இந்தியத் துணைக்கண்டத்திலே முதன் முதலாக சமுதாயப் போரில் வெற்றி கண்டவர்கள் தந்தை பெரியார் அவர்களே! முதல் களம் வைக்கம்! அதன் பொன்விழா 20.4.1975 முதல் 27.4.1975 வரை வைக்கத்திலே சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 26.4.1975 அன்று அங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டைத் துவக்கி வைக்குமாறு வந்த அழைப்பை ஏற்று கழகத் தலைவர் அன்னையார் அவர்களும் பொதுச் செயலாளராகிய நானும் 25ஆம் தேதி பிற்பகலே வைக்கம் சென்றடைந்தோம்.
நிகழ்ச்சி வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட இடத்தில் ‘சத்தியாகிரகம் பொன்விழாக் கொடி’ கோயில் எதிரில் நாட்டப்பட்டிருந்தது! வைக்கம் சத்தியாகிரகம் நினைவாக, கேரள எஸ்.என்.டி.பி.யோகம் அமைப்பினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் வைக்கம் சத்தியாகிரகம் ஆசிரமப் பள்ளி மைதானத்தில் போடப்பட்டிருந்த பெரிய பந்தலில் விழா 20ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
சில நாள்களுக்கு முன்பு வைக்கத்திற்கு பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஹெலிகாப்டரில் வந்திருந்தார்கள். பொன்விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து அவர் ஆற்றிய சம்பிரதாய உரையில் தந்தை பெரியார் பெயரைக்கூட குறிப்பிடாமல் பொதுப்படையாகப் பேசிச் சென்றதோடு, ‘பொருளாதார சுதந்திரம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றே பேசியது’ வேதனையான வேடிக்கையாகும்! பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் அழைத்து கருத்துரைகள், சிறப்புரைகள் எல்லாம் நடத்தப்பெற்றன. அங்கு நடந்த மகளிர் கருத்தரங்கத் (‘வனிதா சம்மேளன’)தில் என்னையும் பேச அழைத்து நானும் சிறிதுநேரம் பெரியாரும் – கழகமும் மேற்கொண்ட பெண்ணுரிமைப் போராட்டங்களை விளக்கினேன்!
25ஆம் தேதி, 26ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் வைக்கம் நகர மக்கள் – பல்வேறு கட்சி அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களும், நண்பர்களும் தாய்மார்களும் ஓய்வு விடுதியில் தங்கியிருந்த தலைவர் அன்னையார் அவர்களைக் கண்டு மிகுந்த அன்போடு உரையாடி தந்தையின் பெருமையினை மிகுந்த நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்தனர்.
குறிப்பிட்ட நிகழ்ச்சியிலே அம்மா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்; நானும் உரை நிகழ்த்தினேன். தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றலாக அன்னையார் வந்திருக்கிறார்கள் என்ற உணர்வில் விழாக் குழுவினர்கள் அன்னையாரை அன்போடு வரவேற்று உபசரித்து மிகுந்த நன்றி உணர்வோடு கூடிய மரியாதையைக் காட்டினர். கழகத் தலைவர் அவர்கள் அங்கு தங்கிய இரு நாட்களிலும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் எல்லாம் வந்து அன்னையாரிடம் உரையாடி, நமது இயக்க நடவடிக்கைகளை எல்லாம் கேட்டறிந்தனர். தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டத்தால்தான் தாங்கள் எல்லாம் மனிதரானோம் என்ற நன்றி உணர்வு அவர்களிடையே ததும்பி நின்றது.
முன்னதாகவே நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஜார்ஜ்ஜோசப் அவர்களது மகள் திருமதி மாயா தாமஸ் அவர்களும், கேரளா வீட்டுவசதி வாரியத் தலைவரும் வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகருமான திருமதி ரோசம்மா பொன்னூஸ் அவர்களும், பிரபல சமூக சேவகியான திருமதி ரோசம்மா சாக்கோ ஆகியோரும் கழகத் தலைவர் அன்னையாரைக் கண்டு மரியாதை தெரிவித்து மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
(அய்யாவின் அடிச்சுவட்டில், தொகுதி 4)