சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களம் கண்டு அமோக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சராக முதல் தேர்தல்: விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து, பின்னர் துணை முதலமைச்சராக உயர்ந்த பிறகு அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், இத்தொகுதி தற்போது தமிழ்நாட்டில் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் அன்போடும், ஆதரவோடும் மீண்டும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல், இனி வரும் காலங்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
