பா.ஜ.க.விற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தாலும், ஆட்சி அவர்கள் கைக்கே செல்லும்! அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை!

சென்னை, ஏப்.23 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க தமிழ்நாடு வந்துள்ள டில்லி மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 21.4.2026 அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக கால் ஊன்ற முயற்சிப்பது குறித்த செய்தி யாளர்களின் கேள்விக்கு, “தமிழ்நாட்டில் மக்கள் பாஜகவை வெறுக்கிறார்கள். அதன் பிரிவினைவாத மற்றும் நச்சு அரசியலை அவர்கள் வெறுக்கிறார்கள். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக பாஜகவால் தமிழ்நாட்டில் தடம் பதிக்க முடியவில்லை. இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டி யிடுகிறார்கள். ஆனால், அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் என்டிஏ கூட் டணிக்கோ, அதிமுகவிற்கோ அல்லது பாஜகவிற்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும், ஒரு வாதத்திற்குச் சொல்வதானால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால், பாஜகவிற்கு ஒரே ஒரு இடம் கிடைத்தால் கூட, அக்கட்சியை சேர்ந்தவரையே முதலமைச்சராக்குவார்கள். பீகாரில் நிதிஷ்குமாருக்கு என்ன செய்தார்களோ, அதையே இங்கும் செய்வார்கள்.

எனவே, மக்கள் பாஜகவிடமும் என்டிஏ கூட்டணியிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் என்டிஏ என்பது பாஜகதான், அது அதிமுக மற்றும் பாஜக கிடையாது. இரண்டாவதாக, கடந்த ஆண்டு டில்லியில் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து அவர்கள் ஆட்சி அமைந்தது. ஒரே ஆண்டில் மக்கள் அந்த ஆட்சியின் மீது சலிப்படைந்துவிட்டனர். கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற துறைகளில் நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் பாஜக சிதைத்துவிட்டது. எனவே, மக்கள் தவறுதலாக பாஜக அல்லது அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், கடந்த அய்ந்து ஆண்டுகளில் மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் மிக விரைவில் முடக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு என்பது வாரிசு அரசியல், ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற மோடியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “மோடி முதலில் தனது சொந்தக் கட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். வாரிசு அரசியலுக்கு என்னிடம் பல உதாரணங்கள் உள்ளன. அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா என்ன செய்து கொண்டிருக்கிறார்? பிசிசிஅய் (BCCI) அல்லது அய்சிசி (ICC) தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த மகன்களைத் தேடுகிறார்கள். ஆனால் ஓட்டு என்று வரும்போது உங்கள் குழந்தைகளிடம் வந்து கேட்கிறார்கள். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அவர்களின் மற்ற தலைவர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? எனவே, பிறரைச் சொல்லும் முன் அவர்கள் தங்கள் கட்சியைப் பார்க்க வேண்டும்.

ஊழலைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் தேசத்தின் அதிக ஊழல் நிறைந்த கட்சி பாஜகதான். மோடி நாட்டின் அத்தனை சொத்துகளையும் தனது நண்பர்களுக்கே வாரி வழங்குவற்குப் பல உதாரணங்கள் உள்ளன.” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *