பெரியார் பிரிவினைவாதியா?

8 Min Read

பொதுப்பணியில் தொடங்கினார்

1919 முடிய பெரியார் தனி மனிதராக, ஈரோட்டுக்காரராக பெருந்தனக்காரராக. பெரு வணிகராகவே அறியப்பட்டவர். சமூக நலத்தில் இயல்பாகவே பெரியாருக்கு இருந்த ஈடுபாடு காரணமாகக் கோவில் அறங்காவலர் முதல் ஈரோடு நகரவைத் தலைவர் முடிய பலப்பல பொதுச் சேவை நிறுவனங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தான் பொறுப்பேற்ற பொது நிறுவனங்களுக்கு உண்மையாக உழைத்தவர்; நேர்மையை நிலை நாட்டியவர். ஒரு பொது மனிதனைப் போல் நாட்டுப்பற்றிலும் நாட்டமுடையவராய்த் தான் அவர் வளர்ந்திருந்தார்.

காங்கிரஸில் பெரியார்

சமூகப் பணிக்கான தன் களத்தை விரிவாக்க முனைந்தபொழுது பெரியாருக்குக் காந்தியடிகள் மீது ஓர் ஈர்ப்பும் ஈடுபாடும் உண்டாயிற்று. தீண்டாமை. மதுவிலக்கு ஆகிய காந்தியாரின் இரு கொள்கைகளும் இயல்பாகவே பெரியாரின் சிந்தனைக்குப் பொருந்தி வந்தவையாகத் திகழ்ந்தன. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய நேரமது. பெரியாரும் நாட்டுக்குழைக்கும் காங்கிரஸில் சேர்ந்தார்; கதராடைக்கு மாறினார். ‘மூட்டை தூக்குவதால் ஏற்படும் உடல் வலியால் நான் வருந்தியிருக்கலாம்; ஆனால் மூட்டை தூக்குவது இழிவு என நான் எப்போதும் கருதியதில்லை’ என்ற கருத்துடைய பெரியார் கதர் மூட்டையைத் தோளில் சுமந்து காடு மேடு அலைந்து விற்றார். கள்ளுக்கடை மறியலுக்குத் தம் இல்ல மகளிரை அனுப்பினார். தன் தென்னந்தோப்பை வெட்டி அழித்தார். கொண்ட கொள்கையில் முழுமுனைப்புடன் ஈடுபாடு காட்டுவதுதானே பெரியார் குணம்!

பெரியார் காங்கிரஸில் சேர்ந்த நேரம், தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் தொடங்கப் பெற்ற நீதிக்கட்சியும் தளிர்த்து வளர்ந்து கொண்டிருந்த காலம்தான். ஆனால் நீதிக்கட்சி அந்நியராட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தது என்ற கருத்து சில நண்பர்களால் பெரியார். நெஞ்சில் விதைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பார்ப்பனரல்லாதார் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் பெரியார். அந்நியர் ஆட்சியை நம் நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டால்தான் நீதிக்கட்சியில் சேராமல் காங்கிரஸில் சேர்ந்தார். இதிலிருந்தே பெரியார் தேச விடுதலைக்கு எதிரி அல்லர் என்பதைத் தெளிவாக அறியலாம்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸில் சேர்ந்த பெரியார் தான் தொடர்பு கொண்டிருந்த அனைத்துச் சேவை நிறுவனப் பதவிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். ஈரோடு நகரவைத் தலைவர் பதவியையும் உதறினார். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல ஆயிரங்களை ஈட்டித் தந்த தனது வணிக நிறுவனத்தையும் இழுத்துப் பூட்டினார். தங்கள் வணிகத்தை வளர்க்கவே அரசியலுக்கு வரும் வல்லவர்களை மட்டுமே கண்டு கொண்டிருக்கும் நாம் பெரியார் போன்ற நல்லவரை எங்காவது காணமுடியுமா? இவரல்லவா நாட்டிற்குழைக்கவே வாழ்ந்த நாணயத்தார்! தன் தீவிர உழைப்பால் தமிழகமெங்கும் காங்கிரஸை வளர்த்தார். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றார். 1921இல் கள்ளுக்கடை மறியலில் முதன்முறையாகச் சிறைப்பட்டார். தம் வாழ்வில் எண்ணற்ற முறை சிறை சென்றிருந்தாலும் நாட்டின் விடுதலைக்காகவே முதல் முறை சிறை சென்றார் பெரியார்.

1921ஆம் ஆண்டிலேயே தன் மனைவியையும், தங்கையையும் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொள்ளச் செய்த காங்கிரஸ்காரர் – விடுதலைப் போராட்ட வீரர் நாட்டுப் பற்றாளர் யாராவது தமிழ் நாட்டில் அன்று இருந்தார்களா? பெரியார் மட்டுமே குடும்பத்துடன் காந்தியடிகளைப் பின்பற்றியவர்; இதே கால கட்டத்தில்தான் தீண்டாமைக்கெதிரான வைக்கம் போராட்டத்திலும் பெரியார் தீவிரமாக ஈடுபட்டார்; கொடுஞ்சிறைப்பட்டார். காந்தியாரின் இரு கண்களெனத் திகழ்ந்த மது விலக்கு, தீண்டாமை இரண்டிற்காகவும் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்த பெரியார் அன்று காந்தியாரின் பெருந் தொண்டராகக் காங்கிரஸை வழி நடத்தினார். காந்தியடிகளால் மதிக்கப் பெற்றார்.

ஆனால், அந்நியரிடமிருந்து நாட்டை மீட்கத் துடிக்கும் காங்கிரஸில். ‘நம்மவரில் ஒரு பகுதியினரை அடிமையாக்கி வைத்திருக்கிறோம்; அவர்களுக்கும் விடுதலை தர வேண்டும்’ என்ற எண்ணம் இல்லாதது தான் பெரியார் நெஞ்சில் எரியூட்டியது. வைக்கமும் சேரன்மாதேவியும் காரங்கிரஸ்காரர்களின் வருணாசிரமத்தை வெளிக்காட்டியது கண்டு பெரியார் வெகுண்டார். நாட்டை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதை விட மனிதனை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதே உண்மை விடுதலை என்பதில் உறுதிகொண்ட பெரியார் காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டார்.

வைக்கம் தந்த பாடம்

திருவாங்கூர் அரசிற்கெதிராகப் போராடி இருமுறை சிறைப்பட்டு வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்டவர் நடந்து செல்ல இருந்த தடையை உடைத்த பெரியாருக்கு இப்போராட்டத்தில் காந்தியாரோ தமக்குப் பெருந்தடையாக இருப்பதைக் கண்டு நொந்தார். வைக்கம் போராட்டம் குறித்து தமது Young India இதழில் பற்பல நாட்களில் 48 பக்கங்கள் எழுதிய காந்தியார் ஒரு இடத்தில்கூட ‘வைக்கம் வீரர்’ பெரியாரைக் குறித்துக் குறிப்பிடவே இல்லை என்பது காந்தியாரைப் புரிந்து கொண்டவர்களுக்கும் புரியாத செய்தி.

சேரன்மாதேவியில் காங்கிரஸ் தீண்டாமை

அதேபோல் சேரன்மாதேவி குருகுலத் தீண்டாமைச் செய்தி பெரியாரைத் திகைக்க வைத்தது. காங்கிரஸ், போலித் தேசபக்தர்களின் கூடாரமாகவே உள்ளது என்ற உண்மை கள்ளமற்ற பெரியாருக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. காங்கிரஸின் பண உதவியால் நடத்தப்பட்ட சேரன் மாதேவிக் குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் மாணவர்களுக்குத் தனித் தனி இடத்தில் உணவு பரிமாறப்பட்ட தீண்டாமை, தீவிரமாகப் பின்பற்றப்படுவதை அறிந்தார் பெரியார். இதில் அன்றையப் பார்ப்பனத் தலைவர்கள் அனைவருக்கும் பங்கிருந்தது. திருத்த முயன்றார்; எதிர்ப்பை அறிந்தார். இதுவா காந்தியார் கண்ட காங்கிரஸ்? என வெறுப்புற்றார்.

காந்தியாரும் பெரியாரும்

சேரன் மாதேவித் தீண்டாமையிலும் வைக்கம் போராட்டத்திலும் காந்தியாரின் நோக்கும் போக்கும் பெரியாரை வருத்தியது. நேரடியாகக் காந்தியாருடன் விவாதித்தார். காந்தியார் வருணாசிரமத்தில் வைத்திருந்த பற்று அப்போது தான் பெரியாருக்குப் புரிந்தது.

தீண்டாமை ஒழிப்பே நம் கொள்கை; சாதி ஒழிப்பல்ல

என்ற காந்தியாரின் சொற்கள் பெரியாரைத் திடுக்கிட வைத்தன.

பிராமணன் அவனவன் தருமத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாவது போலவே மற்ற வருணத்தானும் அவனவன் தருமத்தைச் செய்யும்போதுதான் உயர்ந்தவனாகிறான்.

என்ற காந்தியின் கருத்து. அவரது வருணாசிரம தருமத்தின் தெளிவான வெளிப்பாடே என்பதைப் புரிந்து கொண்டார். உலகத்திற்கே மகாத்மாவாகப் போற்றப்பட்ட காந்தியாருக்கே மனிதனின் உயர்வு தாழ்வுக் கருத்தில் ஏற்புடைமை இருக்கும்போது, சென்னையில் அவரைத் திண்ணையில் அமர வைத்த சாத்திரியார்களின் காங்கிரஸ் வருணாசிரம வசப்பட்டிருப்பதில் வியப்பில்லையே!

இட ஒதுக்கீட்டுத் தீர்மானம்:
காங்கிரசுக்கு வைத்த சோதனை

மனிதருள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம தருமத்தில் பற்றுக் கொண்ட காங்கிரசார் ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர் நிலை மேலும் தாழ்ந்து விடும் என்ற அச்ச உணர்வு பெரியாருக்கு எழுந்தது. எனவே காங்கிரசாருக்கு ஒரு சோதனை வைத்தார். நாட்டு விடுதலைக்குப் பின்னர் வழிமொழிய வேண்டிய இடஓதுக்கிட்டுத் தீர்மானத்தை அன்றே காங்கிரசின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் பெரியார் முன்மொழியத் தொடங்கினார். மனிதருள் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் தாழ்த்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்: அவர்களை மேலே தூக்கிவிடக் கல்வியிலும் அரசுப்பணிகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதைக் காங்கிரஸ் இப்போதே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அவரது இடஒதுக்கீட்டுத் தீர்மானம் பல முறை தோற்கடிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டுக் காங்கிரஸ்காரர்களின் வருணாசிரமம் நிலை நிறுத்தப்பட்டது.

காங்கிரசிலிருந்து வெளியேறினார்

1920 நெல்லை, 1921 தஞ்சை. 1922 திருப்பூர்.1923 சேலம், 1924 திருவண்ணாமலை ஆகிய இத்தனை இடங்களில் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் எல்லாம் இடஒதுக்கீட்டுத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இத்தனை தோல்விக்குப் பின்னரும் 1925 இல் காஞ்சிபுரத்தில் பெரியார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுத் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. பெரியார் வெகுண்டெழுந்தார். காங்கிரசை விட்டு வெளியேறினார்.

காங்கிரசை ஒழிப்பதே இனி என் வேலை

என அறிவித்தார். ஒரு குறிப்பிட்ட வகுப்பார் நலத்திற்காக மட்டுமே நாட்டு விடுதலையை விரும்பிய காங்கிரஸ் இயக்கம் தேச விரோத இயக்கமா? இந்நாட்டு மக்கள் அனைவரது நலத்திற்காகவும் நாட்டு விடுதலை அமைய வேண்டும் எனக் கூறிய பெரியார் தேச விரோதியா?

அந்நியனான வெள்ளையனை ஆதரித்தார் பெரியார் என்று சொல்லும் நம்மவருக்குப் பெரியார் பதில் சொன்னார்.

என்னைத் தொடக் கூடாது என்று சொல்பவனும். நான் தொட்டதைச் சாப்பிட மறுப்பவனும் அந்நியனா? உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை; தொட்டாலும் குற்றமில்லை எனச் சொல்லுபவன் (வெள்ளைக்காரன்) அந்நியனா?.

இந்தக் கேள்விக்கு விடுதலைக்குப் பின்னர் அறுபத்தியாறு ஆண்டுகள் கடந்த பின்னும் விடை கிடைத்திருக்கிறதா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியனாகத் தானே இன்னும் விலகியிருக்கிறோம்.

கடவுளையே எதிர்த்தவர்
காந்தியாரை எதிர்க்க மாட்டாரா?

காந்தியாரின் வருணாசிரம ஆதரவுக் கொள்கையால் அவரை எதிர்க்கத் துணிந்திருந்த பெரியாருக்கு லண்டன் வட்ட மேசை மாநாட்டில் காந்தியார் தெரிவித்த கருத்து மேலும் அதிர்ச்சியளித்தது. விடுதலைக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் லண்டனில் வட்ட மேசை மாநாட்டில், இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை ஆங்கிலேயர் ஏற்றுக் கொண்டனர். அப்போது காந்தியார், ‘இது என் தேசாபிமானத்திற்கே எதிரானது. என் உயிரைக் கொடுத்தும் இதைத் தடுப்பேன்’ என ஆத்திரப்பட்டார். நம் மக்களைத் தனி ஒதுக்கீடு மூலம் பிரிக்கப் பார்க்கும் வெள்ளையர் சூழ்ச்சி எனக் காந்தியார் கருதியதால் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்திருக்கலாம். ஆனால், இந்த நாட்டு மக்களிடம் ஆழமாகப் பதிந்திருக்கும் உயர்வு தாழ்வு உணர்வைக் காந்தியார் புரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்கும் வேளையிலும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்படாதிருந்தால். ஒரு தாழ்த்தப்பட்டவர் கூடப் பாராளுமன்றப் படிக்கட்டை மிதிக்க முடியாது என்பது தான் வெட்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இது காந்தியாருக்குப் புரியவில்லை; பெரியாருக்கு அன்றே புரிந்திருந்தது.

காந்தியார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் பெரியார். ஆயினும் தன் காரியத்திற்கு எதிராக வரும் கடவுளையே மறுத்த பெரியார். காந்தியாரை எதிர்த்தது தவறா? எவருடனும் Compromise செய்து கொள்ளும் வழக்கம் எப்போதும் பெரியாருக்கு இருந்ததில்லை. இதுவே பெரியாரின் வலிமை. எனவே காங்கிரசையோ, காந்தியாரையோ பெரியார் எதிர்த்தார் என்றால், அந்த எதிர்ப்பின் உள்ளீட்டை உற்று நோக்கினால், அந்த எதிர்ப்பு எதிர்க்கப்பட வேண்டிய எதிர்ப்பே என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர். ‘சமநிலைச் சமுதாயம்’ என்றே ஒரே குறிக்கோளை உயிர்க்கோளாகக் கொண்ட பெரியாருக்கு. அதற்கு எதிர்வரும் எவரும், எதுவும் பகையே! அவரைப் போல் சமநிலைச் சமுதாயத்தை ஏற்க விரும்பும் எவர்க்கும் பெரியார் பகை கொண்ட எவரும், எதுவும் பகையே.

திராவிடம்இனப்பரப்பின் இடுகுறியே

பெரியார் நாட்டு விடுதலையை எதிர்த்தார் அந்த விடுதலை பொதுமக்கள் அனைவருக்கும் உரிய சமூக விடுதலை ஆகாதபோது. பெரியார் விடுதலை நாளைத் துக்கநாள் என்றார் நம் அடிமை நிலை மறையவில்லை;  ஒரு அந்நியன் கையிலிருந்து மற்றொரு அந்நியன் கைக்கு மாறியிருக்கிறது. என்பதால்தான். பெரியார் ‘திராவிட நாடு’ ‘தமிழ் நாடு’ பிரிவினை கேட்டாரே! ஏன்? ‘மக்களின் சம உரிமையின்மைக்கு எதிரான பெரியாரின் கோபம் அவரது பிரிவினை வாதம்’. அவர் கேட்ட விடுதலையில் உள்ள ‘நாடு’ என்ற சொல் நிலப்பரப்பைச் சுட்டுவதில்லை. இனப்பரப்பின் இடுகுறிதான் அது என்பதை அவரது திராவிட நாடு, தமிழ் நாட்டுக் கோரிக்கை தொடர்பான எழுத்தையும் பேச்சையும் ஊன்றிப் படிப்பவர்கள் உணர்வார்கள். பார்ப்பனர் ஒழித்த தமிழ் பேசும் மக்களைச் சுட்டிக் காட்ட அவர் எடுத்துக்கொண்ட வார்த்தைதான் திராவிடன். பெரியார் திராவிடம் குறித்துப் பேசுவதற்கு முன்பே ‘திராவிடன்’ என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தது இங்கே குறிக்கத்தக்கது. பெரியார் கண்ட இயக்கமும் திராவிடர் கழகம்தான்: திராவிடக் கழகம் அன்று

நாங்கள் பிரிவினைக் கருத்தை விட்டுவிட்டோம். ஆனால் பிரிவினை கேட்டதற்கான காரணம் மட்டும் அப்படியே இருக்கிறது.

என அண்ணா பின்னாளில் கூறியதும் ஆழமாகச் சிந்திக்கத்தக்கது தானே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *