505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றி உறுதி!

0 Min Read

முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது
மகளிர், இளைஞர் ஆதரவு அதிகரித்துள்ளது!
ஆட்சியில் அமரப் போவது தளபதி மு.க.ஸ்டாலினே!

கோபி, ஏப்.13  தி.மு.க. கூட்டணி வலுவானது – மகளிர், இளைஞர் ஆதரவு நாளும் பெருகி வருகிறது. மக்கள் நல அரசான ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

நேற்று (12.4.2026) தேர்தல் பரப்புரைக்காக கோபிச்செட்டிப்பாளையத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தமிழ்நாட்டில் வழக்கமாக தி.மு.க. – அ.தி.மு.க. என்று இரண்டு முனைப் போட்டிதான் இருக்கும். இந்த முறை, த.வெ.க. என்ற ஒரு கட்சி வந்ததி னால் மூன்று முனைப் போட்டி, நாம் தமிழர் கட்சியும் சேர்த்தால் நான்கு முனைப் போட்டியாக இருக்கிறது.  இந்தத் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும்?

தி.மு.க. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெறும்!

தமிழர் தலைவர்: எப்போதும் போல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40–க்கு 40 என்று தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதோ, அதே நிலைதான் இப்போதும். அதிகமான பலத்தோடு, சென்ற முறை பெற்ற வெற்றியின் எண்ணிக்கையைத் தாண்டி, நிச்சய மாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெறும்.

மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, மே 5 ஆம் தேதி மீண்டும் பதவியேற்கக்கூடிய வாய்ப்பு முழுக்க முழுக்க யாருக்கு என்றால், முதல மைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் வருவார்கள். இரண்டாம் முறை ஆட்சி அமைப்பார்கள்.

அவர்களே சொன்னதுபோல, ஆலமரத்து ஜோசியர்களுக்கு வேலையில்லாமல், அப்போது நிரூபித்துக் காட்டுவார்.

தேர்தலுக்குப் பிறகு, .தி.மு.. என்ற ஒரு தனிக் கட்சி இருக்குமா? என்பது சந்தேகமே!

செய்தியாளர்: கடந்த தேர்தலில், பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று சொன்ன அ.தி.மு.க., சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணி வைத்திருக்கிறது. தேர்த லுக்குப் பிறகு, அ.தி.மு.க.வினுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும்?

தமிழர் தலைவர்: தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க. என்ற ஒரு தனிக் கட்சி இருக்குமா? என்பதும், முதலமைச்சர் கனவில் இருக்கின்ற எடப்பாடியார் போன்றவர்களுக்கு பலத்த ஏமாற்றமும் ஏற்படும். அந்த ஏமாற்றம் சாதாரணமாக இருக்காது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு பரிதாபத்திற்கு ஆளாவார்.

மின்மினிப் பூச்சிகள்மின்சாரப் பல்புக்கு இணையாகாது!

செய்தியாளர்: எடப்பாடியார், நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியோடு சேர்ந்து, முதலமைச்சராகலாம் என்ற கனவில் இருந்தார். அந்தக் கனவை நாங்கள் தகர்த்துவிட்டோம் என்று செங்கோட்டையன் சொல்லி யிருக்கிறாரே, அந்த அளவிற்கு த.வெ.க.விற்கு செல்வாக்கு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: மின்மினிப் பூச்சிகள் ஏராளமாக இருக்கும் இரவில். ஏராளமான மின்மினிப் பூச்சிகள் இருப்பதினால்,  அது ஒரு மின்சாரப் பல்புக்கு இணை யாகாது.

இருட்டில் மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே பார்க்கும்போது, வெளிச்சம்போல் தோன்றும். அது ஒரு தோற்றப் பிழை.

தோற்ற பின், தாங்கள் எடுத்த நிலை பிழை என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

செய்தியாளர்: புதுவை சட்டமன்றத் தேர்தலில், வழக்கத்தைவிட 91 சதவிகிதம் வாக்குப் பதிவாகி இருக்கிறது. இந்த அளவிற்கு வாக்குப் பதிவானதை எந்த மாதிரியான மனநிலையில் பார்க்கிறீர்கள்?

