அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தி.மு.க. அரசு தொடரும்

6 Min Read

ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி பள்ளி வாக்குச்சாவடி மய்யத்தில் நேற்று (23.4.2026) காலை முதல் நபராக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஒரு நிலையான அரசு வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் வேண்டும். இந்த மூன்று எதிர்பார்ப்புகள் தான் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த மூன்றையும் கடந்த முறை அளித்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசு, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டில் வரக்கூடிய அரசுக்கு பட்ஜெட் போடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள் இருக்கிறார்கள், திறன்மிகுந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். வரவு செலவு கணக்கு போடும்போது மாநிலத்தின் சொந்த வருவாய், ஒன்றிய அரசின் வருவாய் ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். இது ஒன்றிய அரசுக்கும் பொருந்தும், மாநில அரசுக்கும் பொருந்தும். ஒரு நிலையான அரசு, வலிமையான அரசு உறுதியான வரவு செலவு அறிக்கையை அளிக்கும். மாநிலத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அதிகளவு கடன் பெறப்படுகிறதே என்கிறீர்கள்.

ஒன்றிய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது? கடன் பெறுவதில் தப்பில்லை. தமிழ்நாடு மட்டும் கடன் வாங்கவில்லை. அனைத்து நாடுகளும் கடன் வாங்குகின்றன. மாநில அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளதே என்கிறீர்கள். இலவச திட்டங்களால் மாநிலத்துக்கு எந்த சிக்கலும் இல்லை.

இலவசம் என்பதை நான் மறுக்கிறேன். அது இலவச திட்டம் அல்ல என்பதை பலமுறை கூறி இருக்கிறேன். யுனிவர்சல் பேசிக் இன்கம் (யூபிஅய்), அதாவது தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் அடிப்படை வருமானம் இருக்க வேண்டும் என்றுதான் திருப்பி, திருப்பி தருகிறார்கள். இது அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வருவதை உறுதி செய்கிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இலவசமாக பார்க்கக்கூடாது. இவ்வாறு கூறினார்.

டி.ராஜா

சென்னையின் தியாகராயர் நகரில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்னுடைய மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக வைத்திருக்க இந்த ஆட்சியே தொடர வேண்டும் என்ற மனநிலையே வாக்காளர்களிடம் நிலவுகிறது. மேலும், தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்பதால், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து, வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் வைகோவின் மகனும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் வைகோ கூறுகையில், திமுக தனது சொந்த பலத்திலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை நான் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மூலமாக சொல்லி வருகிறேன். அதே கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு என தெரியவரும் என்றார்.

துரை வைகோ கூறுகையில், திமுக கூட்டணி கட்சிகள் 200 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும். மதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நேற்று (23.04.2026) நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தனது குடும்பத்தினருடன் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் காலை 10. 30 மணிக்கு தனது வாக்குப்பதிவினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி அய்ந்தாண்டு காலமாக மிகச் சிறப்பாக நடந்திருக்கிறது. இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியான ஆட்சியாக அது பாராட்டப்பட்டிருக்கிறது. கடல் கடந்த நாடுகளிலும் தமிழ்நாட்டினுடைய ஆட்சி, அதன் சாதனைகள், அவர்கள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிற நலத்திட்ட பணிகள் எனஅத்தனையும் பேசுபொருட்கள் ஆகியிருக்கின்றன.

கனடா, இலங்கை போன்ற நாடுகளில் கூட தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம்போன்ற மக்கள் நலத்திட்டங்கள் பரவலாகப் பேசப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நீங்க ளெல்லாம் அறிவீர்கள்.

இதுவரை வந்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் பார்த்தால் கூட, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்பதுதான் கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலிலே சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிக அளவில் – அதாவது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். திரும்பவும் திராவிட மாடல் ஆட்சி அமையும். “ஸ்டாலின் தொடரட்டும்’’ தமிழ்நாடு மிளிரட்டும்””என்ற முழக்கம் இன்று கேட்பது போல இனியும் என்றென்றும், எங்கும் கேட்கும் என்று நான் நம்புகிறேன்.

200–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்வார்கள் என்றார்.

தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்தத் தேர்தல் என்பது வெறும் இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல; இது இரண்டு வெவ்வேறு கருத்தியல்களுக்கு இடையிலான யுத்தம். தமிழ் மண்ணில் மதவாத மற்றும் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்துவார்கள்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது:

புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் (இலவசப் பேருந்துப் பயணம்) பொருளாதார ரீதியாகத் தமிழ்நாட்டின் உள்ளூர் உற்பத்தி (GSDP) 11.9% உயர்ந்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாறும். அந்த வளர்ச்சிப் பயணத்தில், மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறு துணையாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்.

போடி தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்களித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து மக்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றி தரக்கூடிய நிலை உருவாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டு காலம் மகத்தான ஆட்சியை வழங்கியதன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி அளிப்பார்கள்.

இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்ற நிலை உருவாகி இருக்கிறது’’ என்றார். தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது, ‘‘மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு, எவ்வளவு வாக்குகள் பெறுகிறார் என்பதை பொறுத்துதான் விஜய்யின் எதிர்காலம் இருக்கும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *