சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிடிஇ), கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட பொது அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் விதிமுறை திருத்தங்களின்படி, இனிவரும் காலங்களில் இத்தகைய ஒருங்கிணைந்த 4 ஆண்டு படிப்புகளை நடத்த எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அனுமதி கிடையாது. இந்த பட்ட படிப்புகளை நடத்தும் எந்தவொரு கல்வி நிறுவனங்களும் 2026-2027ஆம் கல்வியாண்டிலிருந்து புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்ட படிப்புகளில் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை.
இந்த அறிவிப்பினை மீறி, விதிகளுக்கு புறம்பாக ஏதேனும் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தினால், அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கை மற்றும் ஆசிரியர் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஏற்கனவே இந்த படிப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இதில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு, படகு பறிமுதல்!
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
சென்னை, ஏப்.9– எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது. மேலும் அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
மதுரை, ஏப்.9- தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர் களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த நந்தினி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தான் துறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் ஒப்பந்த செவிலியராகப் பணியாற்றி வருவதாகவும், அரசு ஊழியர் என்ற முறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சுகாதாரத் துறைச் செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். கருணாநிதி ஆஜராகி வாதிட்டார்.
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முக்கியத் தகவல் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்: “ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் 6 மாதங்கள் (180 நாட்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.”
அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

