புதுடில்லி, ஏப். 26– இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ராகவ் சத்தாவின் இந்த செயலை தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் அவர் 10 லட்சம் ‘பின்பற்றுபவர்களை’ இன்ஸ் டாகிராம் சமூக வலைதளங்களில் இழந்துள்ளார். பாஜகவில் அவர் இணைந்தததை விரும்பாத Gen Z கிட்ஸ்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இளம் தலைவராக இருந்தவர் ராகவ் சத்தா. இவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்தார். பஞ்சாப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2022ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன.
இந்நிலையில் தான் திடீரென்று அவர் நேற்று (25.4.2026) ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி விலகிய கையோடு பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் முன்னி லையில் பாஜகவில் சேர்ந்தார்.
ராகவ் சத்தா மாறியது ஏன்?
ராகவ் சத்தா ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர்களின் துணைத் தலைவராக இருந்தார். ஆனால் சமீபத்தில் ஆம்ஆத்மி கட்சி அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது. அதுமட்டுமின்றி ராகவ் சத்தாவிற்கு பேச வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியது. இதனாால் அதிருப்தியடைந்த ராகவ் சத்தா பாஜகவில் அய்க்கியமாகியுள்ளார்.
அவருடன் ஆம்ஆத்மியின் சந்தீப் பதாக், அசோக் மிட்டல் என்ற 2 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இன்னும் கூட ஹர்பஜன் சிங் உள்பட மேலும் சில ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு போனதும் விழும் அடி
இதனால் ஆம்ஆத்மி கட்சியில் புயல் வீச தொடங்கி உள்ளது. ராகவ் சத்தாவின் செயல், அரவிந்த் கெஜ்ரிவாலை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. பிற உறுப்பினர்கள் பாஜக நோக்கி செல்வதை தடுக்க வேண்டிய பொறுப்பு கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜகவிற்கு தாவிய ராகவ் சத்தாவின் செல்வாக்கு திடீரென குறைய தொடங்கி உள்ளது.
இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர் அதிகமாக பின்தொடர்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ராகவ் சத்தாவின் தனித்துவம் தான்.
இவர் மாநிலங்களவையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் பற்றி பேசி வந்தார். ‘பிளிங்கிட்’ 10 நிமிட டெலிவரியில் உள்ள ஆபத்து பற்றி பேசி அதனை நீக்க காரணமாக இருந்தவர். இதுதவிர போக்குவரத்து நெரிசல், தொலைதொடர்பு நிறுவனங்களின் தினசரி டேட்டா வரம்புகள், விமான நிலையங்களில் அதிக விலைக்கு சமோசாக்கள் விற்பனை என பலவற்றை பற்றி பேசி கவனம் ஈர்த்தார். இதனால் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது.
10 லட்சம் பேர் வெளியேறினர்
இந்நிலையில் தான் தற்போது அவர் பாஜகவில் இணைந்தததால் ராகவ் சத்தாவை சமூக வலைதளங்களில் பின்தொடர்வோர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றி வந்தவர்களில் 10 லட்சம் (1 மில்லியன்) பேர் வெளியேறி உள்ளனர்.
அதன்படி நேற்று காலையில் ராகவ் சத்தாவின் இன்ஸ்டாகிராமில் மொத்த பின்பற்றுவோரில் 14.6 (1 கோடியே 46 லட்சம் பேர்) மில்லியனாக இருந்தது. நேற்று (25.4.2026) மதியம் 1 மணியளவில் அவரது பின்பற்றுவோர் எண்ணிக்கை 13.5 மில்லியனாக (1 கோடியே 35 லட்சம் பேர்) உள்ளது.
Gen Z கொடுக்கும் தண்டனை
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ”ராகவ் சத்தா இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அவரது பேச்சு, செயல்கள் இளைஞர்களை ஈர்த்துள்ளது. இதனால் தான் முதலமைச்சர், பிரதமர், ஒன்றிய அமைச்சர் என்று முக்கிய பொறுப்பில் இல்லாவிட்டாலும் கூட மாநிலங்களவை உறுபபினராக இருந்து கொண்டே அதிக ‘பின்பற்றுவோர்களை’ பெற்றார். இப்போது அவர் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததை Gen Z கிட்ஸ்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் ராகவ் சத்தாவை பின்தொடர்வதை கைவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ‘பாலோவர்ஸ்’ எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் கூட குறையலாம்” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே தனது எக்ஸ் பக்கத்தில், ”இன்ஸ்டாகிராமில் Gen Z இளைஞர்கள் நடத்திய ‘அன்பாலோ’ பிரச்சாரம் காரணமாக, ராகவ் சத்தாவின் ‘ஃபாலோவர்ஸ்’ எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் குறைந்துள்ளனர். இணையதளம் ஒரே இரவில் உங்களை ஒரு கதாநாயக்கனாக்கலாம். ஒரே இரவில் உங்களை வீழ்த்தவும் செய்யலாம்” என கூறியுள்ளார்.
மேனாள் கிரிக்கெட் வீரர் ஹர்பன் சிங் வீட்டுச் சுவரிலும் ‘துரோகி’ என்று எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்சி மாறிய பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் விமர்சனங்கள் வருகின்றன.

