ஊழியர்கள் வீட்டில்
இருந்தே பணியாற்றலாம்
மலேசியா அரசு அனுமதி
கோலாலம்பூர், ஏப். 3- ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மலேசியாவில் வீட்டில் இருந்தே பணி யாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் வீட்டிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 முதல் இந்த விதி அமலுக்கு வரும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, பகிர்மானத்தை நிலையாக வைத்து இருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் மேலும் தீவிரம் அடையும் என்று சொல்லப்படும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் பகிர்மானம் இப்போது இருப்பதை விட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில்தான், மலேசியா சிக்கன நடவடிக்கையாக வொர்க் பிரம் ஹோம் முடிவை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு
வாசிங்டன், ஏப். 3- அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3ஆவது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, ஸ்பானிஷ் மொழி பேசும் லத் தீன் அமெரிக்கர்களை ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கும், ஆப்கானிஸ்தான் அகதி களை ஹோண்டுராஸூக்கும் அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவர்களின் சட்டப்பூர்வ வேலை அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.
அகதிகளை தானாகவே சொந்த நாடுகளுக்குத் திரும்ப வைப்பதற்கான ஒரு தந்திரமான செயல் என மனித உரிமை ஆர்வலர் கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த விசித்திரமான நாடு கடத்தல் உத்தரவால் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
பாகிஸ்தானில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை-மக்கள் அதிர்ச்சி
இஸ்லாமாபாத், ஏப். 3- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், அரபிக்கடலில் உள்ள ஹர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பன்னாட்டு சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹர்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் தாமதம் / சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பன்னாட்டு சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, விலை அதிகரிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் ஏற்றம்பெற்று வருகிறது.
இந்நிலையில், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு 137 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 458 ரூபாய்க்கு (அந்நாட்டு மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 185 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கு சென்றது
ஓரியன் விண்கலம்-வெற்றிகரமாக செலுத்திய நாசா
கேப் கனாவெரெல், ஏப். 3- நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. கடந்த 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங்கியது. பல்வேறு காரணங்களால் தாமதமான சூழலில் தடைகளை கடந்து நேற்று ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மய்ய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்று நாசா தெரிவித்தது.
50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பயணிக்கும் நாசாவின் முதல் நிலவுப் பயணமான ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் ஆகிய 3 வீரர்களும், கனடாவைச் சேர்ந்த ஜெரமி ஹான்சென் என்ற வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இதில், நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச் பெறுகிறார். இந்த பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப் பட்டுள்ளது. ஓரியன் விண்கலம் முதல்நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
