கலைஞருடைய இதயச் சிறையில் தான் நாங்கள் குடியிருந்தோம் நம்பி பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்த பழனிசாமி கலைஞர் குறித்து பேசத் தகுதி கிடையாது!

தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

நெல்லை, ஏப். 4 கலைஞரின்  இதயச் சிறையில்தான் நாங்கள் குடியிருந்தோம். நம்பி பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி கலைஞர் குறித்து பேச தகுதி கிடையாது என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

நெல்லையில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘‘எடப்பாடி பழனிசாமி, நேற்று (3.4.2026) ஒரு பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கியவர் தலைவர் கலைஞர். கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசி யிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் எல்லை மீறிப் பேசத் தொடங்கி இருக்கிறார்.

முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க் கட்சித் தலைவரான எடப்பாடிக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர் தலில் அதை மக்கள் எடை போட்டுப் பார்ப்பார்கள். உங்களுக்குத் தக்க பதில டியைக் கொடுக்கத்தான் போகிறார்கள்.

கலைஞர் குறித்து பேசத் தகுதி கிடையாது

ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக, என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது; எந்தத் தகுதியும் கிடையாது.

தலைவர் கலைஞரைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம் – வாழ்ந்த காலம் வரை, கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான ‘உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டிப் போட்டிருந்தவர். முதுமையால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்தபோதுகூட, மருத்துவர்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், “அண்ணா… அண்ணா…” என்று சொன்ன அண்ணாவின் அன்புத்தம்பி அவர்.

முடியாத நிலையில்கூட, அறிவா லயம் செல்ல வேண்டும், ‘முரசொலி’ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று துடித்தவர்.

அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவருடைய இதயச் சிறையில் தான் நான் உட்பட உடன்பிறப்புகள் அத்தனை பேரும் குடியிருந்தோம். எடப்பாடி பழனிசாமிக்கு கலைஞர் பெயரைச்சொல்லக்கூட தகுதியும் கிடையாது, எந்தவித யோக்கியதையும் கிடையாது.

5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு முதலமைச்சராக இருந்து, தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முதலமைச்சர் , தலைவர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவர் அண்ணாவிற்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான்.

அதன் பொருட்டு, அப்பாவுக்காக அல்ல, தலைவருக்காக. நானே உங்கள் வீட்டுப் படியேறி வந்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேன் என்னுடைய தந்தைக்காக அல்ல, ‘தமிழினத்தின் தலைவர் அவர். கடற்கரையில் இடம் கொடுங்கள்’ என்று அந்தச் சோக சூழ்நிலையில்கூட உங்கள் முன்னால் வந்து நின்றேன், கொடுத்தீர்களா? இரக்கம் இல்லாமல் மறுத்தவர்தானே நீங்கள்!

அப்படிப்பட்ட உங்களுக்கு, எங்கள் தலைவரைப் பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது. உங்கள் யோக்கியதை என்ன தெரியுமா? உங்களை நம்பிப் பதவி கொடுத்த சசிகலாவின் காலையே வாரிவிட்டவர். நம்பிய டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் முகுகில் குத்தியவர். உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சட்டமன்ற அவைக்கு வராமல் இருக்க ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஆதரித்த இயக்கம் திமுக. இதுதான் உங்களுக்கும் – எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *