தஞ்சை, ஏப்ரல்.29 பழகு முகாமில் முதல் நாள் மாலையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பிஞ்சுகளுக்கு வகுப்பு எடுத்தார். அதில், “தீபாவளிப் பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் இருக்கின்றன?’’ என்றொரு கேள்வி கேட்டார்.

பெரியார் பிஞ்சுகளை மேடைக்கு வரச் சொல்லி, அதற்கான பதில்களை சொல்லச் சொன்னார். பெரியார் பிஞ்சுகளும் ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து நடத்தும், ‘பழகு முகாம்’ 27.04.2026 முதல் 1.05.2026 வரை, 5 நாட்களாக தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள, கட்டட எழிற்கலை வளாகத்தில், முதல் தளத்தில் முற்றிலும் குளுமை வசதி செய்யப்பட்டுள்ள, ‘லீ கார்பூசியர்’ அரங்கில் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, பெரியார் பெருந்தொண்டர் இமயவரம்பன் தென்னந்தோப்பை அடுத்துள்ள சொர்ணா ரங்கநாதன் விடுதியில், வருகை தந்திருக்கும் பெரியார் பிஞ்சுகளுக்கான பதிவுகள் நடைபெற்றன.
26 ஆம் தேதியே சிலர் வருகை தந்து பதிவை மேற்கொண்டு இருந்தனர்.
அதைத்தொடர்ந்து 27 ஆம் தேதி வருகை தந்திருந்த பெரியார் பிஞ்சுகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 90 பேர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேர் கொண்ட 9 குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து துறைகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தனித்தனியாக பைகளும் அதில் நாள்தோறும் வீட்டுப் பாடம் எழுதுவதற்கும், பழகு முகாம் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகமும், எழுதுகோலும் வழங்கப்பட்டன.
26 ஆம் தேதியே வந்து, தங்கியிருக்கும் பெரியார் பிஞ்சுகளுக்கு 27ஆம் தேதி அதிகாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சிலம்பப் பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கட்டட எழில்கலை துறை வளாகத்தில் முதல் தளத்தில் லீ கார்பூசியர் குளுமை அரங்கில் தொடக்க விழாவும், சிந்தனையைக் தூண்டுகின்ற பல்வேறு வகுப்புகள் நடைபெற்றன.

மாலையில் அதே லீ கார்பூசியர் குளுமை அரங்கில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில், பெரியார் பிஞ்சுகளுக்கு பிடித்தமான விடுகதை, நகைச்சுவை விடுகதை போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்டது. பிஞ்சுகள் மிகுந்த உற்சாகத்துடன் ஏறக்குறைய முழுமையாகப் பங்கேற்றனர். இடையிடையே கவிஞரும் அதே போன்று நகைச்சுவை விடுகதைகளைச் சொல்லியவாறே, சமூகத்தில் என்னென்ன மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன; அவற்றையெல்லாம் அம்பலப்படுத்தும் விதமாகப் பேசினார்.
தொடர்ந்து, அந்த வரிசையில், “தீபாவளி பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் இருக்கின்றன?” என்றொரு கேள்வி கேட்டு, மேடைக்கு வந்து பதில் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேடைக்கு வந்தும், கீழேயும் இருந்து, பெரியார் பிஞ்சுகள் பதில்கள் அளித்தனர். அதில், கவிஞர் தாத்தா சின்னச் சின்ன திருத்தங்களைச் சொல்லி, அவர்களது புரிதல்களைச் செழுமைப்படுத்தினார். இரவு 8 மணிக்குப் பிறகு, லீ கார்பூசியர் அரங்கிலிருந்து பெரியார் பிஞ்சுகள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு, இரவு உணவுக்கு பிறகு, அவரவர் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். அறைக்குச் சென்ற பிறகு, அவர்களது உடைகளை துவைத்து காய வைப்பது; அன்றைய வீட்டுப்பாடம் எழுதுவது; அதைவிட முக்கியமாக அரட்டை அடிப்பது; விளையாடுவது என்று பலவிதமான நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு, பின்னர் உறங்கச் சென்றனர்.

அடுத்த நாள் (28.04.2026) காலை 5:45 முதல், பல்வேறு வகுப்புகளுக்குப் பின்னர், இரட்டை மாட்டு வண்டியில் ஏறி சவாரி செய்து, நேற்று எழுதி வைத்திருந்த அஞ்சல் அட்டையை அவரவர்கள் எழுதியுள்ள முகவரிக்கு, பல்கலைக் கழகத்தின் வளாகத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு, திரும்பினர். அந்த அனுபவம் கொடுத்த உற்சாகத்தில் பிஞ்சுகள் தம்மை மறந்தனர். முதலில் மாடுகளைக் கண்டு அஞ்சியவர்கள், பின்னர் துணிச்சலுடன் வண்டியில் ஏறி அமர்ந்தனர். பின்னர் வண்டியிலேயே அமர்ந்து பார்த்து பின்னர் துணிச்சல் பெற்று எழுந்து நின்று பயணம் செய்ய கற்றுக்கொண்டனர். ஆரவாரத்துடன் சென்று அதைவிட அதிகமான ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பினர். மாலை 6:45 மணிக்கு, அதே லீ கார்பூசியர் அரங்கில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பெரியாரைப் பற்றி ஒரு முன்னோட்டம் கொடுத்தார். அதன்பின் ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் நீச்சல் குளத்தில திளைத்தது; மாலையில் கட்டட எழிற்கலை துறையின் பக்கவாட்டில் உள்ள, விளையாட்டரங்கில் மாணவர்கள் விளையாடிய அலுப்பு எல்லாம் சேர்ந்து சோர்வாக இருந்ததால், இரண்டு மணிநேர திரையிடலுக்குப் பின்னர் படம் நிறுத்தப்பட்டு, மீதி நாளை திரையிடப்படும் என்று உத்தரவாதத்துடன் இரவு 8:30 மணிக்கு மாணவர்கள் இரவு உணவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு, சொர்ணா ரங்கநாதன் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரவர் அறைகளுக்கு ஓய்வு எடுக்க சென்றனர்.

