தேர்தல் களத்தில் இருப்பது இரண்டு அணிகள்தான்; மற்றவை எல்லாம் மின்மினிப் பூச்சிகள்!
மறுபடியும் வெல்லப்போவது ‘திராவிட மாடல்’ அரசு தான்! மு.க.ஸ்டாலின் செல்லப் போவது செயின்ட் ஜார்ஜ் கோட்டை தான்!
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து
தேர்தல் பரப்புரைப் பயணத்தின் இடையே
ஓர் உணர்வுப் பூர்வமான நொடி!
சேலம், ஏப்.14 ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அணிகள் இருந்தாலும், களத்தில் இருப்பது இரண்டே இரண்டு அணிகள் தான். மற்றவை எல்லாம் மின்மினிப் பூச்சிகள். தி.மு.க. என்ற மின்சாரத்துக்கு அவை ஈடாகாது. எதிர்க்கட்சி ஆட்சியில் அமர்வோம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபடியும் வெல்லப்போவது ‘திராவிட மாடல்’ அரசு தான்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செல்லப் போவது செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான்!’’ என்று, சேலம் கோட்டை மைதானத்தில் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சிகரமாக உரையாற்றினார்.
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இரா.ராஜேந்திரன்
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இரா.ராஜேந்திரன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று (13.04.2026) காலை 9.30 மணிக்கு, சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்துக் கட்சிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு!
இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமையேற்க, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் கவிஞர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு சரவணன், தி.மு.க. மாநகரச் செயலாளர் ரகுபதி, தி.மு.க. பகுதிச் செயலாளர் சையத் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பா ளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் காலை 10 மணிக்கு வருகை தந்தார். மாவட்டத்தின் சார்பிலும் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கழகத் தலைவர் உரையாற்றினார்.
ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் திருச்சியிலிருந்து கிளம்பி, கடந்த 12.4.2026 அன்று மாலை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்திற்கு அருகில் திரும்பு வதற்காக வண்டி போக்குவரத்து நிறுத்தத்தில் காத்திருந்தது.
பக்கத்தில் நின்ற ஒரு லாரியின் ஓட்டுநர் அய்யாவைப் பார்த்துவிட்டார். ஆசிரியருக்கு வணக்கம் சொல்ல முயன்றிருக்கிறார். ஆசிரியர் வண்டிக்குள் இருக்கும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். கவனிக்கவில்லை.
உடனே தன் லாரியை முன் நகர்த்தி, எங்கள் ஓட்டுநர் மூலமாக ஆசிரியர் அய்யாவைக் கவனிக்கச் செய்து, வணக்கம் தெரிவித்தார். பொட்டு வைத்த முகம். ஆசிரியர் மகிழ்ந்து வணக்கம் தெரிவித்தார்.
இது இயல்புதான். செய்தி அதுவன்று!
அடுத்த நொடி அவர் செய்த செயல் தான் அவர் உணர்வைக் காட்டியது!
தான் யார் என்பதைச் சொல்ல வேண்டுமே!
ஸ்டீரங்கைத் தாண்டி கையை நீட்டி, அங்கு வைத்திருந்த காலண்டரை எடுத்துக் காட்டினார்.
முத்தமிழறிஞர் கலைஞர், முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின் படங்கள் பளிச்சிட்டன.
தான் திராவிட இயக்கத்தவன் என்பதைத் தங்கள் மூத்த தலைவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு அந்தக் கண்களில்! ஒரு சிறு குழந்தை போல அந்தப் படங்களைத் தொட்டுக் காட்டி தன்னைச் சுட்டிக்காட்டினார்.
புரிந்துகொண்ட ஆசிரியர் மேலும் மகிழ்ந்து சிரித்தார். அப்பப்பா… புல்லரித்துப் போனேன்.
அந்த நொடியை, அந்த ஓட்டுரைப் பதிவு செய்யக் கையில் மொபைல் சிக்கவில்லை. ஆனால், அந்த நொடி என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
திராவிடர் இயக்கம் என்பது எம் மக்களின் உயிருடன் கலந்தது! ஒவ்வொருவரின் வாழ்வி லும் ஒளியேற்றியது! நன்றி உணர்வுடைய ஒவ்வொருவரின் நாளங்களிலும் ஓடும் குருதி! நாளையும் நமதென்பது உறுதி!
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(முகநூல் பதிவிலிருந்து…)
தமிழர் தலைவர்
ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், ‘‘திராவிடர் கழகம் பவள விழா மாநாட்டை சேலத்தில் நடத்திய போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, அந்த மாநாட்டில் கலந்து கொண்டு இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்’’ என்று, அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். அதற்கும் முன்னதாக அவரது நினைவுகள் சென்று, ‘‘இதே சேலத்தில் தான் 110 ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. அப்போது 10 வயது சிறுவனாக, 1944 இல் சேலம் மாநாட்டில் கலந்து கொண்ட நான், 93 வயதில் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவும் நல்லாட்சி திரும்புவதற்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது பெருமைக்குரிய ஒன்று’’ என்று, பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சுருக்கமாகவே இருந்தாலும், மக்கள் நீ…ண்ட நெடிய அந்த திராவிடர் இயக்க வரலாற்றை உள்வாங்கியதால் உணர்ச்சி வசப்பட்டனர். அதை கைதட்டல்களால் வெளிப்படுத்தினர். தொடர்ந்து, ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இதே சேலத்தில் தான், திரைப்பட எழுத்துப் பணிக்காக அதிக காலத்தை செலவிட்டார்’’ என்றும், ‘‘தந்தை பெரியார் சேலம் எனக்கு தாய் வீடு போன்றது என்பார்கள்’’ என்றும், தனது அகலாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மூன்று புத்தகங்கள்!
