கேள்வி: கோயில்களில் கடவுள் சிலைகள் திருட்டுப் போவதில் அர்ச்சகர்களுக்கு தொடர்பு இல்லை என்றும், இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் தொடர்பு இருப்பதால்தான் திருட்டு பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிப்பது இல்லை என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் அய்.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவிக்கிறாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில்: அவர் எப்படிப்பட்டவர் என்பதும், அவர் எந்தளவு காவிகளின் குரலை ஒலிப்பவர் என்பதும் உலகறிந்த ஒரு செய்திதானே!
அவர் அர்ச்சகர்களின் வக்கீலாகி பல வழக்குகளில் அர்ச்சகர்களின் வாக்குமூலமாக அளித்த ஒப்புதல்களே அவரை ஓர் உண்மை பேசத் தெரியாதவர் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும். “வேலிக்கு ஓணான் சாட்சி; ஓணானுக்கு வேலி சாட்சி” – பழமொழி நினைவுக்கு வருகிறதா?
- • •

கேள்வி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – திராவிடக் கருத்தாக்கத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்குமானத் தேர்தல் என்று கூறும் சீமானின் ஆரியப் பின்புலத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களா?
– த.தனசேகர், மாதவரம்
பதில்: அவர் தனது முகமூடியைக் கழற்றி சுய உருவத்தை வெகுநாளைக்கு முன்பே காட்டிவிட்டார். இப்போது பேச்செல்லாம் புலம்பல்தான்! அந்தோ பரிதாபம்!
- • •
கேள்வி: பீகாரின் மேக்ரா கிராமத்தில் உள்ள ஹிதாலா தேவி அம்மனை வழிபடச் சென்ற பெண்கள் 9 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பக்தி போதையாளர்கள் திருந்த மறுப்பது ஏன்?
– ஏ.வசந்தி, பெரம்பூர்
பதில்: போதை எப்போதுமே எளிதில் எவரையும் திருந்தவிடாது! அதிலும் மது போதையைவிட மதபோதை மிகவும் ஆபத்து. “குடிகாரன் பேச்சு பொழுது விடியும்வரை” என்ற உச்சவரம்பு உண்டு. ஆனால், மத போதை – வரம்பு இல்லையே!
- • •
கேள்வி: “உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ஹார்மூஸ் நீரிணையில் நீங்களே உங்களுக்குத் தேவையான பெட்ரோலை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அய்ரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் ஆலோசனை கூறியிருக்கிறாரே?
– க.அரசு, கதிர்வேடு

பதில்: ஆணவத்தின் அதிகார விளைச்சல்; மன்னனின் விளைச்சல்தான் இந்த வேண்டாத போர்கள்! சொந்த நாட்டு மக்களே அவரைக் கண்டிக்கத் தவறவில்லையே!
- • •
கேள்வி: சினிமாத் தொழிலில் சம்பாதிப்பதற்கு ‘பேய்’ மூடநம்பிக்கையையும், மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மதுரை மீனாட்சி அம்மன் அருளையும் எதிர்பார்க்கின்ற இயக்குநர் சுந்தர்.சி-யின் இரு வகைப்பாடுகள் எதைக் காட்டுகின்றன?
– இரா.தினகரன், சென்னை -23
பதில்: சினிமாவில் எத்தனை வேடங்களும் போட வாய்ப்புண்டு – அதன் நீட்சியே அரசியலில் இப்போது!
- • •
கேள்வி: “தமிழ்நாட்டில் விஜய் கட்சியை சேர்த்து ஆட்சி அமைப்போம்” என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளாரே…?
– ப.செல்வம், காசிமேடு
பதில்: அவர்கள் உள்ளே பேசியது இவரால் வெளியே வருகிறது போலும். பூனைக்குட்டி வெளியே வருகிறது. அடுத்து அப்படி ஒரு திட்டம் உள்ளது என்பதும், நடிகர் பா.ஜ.க.வில் சரண் அடைந்துவிட்டவர் என்பதற்கு ஒரு சான்றாகவும் தெரிகிறது!
- • •
கேள்வி: கோயில்களும், பக்தர்களும் எண்ணிக்கையில் அதிகமாகும்போது வன்முறையும் கூடவே அதிகமாகிறதே. இது எங்கே போய் முடியும்?
– எம்.மணிகண்டன், பழவந்தாங்கல்
பதில்: நெரிசல், உயிர் விபத்தில் போய் முடிகிறது என்பதுதான் அன்றாடம் பரிதாபச் செய்திகளாக வருகின்றனவே! வேதனை! வேதனை!!
- • •
கேள்வி: முஸ்லீம் மாணவரை (கருநாடகாவில்) ஒரு பேராசிரியர் ‘பயங்கரவாதி’ என்று கூறியிருப்பது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி தங்கள் கருத்து?
– பா.ஓவியன், அரும்பாக்கம்
பதில்: தொடரும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தின் ஓர் அம்சம். கோயபெல்ஸ்கள் தீவிரவாதத்தை ஆதரிக்காத எவருக்கும் இப்படி ‘லேபிள்’ குத்தும் பிரச்சாரம் – நியாயமாகுமா?

- • •
கேள்வி: தஞ்சை அருகே சாலியமங்கலம் நான்கு சாலைப்பகுதியில் முதலமைச்சரின் வேனை மறித்துத் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனைக்கு முதலமைச்சர் மகிழ்வுடன் ஒத்துழைத்த செயலைப் பற்றி தங்கள் கருத்து…
– ந.முருகன், மதுரை
பதில்: பண்புள்ள முதலமைச்சர் என்பதை மற்றும் ஒருமுறை நாட்டுக்குப் புரிய வைக்கும் வாய்ப்பு அது!
- • •
கேள்வி: தனியார் பள்ளியில் இலவச சேர்க்கைக்கு தனியார் பள்ளி இயக்ககத்தின் சார்பில் நேரிலும், இணைய வழியிலும் சேர்க்கை நடைபெறுவதை விளம்பரப்படுத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதைக் குறித்து தங்களின் கருத்தென்ன?
– வி.வெற்றிக்கவி, முசிறி
பதில்: அரசுப் பள்ளிகளின் தரம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உயர்ந்துவிட எல்லோரும் அரசுப் பள்ளிகளுக்கே செல்லப் படையெடுக்கிறார்கள்! இதனால் பாதிக்கப்படும் தனியார் பள்ளிகளுக்கு வேறு வழியில்லை என்பதற்கான அறிவிப்பு இது!
- • •
