ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்றுபடுத்துவோம்!
எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்;
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!
கடலூர், ஏப்.5 ‘‘ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்று படுத்துவோம்! எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழா
கடந்த 31.3.2023 அன்று மாலை கடலூரில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நாங்கள் சேற்றிலே கால் வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது!
எங்கள் ஜாதியில் ஏழைகள் இருக்கிறார்கள்; எங்கள் ஜாதி என்றால், எனக்கு ஜாதியில்லை; எங்கள் தோழர்களுக்காக சொல்கிறேன். எங்கள் உழைப்பாளிகள், எங்கள் பாட்டாளிகள், அவன் நாளெல்லாம் உழைக்கின்றானே, அவன் சேற்றிலே கால் வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது. அப்படிப்பட்ட எங்கள் அருமைச் சகோதரன் கீழ்ஜாதி, தொடக்கூடாத ஜாதியா?
தீண்டத்தகாதவர்கள் அல்ல; நெருங்கத் தகாதவர்கள்; பார்க்கத்தகாதவர்கள்!
இன்றைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடிய வைக்கத்தில் என்ன பெருமை என்றால், நாம் இதுவரையில் தீண்டத்தகாதவர் என்கிற வார்த்தையைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம்; ஆனால், அங்கே என்ன தெரியுமா? தீண்டத் தகாதவர்கள் அல்ல; நெருங்கத் தகாதவர்கள்; பார்க்கத்தகாதவர்கள்.
பார்த்தாலே தீட்டு என்று சொன்னார்கள். எவ்வளவு மடத்தனம் இது? இன்னமும் அந்த உணர்வு இருக்கிறதா? இல்லையா? அதை ஒழிப் பதற்கு நாம் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டாமா?
அதற்காகத்தான் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றோம்.
அடையாளத்திற்குக்கூட
ஜாதி இருக்கக்கூடாது
ஜாதி எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அழித் தொழிக்கவேண்டும். அடையாளத்திற்குக்கூட ஜாதி இருக்கக்கூடாது. பெரியார்தான் சொன்னார்.
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை, பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.
ஆணவக் கொலை என்கிறார்கள்; நீதிமன்றத்தில் நேற்றுகூட சொல்கிறார்கள்; ஒருவன், தான் விரும்பிய பெண்ணை, திருமணம் செய்துகொள்கிறார். அதற்காக இன்னொரு ஜாதிக்காரன் ஆத்திரப்பட்டு, கோபப்படு கிறான்.
கொலையில் என்ன கவுரவக்கொலை?
ஆணுக்கு 23 வயது; பெண்ணுக்கு 21 வயதிற்குமேல் ஆகிறது; ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல், அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டது அவமானம் என்று சொல்லி, கவுரவக் கொலை செய்கிறார்கள். கொலையில் என்ன கவுரவக்கொலை?
நாங்கள்தான் அதற்குப் பெயர் ஆணவக் கொலை என்று சொன்னோம்.
பெற்று வளர்த்தப் பிள்ளையை எப்படி கொல்ல மனம் வரும்? அதற்குத் தாயும் துணை போகிறார்.
ஜாதி வெறி எவ்வளவு தூரம் மனிதர்களை மிருகமாக்கியிருக்கிறது என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை, பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!
வயதானவர்களின் காலத்தில்தான் இதுபோன்று இருந்தது; நம்முடைய காலத்திலாவது மிகத் தெளிவாக, ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை, பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.
நேற்றுகூட சிதம்பரத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் சொன்னேன். நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்கிறோம்; இன்னும் கிராமப் பகுதிகளில் இரட்டைக் குவளை முறை இருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில், தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அது எந்த ரூபத்தில் வந்தாலும் அது சட்டப்படி தவறாகும் என்று உள்ளது.
அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறது; நடைமுறையில், இரட்டைக் குவளை.
ஒரு குவளை பொதுத் தொகுதி; இன்னொரு குவளை ரிசர்வ் தொகுதி.
வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு நாம் முழுத் தகுதியைப் பெற்றவர்களாக வேண்டும். இதற்கு இன்னொரு நூற்றாண்டை எடுத்துக்கொள்ள வேண்டுமா?
அன்றைக்கு கேரளத்தில் உள்ள வைக்கத்தப்பன் கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களில் ஈழவர்கள் நடப் பதற்கான உரிமையைப் பெற்றுத் தருவதற்காக மக் களைத் திரட்டி மிகப்பெரிய அளவிற்குத் தந்தை பெரியார் போராடினார்.
கிராமப்புறங்களில் தேநீர்க் கடையில்
இரட்டைக் குவளை முறை!
