்துக்கு ராணி வந்தார். அவர் பெரியார் தொடங்கிய போராட்டத்தின் தீவிரத்தைப்பார்த்து எல்லோரும் தங்கு தடையின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்ல அனுமதித்தார். இதுதான் சமூக நீதிக்காக போடப்பட்ட வித்தாகும். அதன்பிறகு படிப்படியாக பல வெற்றிகள் கிடைத்துள்ளன. கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கான உரிமையும் கிடைத்தது. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தந்தை பெரியார் ஏற்றிவைத்த தீபத்தை இன்னும் சுடர்விட்டு பிரகாசிக்க செய்வதுதான் ஒன்றிய -மாநில அரசுகளின் கடமையாகும்.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம், 29.3.2023