இது எங்கு நடந்தது முப்பாட்டன் (?) முருகன் கோயிலில்தான் இந்தக் கூத்து!
எங்கே நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமம் ரத்தினவேல் முருகன் கோயிலில் தான்!
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவின் போதும் 9 நாட்களும் முருகன் கோயில் வேல்மீது எலுமிச்சைப் பழங்களை நட்டு வைப்பார்களாம்!
இந்த எலுமிச்சைப் பழங்களைப் பத்திரமாக எடுத்து வைத்து, திருவிழா முடிந்ததும் நள்ளிரவில் ஏலம் விடுவார்களாம்.
இந்த எலுமிச்சைப் பழத்தை ஏலம் எடுத்த வர்கள் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமாம். அந்தக் கிறுக்குத்தனமான நம்பிக் கையால் ஓர் எலுமிச்சைப் பழம் ரூ.31,500க்கு ஏலம் போயிருக்கிறது.
‘பக்தி வந்தால் புத்தி போகும்!’ என்று சொன்னால் மூக்கின்மீது கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.
கோயில் ஏலத்தில் எடுக்கப்பட்ட எலு மிச்சைப் பழத்தைச் சாப்பிட்டால் பிள்ளை வரம் கிடைக்குமா?
ஆண் பக்தர் ஒருவர் ஏலம் எடுத்தால் அவர் வயிற்றில் கருத்தரிக்குமா?
கருத்தரிப்பதற்கும் தரிக்காமல் இருப்ப தற்கும் அறிவியல் ரீதியான மருத்துவக் காரணங்கள் உண்டு.
இந்தக் குறைபாட்டை நீக்க நிபுணத்துவம் உள்ள மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கென்றே மருத்துவமனைகளே உண் டாகி விட்டன. ‘செமன் பேங்க்’ எல்லாம் வந்து விட்டது.
இந்த நிலையில் பக்தியின் பெயரால் முருகன் கோயில் சூலத்தில் நடப்பட்ட எலுமிச்சைப் பழத்தைச் சாப்பிட்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பதும், அதனை நம்பி ஏலம் எடுப்பதும் எவ்வளவுப் பெரிய பைத்தியக்காரத்தனம்!
இதுவரை இப்படி ஏலம் எடுத்த எத்தனைப் பேருக்குப் பிள்ளை வரம் கிடைத்தது. என்ப தற்கு ஆதாரம் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?
அந்த எலுமிச்சைப் பழத்தை சாப்பிடுவ தற்குப் பதில் தலையில் தேய்த்துக் கொண்டால் பைத்தியம் தெளியும் என்ற ஒரு வழக்குக்கூட நம் நாட்டில் உண்டு! பைத்தியங்கள் பலவிதம்! பக்திப் பைத்தியத்துக்குத்தான் இதில் முத லிடம்.
மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில்!
ஓ, சட்டம் கூட ஒரு முழம் கல்லுக்கு முன் (சாமிக்கு முன்) சரணாகதியோ!
பக்தியின் சுரண்டல் தான் எத்தனைக் கண் மூடித்தனமானது!
பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பது திராவிடர் கழகத்தின் ஊர்வல முழக்கம்!