அம்ரோகா, ஏப்.13- பாம்பு கடித்த 14 வயது சிறுவனை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியை நம்பியதால் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
14 வயது சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை ஒரு பாம்பு கடித்துவிட்டது. இதுகுறித்து தெரிய் வந்ததும் அந்தச் சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று மாந்திரிக உதவியுடன் பாம்பு விஷத்தை இறக்கி அவனை குணப்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
அதற்கு அந்த மந்திரவாதி சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால் அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்குமாறு செய்ய வேண்டும். அப்படி செய்தால் பாம்பு விஷம் தானாகவே வெளியேறிவிடும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்தச் சிறுவனின் பெற்றோர் அவனை கங்கை நதிக்கு தூக்கிச் சென்று அவனை 12 மணி நேரம் கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்கும்படி செய்தனர்.
இந்த விபரீத காணொலிக் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வழியாக சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததும் அவன் உயிரிழந்தது தெரிய வந்தது.
பாம்பு கடிக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்து இருந்தால் அந்தச் சிறுவன் உயிர் பிழைத்திருக்கக் கூடும். ஆனால், மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு போலி மந்திரவாதிகள் உயிரோடு விளையாடுகிறார்கள். அந்த மந்திரவாதியை கைது செய்ய வேண்டும் என்றும் பாம்பு கடிக்கு மருத்துவ சிகிச்சையே முதன்மையானது என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் சமூக வலைதளங்கள் வலியுறுத்தியுள்ளன.

