சென்னை, ஏப். 27- இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங் கிணைப்புக் குழுவின் 16ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசுக்குச் சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, அந்தந்த மாநிலங்களுக்கே முன்னுரிமை அடிப் படையில் வழங்கும் தற்போதைய நடை முறையை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஒன்றிய மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘முன்னுரிமை ஒதுக்கீடு’ முறை நிறுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் சந்தையில் போட்டி ஏல முறையில் (Competitive Bidding) அதிக விலை கோருபவர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், மாநில மின்வாரியங்கள் இனி குறைந்த விலைக்கு மின்சாரம் பெற முடியாமல், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் சூழல் உருவாகும்.
மாநில உரிமைகள் பாதிப்பு
ஒன்றிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள மாநிலங்கள், அந்த ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நிலத்தடி நீர் குறைபாடு போன்ற இடர்பாடுகளை நேரடியாக எதிர் கொள்கின்றன.
இத்தகைய சூழலில், அங்கிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் அந்த மாநிலங்களுக்கே முன்னுரிமை இல்லை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுமக்கள்
மீதான சுமை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒன்றிய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரமே மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த மின்சாரத்தின் விலை உயரும் பட்சத்தில், அது தவிர்க்க முடியாமல் மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு, இது மேலும் ஒரு பெரும் பொருளாதாரச் சுமையாக அமையும்.
“ஒன்றிய மின் நிலையங்கள் லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக் கமாகக் கொள்ளாமல், மாநிலங்களின் உரிமை களை மதித்து, இப்போது நடைமுறையில் உள்ளவாறே முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும்” என்பதே மாநில மின் வாரியங்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
ஒன்றிய அரசின் இந்தத் தன்னிச்சையான முடிவை உடனே கைவிட வேண்டும் என்றும், பழைய முறையையே தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
