நெல்லை, ஏப்.5 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாதனைகளைச் சொல்ல முடியாமல் அவதூறுகளையும் பொய்களையும் மட்டுமே நம்பி பிரச்சாரம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர், “பழனிசாமி என்றால் அது பொய் மற்றும் பித்தன் என்றுதான் அர்த்தம். அவர் சொல்லும் பொய்களைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம். மறைந்த முதலமைச்சர் கலைஞர் பற்றி அவர் கூறிய பச்சைப் பொய்களுக்கு நெல்லையில் நான் உரிய பதிலடி கொடுத்துள்ளேன். ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்து கூச்சமே இல்லாமல் பொய் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி,” என்று குறிப்பிட்டார்.
கல்வி வள்ளல் காமராஜர் மற்றும் ஜானகி எம்ஜிஆர் ஆகியோருக்கு தி.மு.க. இடம் தர மறுத்ததாக பழனிசாமி கூறியதற்குப் பதிலளித்த முதலமைச்சர் “காமராஜர் மறைவின் போது ஒரு மகனைப் போல இருந்து இறுதி நிகழ்வுகளைச் செய்தவர் கலைஞர். அதேபோல் ஜானகி அம்மையார் மறைந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் அவரது படத்தைத் திறந்து வைத்தவரும் கலைஞர்தான். சங்கிக் கூட்டணியில் சேர்ந்ததால் வாட்ஸ்ஆப் வதந்திகளைப் பழனிசாமி வாந்தி எடுக்கிறார்,” என்று சாடினார்.
அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றி விட்டதாகக் கூறும் பழனிசாமிக்கு, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தனக்கு இனிப்பு ஊட்டியது தெரியுமா என முதல மைச்சர் கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் இழிவுபடுத்திப் பேசிய பழனிசாமிக்கு அவர்களிடமிருந்து ஸ்வீட்டும் கிடைக் காது, ஓட்டும் கிடைக்காது எனத் தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் நிதிப் புறக்கணிப்பு
தமிழ்நாட்டின் வரிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வாரி வழங்குவதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர், இந்தச் செயற்கையான நிதி நெருக்கடியிலும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருவதாகக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி செய்த துரோ கங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்வருமாறு பேசினார்:
விவசாயிகளுக்கு: மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து துரோகம்.
பெண்களுக்கு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிய துரோகம்.
சிறுபான்மையினருக்கு: குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் வக்ஃபு சட்டத்தை ஆதரித்த துரோகம்.
கட்சித் தலைவர்களுக்கு: தன்னை வளர்த்துவிட்ட செங்கோட்டையன், சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் மற்றும் தனபால் ஆகியோருக்கு இழைத்த துரோகம்.
இவை அனைத்திற்கும் மேலாக, பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக, அதே கட்சியுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கே பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என்றும், “துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்” என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.

