மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களை ‘கடவுள்’ தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் கடவுள் சொன்னார்.
“இந்த பூமிப்பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?”என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
‘‘இன்னும் அய்ந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “அய்ந்து ஆண்டுகளா? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.
அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் பிரிட்டிஷ் பிரதமர்.
அடுத்து நமது மோடி, நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார்.தூய ஹிந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக,உலகப் பேரரசாக மாற இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும், “அதைக் காண நானே இருக்க மாட்டேனே” என்று கூறி கடவுள் தேம்பித் தேம்பி அழுதார்.
‘தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில்,
டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையிலிருந்து – பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய நாடு செல்லும் திசை எங்கே போய் முடியப் போகிறது என்பதை இதைவிட அழகாகவும், நாகரிகமாகவும் எழுத இயலாது.
நாம் நம்பா விட்டாலும், மோடி நம்பும் ‘கடவுளே’ இப்படி என்றால், மோடியின் நிலை?
– மயிலாடன்