வைக்கம்,ஏப்.5- கேரள மாநிலம் வைக்கத்தில் சனிக்கிழமையன்று (ஏப்.1) நடந்த வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து சுடர் ஏற்றி துவக்கி வைத்தபின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:
‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் பங்கேற்பது அந்த போராட் டத்தில் தமிழ்நாட்டுக்கு உள்ள முக்கியத் துவத்தை உணர்த்துகிறது. கேரளத்தில் மார்பு மறைக்கும் போராட்டம், அரிவிப்பறம்பு திஸ்டா, வில்லுவண்டி பயணம், கல்லு மாலை போராட்டம், குருவாயூர் சத்தியாகிரகம் என ஏராளமான சீர்திருத்த முன்னேற்றங்களை உள்ள டக்கிய சங்கிலியில் மிகச்சிறந்த கண்ணி வைக்கம் போராட்டம். வைக்கம் சத்தியாகிரகம் ஒப்பிட முடியாத ஒன்று. சமூக முன்னேற்றத்திற்கான வழி, தேசியப் போராட்டத்துக்கான வழி திறந்தது வைக்கம் போராட்டமாகும். அது வரை சீர்திருத்த தலைவர்களும், சமூக அமைப்புகளும் அவரவர் நிலையில் சீர்திருத்த நடவடிக் கைகளை மேற்கொண்டனர். ஆனால் வைக்கம் சத்தியாகிரகத்தில் சமுதாய சீர்திருத்த இயக்கங்களும் தேச விடுதலை இயக்கமும் ஒன்றிணைந்தன. இதுதான் வைக்கம் சத்தியாகிரகத்தின் வரலாற்று ரீதியான சிறப்பு.
வழிகாட்டிய முன்னோடிகள்
இதற்கு முன்பு சமுதாய சீர்திருத்த இயக்கங்களும் அரசியல் இயக்கமும் இணைந்து இதுபோன்ற ஒரு போராட்டம் நடக்கவில்லை. சிறீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், அய்யங்காளி போன்ற சீர்திருத்த தலை வர்களின் முன்னுதாரணங்கள் இல்லாமல் போயிருந் தால் வைக்கம் சத்தியாகிரகம் போன்ற முற்போக்கான ஒரு போராட்டம் கேரளத்தில் நடந்திருக்காது. சிறீநாரா யணகுரு ஒரு ரிக்சா வண்டியில் வைக்கம் கோயிலின் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சவர்ண வகுப்பு (ஆதிக்க ஜாதி) பெண் தடுத்தார் எனவும், அதில் தான் வைக்கம் சத்தியாகிரகத்துக்கான வழி திறக்கப் பட்டது எனவும் அப்போது வாழ்ந்த மூலூறஸ் பத்மனாப பணிக்கர் ஒரு கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.
வைக்கம் போராட்டத்தை தேசியப் போராட்டத்துடன் இணைத்ததில் டி.கே.மாதவன் வகித்த பங்கும் அவரைப் போன் றோர் அனுபவித்த வலிகளும் முக்கிய மானவை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் டி.கே.மாதவன் காந்திஜியை சந்திக்க சென் றார். காந்தியின் தலையீட்டிற்கு பிறகுதான் தேசிய இயக்கத்துடனான இணைப்பு அதி கரித்தது. காந்தியின் முதல் கேரள பயணமும் வைக்கம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. நட மாடுவது குடிமக்களின் அடிப்படைச் சுதந் திரம்; ஆனால் அதைத் தடுக்கும் நிலை நமது நாட்டில் இருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வழிகளில் பெரும்பாலான மக்களுக்கு நடமாடும் சுதந் திரம் மறுக்கப்பட்டிருந்தது. மனிதாபிமானத்துக்கு எதிராக, அதை அறிவிப்பு செய்து பலகை வைத்திருந் தனர். இது மனித உரிமைக்கு எதிரான செயல் என்பதை உணர்ந்து வைக்கம் சத்தி யாக்கிரகமாகவும், பின்னர் குருவாயூர் சத்தியாகிரக மாகவும் வளர்ச்சி பெற்றது. கோயில் நுழைவுப் போராட் டத்துக்கு வழிகாட்டியதும் வைக்கம் சத்தியாகிரகம் மூலம் வலுப்பெற்ற போராட் டப் பாரம்பரியமே ஆகும்.
தமிழகத்துக்கும் பெருமை
வைக்கம் சத்தியாகிரகம் கேரளத்துக்கு மட்டுமல்ல, இங்கு தமிழ்நாடு முதல மைச்சர் குறிப்பிட்டதுபோல் தமிழ் நாட்டுக்கும் பெருமை கொள்ள வழி வகுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிராமணிய எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த ஈ.வெ.ரா.பெரியார், அங்கிருந்து வந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் இங்கு சிறை வாசமும் அனுபவித்தார். அவர் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருந்து ஏராளமா னோர் வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற் றனர். ஜார்ஜ் ஜோசப், சி.ராஜ கோபாலாச்சாரி, சீனிவாச அய்யங்கார், அய்யா முத்துக் கவுண்டர்- என தமிழ்நாட் டில் இருந்து பல பெரி யோர்கள் வந்தனர். எனவே தான் தமிழ்நாடு முதலமைச் சர் இந்த விழாவில் பங்கேற் றது மிகுந்த முக்கியத்துவமும் அழகும் பெறுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டு மக்க ளும் கேரள மக்களும் ஒரே விதமான போராட்ட உணர் வையும் உறவையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நாங்கள் இருவரும் பங்கேற்றோம். அது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரி வாக இங்கே பேசினார். வைக்கம் போராட்டம் ஒரு முன்மாதிரியை காட்டிச் சென்றுள்ளது. அது, போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி. அது இனி வரும் காலங்களிலும் நீடிக்கும். சகோதரத்துவமாக அது மேலும் வலுப்படும். இந்தியாவுக்கே புதிய முன் மாதிரிகளை அது படைக்கும் என்பதை காந்தியார், சிறீநாராயணகுரு, தந்தை பெரியார் போன்றோ ரின் நினைவுகள் நிரம்பி நிற்கும் வைக்கத்தின் மண்ணில் நின்று கொண்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் கிறேன்.
தனியான போராட்டம் அல்ல…
வைக்கம் சத்தியாகிரகம் மற்றொரு முன் மாதிரி யையும் நம்முன் உயர்த்திக்காட்டுகிறது. சீர்திருத்த இயக்கம் என்பது சமூக அமைப் புகளால் மட்டும் நிறைவு பெற்றுவிடாது. இப்போதும் ஜாதியப் பாகுபாடுகளை சந்திப் போர் அதற்கு எதிராக தன்னந்தனியாக வேறு பட்டு நின்று நடத்த வேண்டிய போராட்டம் அல்ல என்பதுதான் அது. கே.கேளப்பன், கே.பி.கேசவ மேனன், மன்னத்து பத்மநாபன், திரூர் நீலகண்ட நம்பூதிரி பாடு, டி.கே.மாதவன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், கண்ணன் தோடத்து வேலாயுத மேனன் போன்ற ஏராளமானோர் வைக்கம் சத்தியா கிரகத்தில் தலைமைப் பாத்திரம் வகித்தனர். மந்நத்து பத்மநாபன் தலைமையில் வைக்கத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நடந்த நடைபயணம் குறித்து இங்கே விளக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவருக்கு எதிரான தண்டனையை மன் னத்து பத்மநாபன் தானே ஏற்றுக் கொண்டு அந்த நபரை பாதுகாத்ததை நினைவுகூர வேண்டும்.
