பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஏப். 5- நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.4.2023) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக் கரிக்கான சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தியுள்ள தீவிர மான பிரச்சினையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நிலக்கரி சுரங்கங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ், 17ஆவது மற்றும் 7ஆவது பாக ஏலத்தை ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின்கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் கடந்த மார்ச் 29ஆம் தேதி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் முன், தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. இத் தகைய முக்கியமான விஷயத்தில், மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய இந்த 3 பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளன. இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்கு பகுதிகள், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
அதேநேரம், மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டா வின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய, பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது. “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் இரண்டாவது அட்டவணையில், எந்த புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் யாரும் மேற்கொள்ளக்கூடாது” என்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில், “நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷெல் எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்” ஆகியவை அடங்கி யுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்த நிபந்தனை களில், நிலக்கரிப் படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப் பட்டுள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் தடைக்குள் அடங்கும். இதன்படி, இந்த ஏல அறிவிப்பு செயல்முறைப்படுத்தப்பட்டு, ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது.
எனவே, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, இந்த ஏல நடைமுறை வீண் செயலாகும். இந்த விஷயத்தில், அறிவிக்கை வெளியிடும் முன்னரே தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்திருந்தால், இது குறித்து தெளிவுபடுத்தியிருப்போம். மேலும், ஏல அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தையும் தவிர்த்திருக்கலாம். அப்பகுதியில் மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பதாலும், தமிழ்நாட்டில் உள்ள 3 சுரங்க வட்டாரங்களான வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தி யாத்தோப்பு கிழக்கு ஆகிய பகுதிகளை ஏலத்தில் இருந்து விலக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசு தொடர்புடைய பொது அறிவிப்புகளை வெளியிடும் முன்பு, மாநில அரசின் துறைகளுடன் ஒன்றிய அரசு ஆலோ சிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட் டுள்ள நிலைமையை சரி செய்து, தேவையற்ற போராட்டங் களையும், குழப்பங்களையும் தவிர்க்க தக்க நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.