தேனி, ஏப்.6- சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை செல்வகணபதி, முத்துசாமி ஆகியோர்தான் காப்பாற்றினர் என தி.மு.க. வேட்பாளர் ஒபிஎஸ் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டணிக் கட்சி தோழர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
அப்போது பேசிய முத்தரசன், யாரோ கட்டிய வீட்டில் சிலந்தி புகுந்து வலை விரித்து அதில் ஈயை சிக்க வைத்து அதை கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி கொன்றுவிடும். அதுபோன்று தான் பிஜேபி சிலந்தி வலையில் எடப்பாடி பழனிச்சாமி எனும் ‘ஈ’ சிக்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளர்களை வைப்புத் தொகை (டெபாசிட்) இழக்கச் செய்து மாபெரும் வெற்றி அடைய வேண்டும்.
அந்த பொறுப்பு தங்கத்தமிழ்செல்வனுக்கு உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒபிஎஸ் என்ற நிலையை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஒபிஎஸ், “தேர்தல் பிரச்சாரத்தில் ஈபிஎஸ் அரசியல் நாகரிகம் இல்லை. படுதோல்வி உறுதி. ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது. கலைஞரைப் பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை.அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதியை பெற்று கொடுத்தவர் கலைஞர். சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை செல்வகணபதி, முத்துசாமி ஆகியோர்தான் காப்பாற்றினர்.
உலகில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி மட்டுமே. ஈபிஎஸ் பொதுச் செயலாளராக வந்தது முதல் அ.தி.மு.க. தோல்விகளைதான் சந்தித்துவருகிறது” என்றார்.