இன்றைக்குக் கிராமப்புறங்களில் தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை இருந்தால் என்ன அர்த்தம்?
அந்தத் தேநீர்க் கடைக்காரரிடம் சென்று நம்முடைய கழகத் தோழர்கள் சண்டை போட்டால், அந்தத் தேநீர்க் கடைக்காரரின் பதில் மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது.
‘‘இதை நான் வைக்கவில்லை அய்யா. இப்படி இல்லை என்றால், மற்றவர்கள் டீ வாங்கிக் குடிக்கமாட் டார்கள்; நான் தொழில் நடத்தவேண்டாமா?” என்று கண்ணீர் விட்டுச் சொல்கிறார்.
சாராயம் எதைச் செய்கிறதோ, இல்லையோ,
ஜாதி மனப்பான்மையை ஒழித்துவிட்டதே!
தேநீர்க் கடையைவிட்டு, கொஞ்ச தூரம் சென்றால், அங்கே டாஸ்மாக் கடை. அந்த டாஸ்மாக் கடைக்கு நான்கு பேர் செல்கிறார்கள்; நான்கு பேரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள்; வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். தேவையானவற்றை வாங்கிக்கொண்டு, ஏதாவது காலியான இடம் இருக்கிறதா? என்று பார்க் கிறார்கள்.
ஏனென்றால், சகோதரத்துவம், அங்கேதான். சமத் துவம். சுதந்திரம் – அங்கே ஒரே கிளாஸ்தான். இரண்டு கிளாஸ் கிடையாது.
நான்கு ஜாதிக்காரர்களுக்கும் ஒரே கிளாஸ்தான். அங்கே இருக்கின்ற தோழமையையும், சகோதரத்துவத் தையும் பார்த்தீர்களேயானால், பொங்கி வழிகிறது.
ஒரு அரை கிளாஸ் உள்ளே போன பிறகு, இவனை அவன் கட்டிப்பிடிக்கிறான்; அவன் இவனைக் கட்டிப் பிடிக்கிறான்.
இன்னும் கொஞ்சம் அதிகமான சரக்கு போனவுடன், ‘‘பிரதர்” என்று சொல்கிறார்கள். இங்கிலீஷில் வேறு பேசுகிறார்கள், அதுதான் வேடிக்கை. சாராயம் எதைச் செய்கிறதோ, இல்லையோ, ஜாதி மனப்பான்மையை ஒழித்துவிட்டதே!
நீங்கள் சிரிப்பதற்காக நான் சொல்லவில்லை, சிந்திக்க வேண்டும்!
இதை நினைத்தால் வெட்கமாக இல்லையா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே! இதை நீங்கள் சிரிப்பதற்காக நான் சொல்லவில்லை, சிந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன்.
ஜாதியை ஏற்காதவர்களை
நாம் ஒன்றுபடுத்துவோம்!
எனவே, ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்கிற வர்கள், மனித குலத்தினுடைய எதிரிகள் என்று கருதுங்கள்.
ஜாதிப் பெருமையைப் பேசுகிறவர்கள், மனித சமூக விரோதி என்று கருதுங்கள். ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்றுபடுத்துவோம்; அதுதான் மிகவும் முக்கியம். மிக முக்கியமாக சிந்திக்கவேண்டிய விஷயம்.
சிலர் புரியாமல் சொல்வார்கள்; ஜாதி இல்லை என்று வீரமணி சொன்னார்; சரிதான். ஆனால், ஜாதி அடிப் படையில்தானே அவர்கள் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் என்பர்.
ஒரு மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் அவர்களுடைய கணக்கில் ஏழைகள்!
பொருளாதாரத்தில் நலிந்த ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் எதிர்க்கிறார்கள் என்கிறார் களே, அந்த ஏழைகள் யார்? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வித்தி யாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பச்சைக் கொடிக்கும், பச்சைப் பாம்புக்குள் உள்ள வித்தியாசத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
உயர்ஜாதி ஏழை என்று சொல்லப்படுபவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.2222 சம்பாதிக்கின்றவர், ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் அவர்களுடைய கணக்கில் ஏழைகள்.
எவ்வளவு ஏமாற்று வேலை என்பதை நினைத்துப் பாருங்கள். அவன் பெரிய பதவியில் இருக்கிறான், அவனுக்கு எல்லா வசதிகளையும் உண்டாக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்கிறீர்கள்;
நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். ஏழைகள், எங்கள் சமுதாயத்தில்தானே இருக்கிறார்கள்; உழைக்கின்ற சமு தாயத்தில்தானே இருக்கிறார்கள்; பாடுபடுகின்ற சமு தாயத்தில்தானே இருக்கிறார்கள்; வயல்வெளியில் வேலை செய்கின்ற சமுதாயத்தில்தானே இருக்கிறார்கள்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், நீங்கள் புரிந்து கொள்வதற்காக!