‘அவர்ணருக்காக’ போராடிய ‘சவர்ணர்கள்’
‘அவர்ணர்’ என வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வேண்டும் என்பதே மன்னத்து பத்மநாபன் தலைமையில் நடந்த சவர்ணர்களின் நடைப்பயணம். காக்கி நாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் டி.கே.மாதவன் தீண்டாமைக்கு எதிராகவும், கோயில் நுழைவை ஆதரித்தும் முன் மொழிந்த தீர்மானமும் அதற்கு காந்தியார் வழங்கிய ஆதரவும், அந்த நேரத்தில் சிறீநாராயணகுருவின் வைக்கம் வருகை, தனது ஆசிரமத்தையே போராட்டக் காரர்களுக்கு விட்டுக்கொடுத்த குருவின் நடவடிக்கை, தீண்டாமை ஒழிப்பு குழு உருவாக்கம்- இவையெல்லாம் வைக்கம் போராட்டத்தின் பின்னணியில் வரலாற் றின் பக்கங்களில் நாம் நினைவு கூரத்தக்க பாடங்க ளாகும். வைக்கம் சத்தியாகிரகத்தையொட்டி பேச்சு வார்த்தைக்கு வந்த காந்தியைக்கூட அவர் பிராமணிய சவர்ணர் அல்ல என்பதால் வைக்கத்தின் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த இண்டம்துருத்தி மனையில் அனுமதிக்காதது குறித்து இங்கே குறிப் பிட்டார்கள். கோயிலுடன் இணைந்த பொது வழிகளில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிற காந்தியாரின் கோரிக்கையை அந்த ஆதிக்க மனையின் அதிகாரிகள் நிராகரித்தனர். காந்திக்கு அங்கு கிடைத்த அனுபவம், அவமானகரமான சூழல் குறித்தும் இங்கே குறிப் பிடப்பட்டது. அந்த மனைதான் இப்போது ‘செத்து’ (மரம் ஏறும்) தொழிலாளிகளின் அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறு முற்போக்காக முன் னேறிச் செல்லும் என்பதற்கான சான்றாகும் இது.
சத்தியாகிரகிகள் எதிர்கொண்ட கொடூர மான தாக்குதல்கள் மறக்க முடியாதவை. பிராமணரான ராமன் இளையது என்கிற சத்தியாகிரகியின் கண்களில் பிராமணியத்தின் பிரமுகர்கள் வலுக்கட்டாயமாக சுண்ணாம்பு தேய்த்தனர். வாழ்நாள் முழுவதும் பார் வையற்றவராக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற ஏராளமான வலி நிறைந்த அனுபவங்க ளைக் கொண்டது வைக்கம் போராட்டம். அவற்றை யெல்லாம் கடந்துதான் ஜனநாயக முறையில் இன்று கேரளம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் உயர்ந்துள்ளது.
பிரபலங்களை முன்னிறுத்தாத போராட்டம்
இதர சீர்திருத்தப் போராட்டங்களில் இருந்து பல காரணங்களால் வைக்கம் போராட்டம் மாறுபட்டதாக உள்ளது. பிரபலமான சிலரை மய்யப்படுத்தி நமது நாட்டின் சீர்திருத்த முன்னேற்றங்கள் அமைந்திருந் தன. ராஜாராம் மோகன்ராய் முதல் மகாத்மா பூலே வரை உள்ள உன்னதர்கள் தேசிய அளவில் நடத்திய செயல்பாடுகள், சிறீநாராயண குருமுதல் அய்யன்காளி வரையுள்ள ஏராளமான மகத்தானவர்கள் கேரளத்தில் நடத்திய செயல்பாடுகள், அவர்கள் தலைமை வகித்த போராட்டங்கள் நம் அனைவர் மனக்கண் முன்பும் வருகின்றன. ஆனால் வைக்கம் போராட்டத்தின் சிறப்பு தனி மனிதரை மய்யப்படுத்தியது அல்ல என்பதுதான். அதோடு, அரசியல் அமைப்பின் தலை மையில் ஏற்பட்ட சமூக சீர்திருத்த அமைப்பு என்பதுதான் வைக்கம் சத்தியாகிரகத்தின் மற்றொரு சிறப்பு. சீர்திருத்தம் பற்றிக் கூறும் போதெல்லாம் அரசியல் அமைப்புகளுக்கு சீர்திருத்த இயக்கத்தில் எந்த ஒரு பங்கும் இல்லை என்று ஜாதிக்கும் ஒரு போக்கை சிலர் இன்றும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்துவது வைக்கம் சத்தியாகிரகம். அதோடு அன்று கடைப்பிடிக்கப்பட்ட ஒடுக்குமுறையை சந்தித்த ஜாதியினர் மட்டும் நடத்தியதல்ல இந்த போராட்டம்; மாறாக அனைத்து ஜாதியிலும் உள்ளோர் கூட்டாக நடத்தியதே வைக்கம் சத்தியாகிரகம். அதற்கும் அப்பால் கிறித்த வர், முஸ்லீம்கள் மட்டுமல்ல, சீக்கிய மதத்தில் முற் போக்கு சிந்தனை கொண்டோரின் ஆதரவும் இருந்தது. கே.அப்துல் ரஹ்மான் குட்டி, பரீ சாகிப், எம்.கே. அப்துல் ரகீம் போன்றோர் முஸ்லீம் சமூகத்தின் ஒருமைப்பாடு தெரிவித்து வைக்கம் சத்தியாகிரகத்துக்கு வந்தனர். பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் போன்றோரின் பெயர்கள் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதோடு பத்து சீக்கிய சகோதரர்கள் வைக்கத்துக்கு வந்து உணவகம் திறந்தனர். இப்படிப் பார்த்தால் மிகச்சரியான மதச்சார்பற்ற தன்மை வைக்கம் சத்தி யாகிரகத்துக்கு இருந்தது என்பதை நம்மால் காண முடியும்.
60 ஆண்டுகள் அமலாகாத சட்டம்
ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கு பொதுப் பாதையை பயன்படுத்தும் சுதந்திரம் 1865- இல் திரு விதாங்கூர் அரசு வழங்கியது. ஆனால் அந்த அனுமதி அமலாக சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வெகு ஜனப் போராட்டம் தேவைப்பட்டது. சிறப்பான சட்டத் தால் மட்டும் சமூக நிலவரங்களை மாற்றி அமைத்துவிட முடியாது, அதற்கு சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலை யில் மாற்றம் ஏற்படுத்தும் வெகுஜனத் தலையீடு தேவை என்பதை வைக்கம் சத்தியாகிரகம் தெளிவுபடுத்து கிறது. வைக்கம் சத்தியாகிரகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு வழிவகுத் தது. அத்தகைய போராட்டங்களின் மூலம் வளர்ந்து வந்த மாற்றங்கள்தான் இன்று தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் ஆட்சி அதி காரத்துக்கு வழிவகுத்தது. பெரியார், அண்ணா துரை போன்றோரின் திராவிட முன்னேற்ற இயக்கத்தை காலத்துக்கு ஏற்ப அரசியல் படுத்தி முன்னெடுத்து செல்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. சீர்திருத்த இயக்கத்திடமிருந்து ஊக்கம் பெற்று மனிதாபிமானம் கொண்ட ஒரு புதிய சமூகத்தைப் படைக்க கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது. சீர்திருத்த இயக்கத்தின் உன்னத நோக்கங் களை முன்னெடுத்துச் செல்லும் இரண்டு நீரோட்டங்களின் இத்தகைய சங்கமம், வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டை யொட்டி இங்கு சாத்தியமாகி இருக்கிறது என்பது அதிக முக்கியத்துவம் கொண்டதாகும்.
– வைக்கம் விழாவில் இருந்து நேரடித் தொகுப்பு: சி.முருகேசன்
நன்றி: தீக்கதிர்,4.4.2023