ஜனநாயகத்தினுடைய உணர்வை
மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்

தமிழர் தலைவர்: பொதுவாகவே முன்பு இருந்த தைவிட, அதிகமான அளவிற்கு ஜனநாயகத்தினுடைய உணர்வை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

புதுவையில் மட்டுமல்ல, கேரளாவில், மற்ற மாநிலங்களிலும். தமிழ்நாட்டிலும் அந்த உணர்வு இருக்கிறது.

வாக்குச் சதவிகிதம் அதிகமாவதினால், வெற்றி பெற்றுவிடுவோம் என்று அவர்கள் நினைப்பது தவறு. இவையெல்லாம் யூகங்கள். யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.

அதேபோன்று, பெண்கள் அதிகமாக வாக்களித்தி ருக்கிறார்கள். பெண்கள் குறைவாக வாக்களித்திருந்தால், இப்படி முடிவு வரும்; அதிகமாக வாக்களித்தால், அப்படி வரும் முடிவு என்பதெல்லாம் பழைய காலத்து டிரண்ட்.

அவையெல்லாம் இப்போது இல்லை. பத்திரிகை யாளர்களுக்குத் தீனி கிடைக்கவேண்டுமே என்பதற்கான செய்திகளே தவிர, மற்றபடி சாரமுள்ள அம்சம் இல்லை அது.

செய்தியாளர்: ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளி வருவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. வெளிவருவதற்கு முன்பே இணையத்தில் வெளி யிடப்பட்டு இருக்கிறது. அந்தத் திரைப்படம் வெளி வருவதற்குத் தாமதமாவதற்குக் காரணம், தமிழ்நாடு அரசுதான் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின்மீது எந்தவிதக் குற்றச்சாட்டையும் சொல்லவில்லையே?

அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்ற ஒரு திரைப்படம், எப்படி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது?

தமிழர் தலைவர்: இதுவரையில், அவர்கள் போட்ட எல்லா திட்டங்களும் வெற்றி பெறவில்லை. அந்தத் திரைப்படத்தைத் தணிக்கைத் துறை தடுத்த நேரத்தில்கூட, தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதற்குக் கூட அவர் தயாராக இல்லை.  மற்ற வர்கள்தான், தணிக்கைத் துறைமீது கண்ட னங்களைத் தெரிவித்தார்கள் முதலமைச்சர் உள்பட உரிமைக்காக வாதாடினார்கள்.

ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் மூச்சுவிடவில்லை. பிறகு, எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். தேர்தலுக்குள் ஒரு பெரிய புரட்சியை செய்வோம் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் சொன்னார்கள், ஆனால், எதுவும் நடக்கவில்லை.

அப்படி நடக்காத சூழ்நிலையில், என்ன நடந்தது என்று கேட்டால், ஒரு செய்தி உலாவிக்கொண்டு இருக்கிறது.

அது என்னவென்று கேட்டால், 15.3.2026 அன்று, தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மக்களைத் தம் பக்கம் ஈர்க்க, ஒரு ‘‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’’ வைத்தி ருக்கிறோம். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய ஒருவர் சொல்லியிருக்கிறார்.

அதற்கு என்ன அடையாளம் என்றால்,  திடீரென்று இப்போது அந்தத் திரைப்படம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தத் திரைப்படம் யாருடைய பொறுப்பில் இருக்கிறது என்று சொன்னால், முழுக்க முழுக்க அந்தத் திரைப்படத்தை எடுத்த வர்களுடைய பொறுப்பில்தான் இருக்கிறது.

அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்ற ஒரு திரைப்படம், எப்படி இணைய தளத்தில் வெளியி டப்பட்டது? இதற்கும், தணிக்கை வாரியத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

ஏற்கெனவே, அந்தத் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. ஏப்ரல் 23 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள்ளாக ஏதாவது செய்யலாமா என்று நினைத்தார்கள். ஏனென்றால், தங்களுடைய முதலமைச்சர் கனவு பலிக்கப் போவ தில்லை. இப்போது, ‘‘உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும்’’ என்று சொல்லக்கூடிய நிலைக்கு அந்த நடிகரே ஆளாகிவிட்டார்.

ஏனென்றால், எந்த இடத்திற்குப் போனாலும், அவர் அமைதியாகத் திரும்பி வருவதில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும், இரண்டு சாவு அல்லது காயம் என்ற நிலைதான்.

எனவே, அவர்களுக்கு மட்டும் காயமில்லை. அவர் செய்கின்ற ஜனநாயகத்திற்கே காயம்!

இவருடைய காயத்திற்குக்கூட மருந்து போடலாம்; ஜனநாயகத்திற்கு மருந்து போடக்கூடிய ஒரு சக்தி, ஸ்டாலின் அவர்களிடத்தில்தான் இருக்கிறது; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டும்தான் இருக்கிறது.

மற்றவற்றிற்கெல்லாம் சி.பி.அய். விசாரணை கேட்டாரே, இதற்கு ஏன் சி.பி.அய். விசாரணை கேட்கக்கூடாது அவர்.

முழுக்க முழுக்க சி.பி.அய். விசாரிக்கச் சொல்லிக் கேட்கலாமே!

யார், ஜனநாயகன் திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டது? அதற்கு என்ன காரணம்? என்று கேட்கலாமே!

ஆகவேதான், இது எங்கேயோ போய், பெரிய விழாவிற்குப் போய் திரும்பும்போது, ஆள் காணாமல் போனதுபோன்ற சூழ்நிலை ஏற்படுகிறதே தவிர, இது முழுக்க பல்வேறு தந்திரங்களில், தேர்தல் உத்திகளில் ஒன்றாக இது பயன்பட்டு இருக்கிறது.

அதைவிட, அந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரே, அதைச் சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்.

புதிய வரலாற்றை
தி.மு.. படைக்கப் போகிறது!

செய்தியாளர்: அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, அந்தத் திரைப்படத்தைத் திட்டமிட்டுத்தான் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று சொல்கிறீர்களா?

தமிழர் தலைவர்: இதற்குமேல் இதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ஆகவே, அதைப்பற்றி நாம் பேசவேண்டிய அவசியமில்லை.

நம்முடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால், தேர்தல் நெருங்க நெருங்க எல்லாவிதமான உத்தி களையும் கையாளுவார்கள். இன்னும் சிலர் வித்தை களையெல்லாம் காட்டுவார்கள். இது, கடந்த காலத்தில் நாம் பார்த்து வந்த அனுபவம்.

அதேபோன்று, 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, நாங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். சேலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு, பெரியார் இப்படி செய்துவிட்டார்; திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி செய்துவிட்டது’’ என்றெல்லாம் சொன்னார்கள்.

இனிமேல் தி.மு.க. வெற்றி பெறாது, தி.மு.க. வெற்றி பெறாது என்று சொல்லக்கூடிய சூழல் இருந்தபோது, என்ன நடந்தது என்று சொன்னால், அதற்குமுன் 138 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க., 1971 தேர்தலில், 184 இடங்களில் வெற்றி பெற்றது.

அந்த வரலாறு கலைஞர் காலத்தில். இந்த வர லாற்றைத் தாண்டி, புதிய வரலாற்றை தி.மு.க.வே படைக்கப் போகிறது. அதுதான், வருகின்ற 23 ஆம் தேதி தேர்தல் முடிந்து, மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியும்.

இது என்ன யூகமா? நம்முடைய ஆசையா? என்ப தில்லை.  எங்களுக்கு ஆசையும் கிடையாது, யூகமும் கிடையாது. நாங்கள் பகுத்தறிவாளர்கள்.

கடந்த 6 ஆம் தேதிமுதல், திருநெல்வேலியில் தொடங்கி, பல தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். இப்போது தாய்மார்கள் உள்பட, எங்கள் உரையை அவர்கள் உள்வாங்குவதும், மகிழ்ச்சிகரமாக இருப்பதும், நீங்கள் சொல்வது நியாயம்தானே? என்று சொல்லக்கூடிய அளவில் இருப்பதும் வெளிப்படை.

‘‘பொய் நெல்லைக் குத்தி, புதுப்பொங்கலிடலாம்’’ என்று நினைக்கிறார்கள்!

இதற்குமுன், தேர்தல் பரப்புரையின்போது பெண்கள் வருவார்கள்; உரையைக் கேட்பார்கள். அதற்குமேல் வேறு ‘ரியாக்‌ஷன்’ இருக்காது. இப்போது, அந்த வாய்ப்புகள் இருக்கின்றன, இது ஒன்று.

இரண்டாவது காரணம், தோல்வியைத் தெரிந்து கொண்ட காரணத்தினால்தான், எடப்பாடியார் போன்ற வர்கள், அண்ணாமலைகளை அழைக்க வேண்டிய அவசியத்திற்கு வந்திருக்கிறார்கள்.

தேர்தலில் நிற்பதற்கு ஓரிடம்கூட கொடுக்காத பா.ஜ.க. – கடைசியில் ஏதாவது பொய் மூட்டைகளை அவிழ்க்கவேண்டும் என்று முயற்சிக்கிறது.

‘‘பொய் நெல்லைக் குத்தி, புதுப்பொங்கலிடலாம்’’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நடக்காது.

சாதனைகளைச் சொல்லி, ஒன்று, இரண்டு திட்டங்கள்; இந்தத் திட்டங்களை விரிவுப்படுத்தவேண்டாமா? என்று மக்களிடையே கேட்கும்போது, அதை மக்கள் உணருகிறார்கள். அந்தத் திட்டத்தின் தேவைகள் மக்களுக்கு இருக்கிறது. இது மூன்றாவது காரணம்.

நான்காவது காரணம் என்னவென்றால், எதிர்க்கட்சிகள் எல்லாம் இன்றைக்கு ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்களே எதிரணியில். ஆனால், அவர்களுடைய கட்சி ஒன்றாக இல்லை. அப்பாவும், பிள்ளையும் தனித்தனிக் கட்சி. தென்மாவட்டங்களில் இருக்கக்கூடியவர்கள், ‘‘நான்தான் அவரை முதலமைச்சராக்கினேன்; ஆனால், அவருக்குக் கொஞ்சம்கூட நன்றியில்லை; என்னுடைய உயிருக்கே ஆபத்து இருந்தது’’ என்று சசிகலா போன்றவர்களே சொல்லக்கூடிய நிலை. சிதறு தேங்காய் போன்று இருக்கிறது எதிர்க்கட்சி கூட்டணி.

ஆகவே, அவர்கள் பலமுள்ளபோதே அவர்களைத் தோற்கடித்த பெருமை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு உண்டு.

பொது அறிவு உள்ள எல்லோருக்கும் புரியும்!

இந்தக் கூட்டணி அன்றைக்கு எவ்வளவு பலமாக இருந்ததோ, இன்றைக்கு அதைவிட அதிகமான கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்து, சென்ற முறை எதிர்த்தவர்கள் எல்லாம், இந்தக் கூட்டணிக்கு வந்து, இந்தக் கூட்டணியின் பலம் பெருகியிருக்கிறது. எதிரணியின் பலம் குறுகி இருக்கிறது, குறைந்திருக்கிறது. அந்தக் கூட்டணியில் உள்ளவர்களும் பலமானவர்கள் அல்ல. சரி பகுதி, சரி பகுதி என்று துண்டு துண்டாகப் பிளவுபட்டு இருக்கிறார்கள்.

ஆகவே, அரசியல் ரீதியாக ஒரு கணக்குப் போட்டால், தெளிவாகத் தெரியும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான், பொது அறிவு உள்ள எல்லோருக்கும் புரியும்.

மக்களுக்கான நலத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறதுதிராவிட மாடல்ஆட்சி

செய்தியாளர்: தொடர்ந்து நீங்கள் தேர்தல் பரப்பு ரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மக்களுடைய வரவேற்பு, எழுச்சி எந்த அளவிற்கு இருக்கிறது?

தமிழர் தலைவர்: மக்களுடைய வரவேற்பு  அபரிமிதமாக இருக்கிறது. காரணம் என்ன வென்றால், மக்களுக்கான நலத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி.

அந்தத் திட்டங்கள் விரிவாக வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

‘சொன்னதை செய்திருக்கிறது’ திராவிட மாடல் அரசு.

செய்யவில்லை, செய்யவில்லை என்று எதிர்க்கட்சி யினர் சொன்னபோது, கனிமொழி அவர்கள் ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்தார். 505 வாக்குறுதிகளில், 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள 101 வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்றால், அது எங்களால் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அனுமதி இல்லாததால்தான்’’ என்று மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். மக்களும் அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது மகளிருடைய வரவேற்பு, இளைஞர்களுடைய தெளிவு என்பது அதிகமாக இருக்கிறது.

ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களை எல்லாம் வாக்குகளாக மாற்றிவிட முடியாது.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *