கேள்வி: மத்தியப் பிரதேசத்தில் ‘நர்மதா புசுக்கரம்’ என்ற பெயரில் 3 லாரி பசும்பாலை நர்மதா நதியில் கொட்டி ‘அர அர மகாதேவா’ என்று கூச்சல் போட்டுள்ளார்களே – இவர்களுக்கெல்லாம் பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பாதா?
– கு.வீரன், கொடுங்கையூர்
பதில்: “பக்தி வந்தால் புத்தி போகும்! புத்தி வந்தால் பக்தி போகும்!” என்ற தந்தை பெரியார் கருத்து எவ்வளவு அப்பட்டமான உண்மை என்பது புரிகிறதல்லவா?
ஒன்றிய ஆட்சியும், பிரதமரும், கோவிட் 19 காலத்தில், டாக்டர்களைப் பார்த்து “கைத்தட்டுங்கள் கரோனா ஓடும், விளக்கேற்றுங்கள் கரோனா ஓடிவிடும்” என்றும், “கணபதிக்கு யானைத் தலையை ஒட்ட வைத்து, நம் முன்னோர்கள் – அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை அறிந்த சிறந்த விஞ்ஞானிகள்” என்று அனைத்து நாட்டு விஞ்ஞானிகள் கூட்டத்தில் பிரதமர் பேசி, நோபல் பரிசு பெற்ற அந்த விஞ்ஞானிகள் போன்ற பலரும் தலையில் அடித்துக் கொண்டதும் – இதுபோன்ற ஒரு பிரதமரின் இந்து ராஷ்டிரத்தில் இப்படித்தான் நடக்கும் என்பது புரிகிறதல்லவா?
கேள்வி: ஈரான் மக்களின் உள்ள உறுதியை எதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்?
– ப.பன்னீர்செல்வம், தேனாம்பேட்டை
பதில்: ஏற்கெனவே அமெரிக்கா, வியட்நாம் மக்கள் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டு ஏமாந்த பழைய கதை போல, இன்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவர்களுக்கு இனிமேலாவது தக்க புத்தி கொள்முதல் என்றாலும், போரற்ற உலகமே சிறந்த ஒன்று என்பதே நமது நிலைப்பாடு.

கேள்வி: “ஒரு நாகரிகத்தையே அழிக்கப் போகிறேன்” என்று டிரம்ப் அறிவித்தும், ராகுலைத் தவிர இந்திய – உலகத் தலைவர்கள் ஒருவர் கூட இதற்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
– க.அன்பரசி, பூவிருந்தவல்லி
பதில்: என்ன செய்வது – இந்திய ஜனநாயகத்தின் கதி எப்படி என்பதைத்தான் இது காட்டுகிறது! அச்சம் என்பது மடமை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
கேள்வி: ஏன் எடப்பாடி எல்லை மீறிப் பேசுகிறார்?
– சையத்பாஷா, பெரம்பூர்
பதில்: ‘தோல்வி பயம்’ அவரை அரசியல் ஜன்னி நிலைக்குத் தள்ளிவிட்டதால் பிதற்றல் ஆக மாறி வருகிறது! கண்டனத்திற்கு ஆளானாலும் உரைப்பதில்லை என்பதற்கு அந்த நோயின் தன்மை அப்படிப்பட்டது!
கேள்வி: தேர்தல் பரப்புரையின் ‘ஹீரோ’வாக உங்களை சமூக வலைதளங்களில் இளையோர்கள் புகழ்கிறார்களே – ‘தினமலரே’ இதை ஒப்புக்கொண்டு புலம்பியுள்ளதே?
– கு.வணங்காமுடி, திண்டிவனம்
பதில்: நமது கழகப் பிரச்சாரம் அலட்சியப்படுத்தப்பட முடியாத தாக்கங்களை ஏற்படுத்தி, இனப்பகையை வெல்லும் ஏவுகணையாக உள்ளது என்பதன் அறிகுறியே இனமலரின் எரிச்சல், ஏகடியம் எல்லாம்!
கேள்வி: தேர்தல் பரப்புரையின்போது ஆன்மிக பக்தர்களும் தங்களுக்கு சிறப்பான வரவேற்பு தருகிறார்களாமே?
– இரா.இரவி, கோட்டுப்பாக்கம்
பதில்: ஆன்மிகப் பக்தர்கள் என்பவர்களுக்கும் எப்போதும் பெரியார் (சமூகநீதிக்கும், சுயமரியாதைக்கும்) தேவைப்படுவார் அல்லவா? எனவேதான் இத்திருப்பம்!
கேள்வி: “திருப்பரங்குன்றம் பிரச்சினை தேர்தலின் மய்யப்புள்ளியாதலால் அதன்படி இந்துக்கள் ஒன்று சேர்வார்கள்” என்று இந்து முன்னணி கூறியுள்ளதே?
– க.யாழினி, திருவள்ளூர்
பதில்: அங்கே மய்யமும் இல்லை; புள்ளியும் இல்லை – வெறும் நிராசைதான் – அது கானல் நீர் வேட்டை – பூணூல்களுக்கு ஏற்பட்டப் படுதோல்வி!
கேள்வி: இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஏன் அடிக்கடி ‘டென்சன்’ ஆகிறார்?
– வி.ஞானசேகர், வடபெரும்பாக்கம்
பதில்: “மடியில் கனமிருந்தால் வழியில் பயம்” என்பது அனுபவ மொழியாயிற்றே!

கேள்வி: ஈரான் சம்பந்தப்பட்ட தற்போதைய போர் நிறுத்தம் உலகப் பொருளாதாரத்திற்கு எவ்வகையில் சாதகமாக அமையும்?
– க.இரவி, சிறீபெரும்புதூர்
பதில்: போர் நிறுத்தம் இரு வாரங்கள் என்றாலும், இடைக்கால நிவாரணம் எல்லாத் தரப்பு உலக மக்களுக்கும் இதன் விளைவாக ஏற்படும்.
அது நிரந்தரமாகி, போரற்ற புது உலகம் வரவேண்டும் என்பதே நமது விழைவு.
கேள்வி: விருதுநகர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.விஜயபிரபாகரன் பண்பட்ட அரசியல் தலைவர் போல் உரையாற்றுகிறாரே, குறுகிய காலத்தில் திறமையை வளர்த்துக்கொண்டாரா?
– கோ.ஆனந்தன், தஞ்சாவூர்

பதில்: இளைஞர்கள் வளர்ந்து வருவது தங்களது ஆற்றலாலும், ஆளுமையாலும் என்பதைத் தாண்டி, அடக்கத்துடன் இருப்பதும் சரியான வளர்ப்பின் வியப்பு அது!


