பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுக்களில் வேறுபாடு
விஜய் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி
குறைத்து காட்டியது முறைகேடானது
சென்னை, ஏப்.21 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது சொத்து மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாயை ஒரு தொகுதியில் குறைத்துக் காட்டியது முறைகேடானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனுக்களில் முரண்
த.வெ.க. தலைவர் விஜய் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகக் கூறி, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் விக்னேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:பெரம்பூர் தொகுதியின் வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ. 115,13,63,000 என குறிப்பிடப்பட்டுள்ளது.திருச்சி கிழக்கு தொகுதி: சொத்து மதிப்பு ரூ. 220,15,62,000 என குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரே நபர் இரு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வித்தியாசம் இருப்பது உண்மைத் தகவலை மறைக்கும் செயலாகும்.
“விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து வருமான வரித் துறையும், தேர்தல் ஆணையமும் விரிவான விசாரணை நடத்த உத்தர விட வேண்டும்” என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:
முறைகேடு
இரு தொகுதிகளில் போட்டியிடும் ஒருவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது தெளிவான முறைகேடு இது. தேர்தல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை உரிய விளக்க மளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக் கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
தேர்தல் களத்தில் இந்தச் செய்தி த.வெ.க வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