மேலும் அவர் மக்களை பார்த்து, ‘‘உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொல்லுகிறேன்’’ என்று தொடங்கி, ‘‘வருகிற மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும்! மறு படியும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதலமைச்சர் ஆவார்’’ என்றும் கூறி, மக்களின் உற்சாகத்தைப் பெருக்கினார். அதன் எதிர் வினையாக பலத்த ஆரவாரமும், கைதட்டல்களும் எழுந்து அடங்கின. அதைத்தொடர்ந்து, ‘‘பல்வேறு அணிகள் தேர்தலில் இருந்தாலும் களத்தில் இருப்பது இரண்டே இரண்டு அணிகள் தான். மற்றவை எல்லாம் மின்மினி பூச்சிகள். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் முதலமைச்சராக ஆகி விடுவோம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லப் போவது திராவிட மாடல் அரசு தான்!’’ என்று மறுபடியும் மக்களின் உற்சாகத்தை ஊக்கினார். மேலும் அவர், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் ‘திராவிட மாடல்’ அரசு செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே… இருக்க வேண்டும். அவ்வளவு இருக்கிறது! குறுகிய நேரத்தில் முழுமையாக சொல்லிவிட முடியாது. ஆகவே, மூன்று புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை வாங்கிப் படித்து மற்றவர்களுக்கும் பரவச் செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை இந்தியாவையும் தாண்டி, கனடா இங்கிலாந்து நாடுகளும் பின்பற்றுவதையும், பாராட்டுவதையும் குறிப்பிட்டு விட்டு, ‘‘இங்கிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலினுக்கு ஆளத் தெரியவில்லை என்று சொல்கிறார். எதில் சிரிப்பது என்றே தெரியவில்லை’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
‘‘கல்விக்காக இருக்கும் கட்சி தி.மு.க.’’ – ‘‘குலக்கல்விக்காக இருக்கும் கட்சி பா.ஜ.க.!’’
தொடர்ந்து,‘‘இவருடைய ஆளுமை தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தெரிந்ததே’’ என்று வஞ்சப்புகழ்ச்சியால் பதிலடி தந்தார். ‘திராவிட மாடல்’ அரசு கல்வியில் மிகச்சிறந்த சாதனைகளை எட்டி இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘கல்விக்காக இருக்கும் கட்சி தி.மு.க.’’ என்றும், ‘‘குலக்கல்விக்காக இருக்கும் கட்சி பா.ஜ.க.’’ என்றும் ரத்தினச் சுருக்கமாக நூறாண்டு வரலாற்றை விவரித்துவிட்டார். மேலும் அவர், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளையும் மீறி, எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை தமிழ்நாடு பிடித்திருக்கும் சிறப்பை விவரித்தார். இதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதையும் சுட்டிக்காட்டி னார். ஆனாலும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியான 11.19% எட்டி இருப்பதை எடுத்துரைத்தார்.
உங்கள் வீட்டில் விளக்கு எரியும்!
நாட்டில் விளக்கு எரியும்!
‘‘சிறுபான்மை – பெரும்பான்மை என்றில்லாமல், அனைவரும் சகோதரர்களாக ஒருபான்மையுடன் இருப்பதும், அந்த அமைதியின் காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பதும், வேலை வய்ப்புகள் கிடைப்பதும்தான் அந்த வளர்ச்சிக்கு காரணம்’’ என்பதையும் விளக்கினார். இறுதியாக, வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு, ‘‘ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு அருகில் உள்ள பொத்தானை விளக்கு எரியும் வரை அழுத்தி வாக்களிக்க வேண்டும். அப்படிச் செய்தால், வாக்குப்பெட்டியில் உள்ள விளக்கு எரியும்! அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும்! நாட்டில் விளக்கு எரியும்! அறியாமை எனும் இருள் அகலும்! உதயசூரியன் உதிக்கும்!’’ என்று அடுக்கு மொழியில் பலத்த கைதட்டலுக்களிடையே கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.
அய்யோ உள்ளதும் போச்சே!
‘‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்த தி.மு.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!’’ – பி.ஜே.பி. தலைவர் நிதின் நபின் ஆவேசம்!’’
வழக்கம்போல மதவாதத்தைக் கையில் எடுத்து, கலவரத் தீயைப் பற்ற வைத்து அரசியல் இலாபக் குளிர் காயலாம் என்று ஆசைப்பட்டதில் மண் விழுந்துவிட்டதே என்று புலம்பித் தள்ளியுள்ளார்
பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர்.
ஒரு நீதிபதி தூபம் போட்டார். இரு நீதிபதிகள் மதக் கலவரத் தீயை மூட்ட கையில் வைத்திருந்த தீவட்டியைப் பறிமுதல் செய்துவிட்டனர்.
அந்தோ, பாவம் புலம்புகிறார்கள்!
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இது பெரியார் மண்!
பங்கேற்றோர்
இந்நிகழ்வில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க., முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.அய், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழர் தேசம் கட்சி, தமிழ்ப்புலிகள், விவசாய தொழிலாளர் கட்சி, கொங்கு நாடு திராவிட கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கழகத் தலைவரின் உரையைக் கேட்டு தெளிவுற்றனர்.

