புதுடில்லி, ஏப். 11- கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி டில்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மூன்று நபர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த யஷ்வந்த் வர்மா தனது பதவியிலிருந்து திடீரென நேற்று விலகினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அனைத்தும் கைவிட்ட நிலையிலும், தனது பதவி நீக்கத்தை தவிர்க்கவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து அவரை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முடிவுக்கு வந்துவிடும் என்று மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவிழாக்கள் ஜாதியை பரப்பும் களமாக இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
மதுரை, ஏப். 11- கோயில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி பெயர்களை சேர்க்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஜாதியை பரப்பும் களமாக திருவிழாக்கள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை நார்த்தாமலையைச் சேர்ந்த சண்முகம், லட்சுமணன், மாதவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை, நார்தமலை, சிறீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழை பல ஆண்டுகளாகக் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் வழக்கப்படி மண்டகப்படிதாரர்களின் பெயருடன் மண்டகப்படியையும் குறிப்பிட்டு அச்சிட உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி, கோயிலில் பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைச் சுட்டிக்காட்டி, அழைப்பிதழில் மனுதாரர்களின் பெயர்களை அவர்களின் ‘பட்டப்பெயர்’ உடன் அச்சிடக் கோருகின்றனர். அந்தப் பட்டப் பெயர்கள் ஜாதியின் பெயராக உள்ளது. ஜாதி என்பது இல்லாத ஒன்று. அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது. பழமையாக பின்பற்றப்பட்ட அமைப்பு சமத்துவ, அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது. திருவிழாக்கள் ஜாதியைப் பரப்புவதற்கான ஒரு களமாக இருக்கக்கூடாது.
சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்துவதும், ஜாதியை ஒழிப்பதும் மட்டுமே திருவிழாக்களின் நோக்கமாகும். அவ்வாறு இருக்கும் நிலையில், ஜாதிப் பெயரைச் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. வேறு சில நபர்களின் விடயத்தில், ஜாதியை ஒட்டியே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது.
ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் அவரது ஆடைகளைத் துவைக்கச் சொல்வது, மனித உரிமைகளின் கோட்பாடுகளுக்கு எதிரானது. அதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏன் அழைப்பிதழில் கூட அங்கீகரிக்கக் கூடாது.
மனுதாரரின் கோரிக்கைகளை பொறுத்தவரை, அது பொதுக் கொள்கைக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. எனவே அழைப்பிதழில், மண்டபத்தை நடத்துபவர்கள் அல்லது அதற்கு நிதியுதவி அளிப்பவர்கள், ஊர்காரர்கள் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
“திருடர்கள் அனைவரும்
பாஜகவில் இணைந்துவிட்டனர்”
கன்னையா குமார் ஆவேசம்
கவுகாத்தி, ஏப். 11– “திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஜகவில் இணைந்துவிட்டனர். மிகப்பெரிய ஊடுருவல்காரர் குஜராத்திலிருந்து வந்துள்ளார். ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் சேர்த்து அவரையும் வெளியேற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமார் பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. அசாமில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், ஏப்ரல் 5-ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒரு காணொலி தற்போது வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில், போங்கைகான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கன்னையா குமாரின் பேச்சு சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.
அந்தக் காணொலியில், “திருடர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஜகவில் இணைந்துவிட்டனர். இந்தத் திருடர்களின் தலைவன், ஜெய் ஷாவின் தந்தையாவார். ஊடுருவல் ஒரு பிரச்சினை என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கூறினார். அதற்கு நான், இங்கே மிகப்பெரிய ஊடுருவல்காரர் குஜராத்திலிருந்து வந்துள்ளார். ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் சேர்த்து அவரையும் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று பதிலளித்தேன்…” என்று கன்னையா குமார் கூறியதற்கு பாஜக இப்போது கடும் எதிர்வினையாற்றி வருகிறது.
இதற்கிடையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “இன்று முதல் முறையாக, நமது மக்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்களிக்க வெளியே வந்துள்ளனர். பல வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு 95 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது சாதாரணமானதல்ல. அசாம் மொழி மற்றும் ஜாதியைக் கடந்து உயர்ந்துள்ளது. சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மக்கள்தொகை ஆக்கிரமிப்பிலிருந்து நமது நிலம், நமது அடையாளம் மற்றும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே தெளிவான உறுதியுடன் நமது மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.