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களில்
எத்தனை பேர் உயர்ஜாதி ஏழைகள்?
100 நாள் வேலை திட்டத்தில் எங்களுடைய தாய்மார்கள் செல்லுகிறார்களே – அந்த 100 நாளும், 100 ரூபாய் கிடைக்குமா? என்பது வேறு.
எப்படியிருந்தாலும், அந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களில் எத்தனை பேர் உயர்ஜாதி ஏழைகள்?
எந்தப் பாப்பாத்தியம்மாள் மேலும் நமக்கொன் றும் கோபமில்லை. உங்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
மேல்ஜாதிக்கார சமுதாயத்தைச் சேர்ந்த எந்த பெண்ணாவது 100 நாள் வேலை திட்டத்திற்குச் செல்கிறார்களா?
எங்கள் தாய்மார்கள், எங்கள் சகோதரிகள்தானே கூடையையும், மம்முட்டியையும் எடுத்துக் கொண்டு போகிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டாமா?
சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டும் என்றால், ஜாதியை ஒழிக்கவேண்டும்!
ஒரு பக்கம் ஜாதியை வளர்க்கிறார்கள்; இன்னொரு பக்கம் ஜாதி ஆணவக் கொலையை செய்துகொண் டிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்றால், நாம் என்ன செய்யவேண்டும்?
சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டும்.
அந்த சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டும் என்றால், ஜாதியை ஒழிக்கவேண்டும். அதற்கிடையில் இருக்கின்ற பாலம்தான் மிகவும் முக்கியம்.
சாலை விரிவாக்கத்திற்காக, சாலையை அகலப்படுத்து கிறார்கள். அப்படி அகலப்படுத்தும்பொழுது, பாலம் வருகிறது; பாலம் கட்டி முடிப்பதற்கு நீண்ட நாள்களாகும். அதற்காக ஒரு மாற்றுப் பாதையை போடுகிறார்கள்; அதற்குப் பெயர் டைவர்சன் ரோடு – அதுபோன்றதுதான் இட ஒதுக்கீடும் மாற்றுப்பாலம். ஜாதி அடிப்படையில் வரக்கூடியது மாற்றுப் பாலம்.
அதுமட்டுமல்ல, நோய்க்கு ஆண்டிபயாடிக் மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து பாட்டிலில் பார்த்தீர் களேயானால், பாய்சன் என்று எழுதி இருக்கும்; விஷமா கொடுக்கிறோம், இல்லையே! அந்த மருந்தில், குறிப்பிட்ட அளவு விஷத்தைச் சேர்த்தால்தான், அது நோய்க் கிருமிகளைக் கொல்லும். அதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு விஷத்தைச் சேர்ப்பார்கள்.
ஜாதி என்கிற விஷத்தைத்தான் பயன்படுத்தவேண்டி இருக்கிறது!
அதுபோன்று, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே – நான் தெளிவாகச் சொல்கிறேன், நம்முடைய இளைஞர்களுக்குச் சொல்கிறேன் – ஜாதியை ஒழிக்கின்ற வரையில், எந்த வழியாக நீங்கள் காலங்காலமாக படிக்கக்கூடாது என்று சொல்லி, அழுத்தி வைத்திருந்தார்களோ, அதற்காக நோயை சரிப்படுத் துவதற்காக சிறிதளவு விஷம் சேர்த்து மருந்து கொடுத்து, அந்தக் கிருமியைக் கொல்வதுபோன்று, ஜாதி என்கிற விஷத்தைத்தான் பயன்படுத்தவேண்டி இருக்கிறது.
இன்னும் சில புத்திசாலிகள் புரியாமல் சொல்வார்கள்; ‘‘ஏங்க, அவர் விஷத்தைக் கொடுத்துத்தானே கொல்லவேண்டும் என்று சொன்னார்; அப்படியென்றால், நேரிடையாக விஷத்தை எடுத்துக்கொண்டால் என்ன?” என்று சொல்லும், ஜாதி வெறியராக இருந்தால், சரியாக இருக்குமா?
ஜாதியை அழிப்பதற்காகத்தான்,
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு!
எனவேதான், ஜாதியை அழிப்பதற்காகத்தான், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சமூகநீதியை இப்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை மக்களிடம் சொல்லவேண்டும்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில், அருமையான சாலைகளை போடுகிறார்கள். எல்லா இடங்களிலும் பாலங்கள் இருக்கின்றன. யாராவது நின்று பார்த்து, மிக அருமையாகக் கட்டி இருக்கிறார்களே, யார் கட்டியது? அவர்களுக்கு நன்றி என்றா சொல்லி விட்டுப் போகிறார்கள்?
நன்றி சொல்லவேண்டும் என்று
நினைப்பார்களா?
தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘நான் தண்ணீர்ப் பானை வைக்கிறேன்; தாகம் எடுக்கின்றவன் தண்ணீர் குடித்துவிட்டுப் போகிறான். யார் இந்தத் தண்ணீர்ப் பானையை வைத்தது என்று கண்டுபிடித்து, நன்றி சொல்லவேண்டும் என்று நினைப்பார்களா?” என்று.
அதுபோன்று இருக்கக்கூடிய சமுதாயத்தில், இந்தக் கூட்டம் வேடிக்கைக்காக அல்ல; நாங்கள் இவ்வளவு நாள்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றோம் என்றால், அது எங்களுக்காக அல்ல நண்பர்களே! உங்களுக்காக! உங்கள் பிள்ளைகளுக்காக; உங்கள் சந்ததியினருக்காக – உங்கள் வருங்காலத்திற்கான வாழ்வை – நம்முடைய தலைவர்கள் பெற்றுத் தந்தார்கள். பெரியார் பெற்றுத் தந்தார்; அம்பேத்கர் பெற்றுத் தந்தார்; நீதிக்கட்சிப் பெற்றுத் தந்தது; அண்ணா பெற்றுத் தந்தார்; காமராஜர் பெற்றுத் தந்தார்; கலைஞர் பெற்றுத் தந்தார். இன்றைய ஆட்சி நிறைய தந்துகொண்டிருக்கின்றது.
உங்களுடைய அன்பான ஒத்துழைப்பு
எல்லா ஊர்களிலும் கிடைத்தது
இவற்றையெல்லாம் காப்பாற்றவேண்டுமானால், நாம் விழிப்புணர்வோடு இருக்கவேண்டாமா? அந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான், இந்தப் பயணத்தை மேற்கொண் டோம். அதற்கு உங்களுடைய அன்பான ஒத்துழைப்பு எல்லா ஊர்களிலும் கிடைத்தது.
எனவேதான், வயதைப்பற்றிச் சொல்லும்பொழுது, பயலாஜிக்கல் ஏஜ் என்று சொன்னேன்; அதற்கடுத்து, பிசியாலாஜிக்கல் ஏஜ் என்று சொன்னேன். மூன்றாவது ஒன்றை சொல்லவில்லையே, விட்டுவிட்டாரோ என்று நினைத்திருப்பீர்கள்; அதுதான் சைக்காலஜிக்கல் ஏஜ்.
மனோதத்துவ ரீதியான வயது நம்மால் முடியும், நாம் இளைஞர்தான் என்று நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் வேகமாகச் செல்வீர்கள்.
நம்முடைய மாணவர் என்கிற முறையில், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும், எங்கள் எழுச்சித் தமிழர் கவனிக்கிறார் பாருங்கள்; அதுதான் மிகவும் முக்கியமானது.
சொல்லவேண்டிய நேரத்தில் சொன்னால்தான், நீங்கள் அந்த ஞாபகத்தோடு செல்வீர்கள். ஆகவே, வயதை நினைத்து ஒதுங்காதீர்கள்.
மனோதத்துவ ரீதியான வயதுதான்!
இளைஞர்களில் நிறைய பேர் முதியவர்கள் இருக்கிறார்கள்; முதியவர்களில் நிறைய பேர் இளைஞர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், மனோதத்துவ ரீதியான வயதுதான்.
எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!
எனவே, எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கேட்டு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மற்ற தலைவர்கள் எல்லாம் இங்கே வந்து, எங்களைப் பெருமைப்படுத்தி, உற்சாகப்படுத்தி 90 வயதை, மிக வேகமாகக் குறைத்து, 20 வயதாக்கி இருக்கிறார்கள்.
70 வயதைக் குறைத்ததற்காக அவர்களுக்கு நன்றி! பல பேர் 70 வயதானவுடன், திருக்கடையூருக்குச் செல்கிறார்கள்; அங்கே செல்லவேண்டாம்; கடலூர் வந்தால் போதும். இதுபோன்ற பொதுக்கூட்டங்களைக் கேட்டாலே போதும்.
வாய்ப்பளித்த அத்தணை பேருக்கும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களுக்கும், தோழர்கள் அத்துணை பேருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறி, விடைபெறுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
உழைத்த தோழர்களுக்குப் பாராட்டு!
மாநாடு மிகப்பெரிய அளவிற்கு வெற்றி மாநாடாக அமைந்ததற்கு உழைத்த தோழர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.