சென்னை, ஏப். 3 திமுக 2006-2011 ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி, அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லை என்றும், சாட்சிகள் ஜோடிக்கப்பட்டவைகளாக இருப்பதாகவும் கூறி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். “இது அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்பது இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
சென்னையில் நாளை நடக்கிறது
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு
2 கி.மீ. தூரத்திற்கு கடல் நீச்சல் போட்டி
மெரினாவில் சாதனை முயற்சி
சென்னை, ஏப்.3 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, சென்னையில் ஒரு வித்தியாசமான சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீச்சல் சவாலை மேற்கொள்ள உள்ளனர்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான ‘யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற பயிற்சி மய்யத்தின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சதீஷ் சிவகுமார் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். வழக்கமாக ஆட்டிசம் நாளில் நடத்தப்படும் விழிப்புணர்வு பேரணிகள் அல்லது சாலைக் காட்சிகளுக்குப் பதிலாக, இக்குழந்தைகள் தங்களின் திறமையை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் இந்த கடல் நீச்சல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சவாலில் 8 முதல் 22 வயது வரையிலான சுமார் 38 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்களும் பாதுகாப்புக்காக உடன் நீந்த உள்ளனர். இது குறித்துப் பேசிய சதீஷ் சிவகுமார், “முறையான ஆதரவு கிடைத்தால் இக்குழந்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ பிரதிநிதிகளும் இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இக்குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் முதலில் புரிந்து கொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னரே பயிற்சியைத் தொடங்குவதாக சதீஷ் கூறுகிறார். தண்ணீரில் இருப்பது இக்குழந்தைகளுக்கு ஒருவித அமைதியைத் தருகிறது. நீச்சல் பயிற்சிக்குப் பிறகு குழந்தைகளின் கவனிக்கும் திறன், ஒருமித்த கவனம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகப் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரம் இரண்டு முறை இவர்கள் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஏற்ெகனவே இந்த அகாடமியைச் சேர்ந்த குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரை 165 கிலோமீட்டர் தூரத்திற்குத் தொடர் கடல் நீச்சல் சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து 12 வயது ஹவிஷ் என்ற சிறுவனின் தந்தை சிவ ஷண்முகம் கூறுகையில், “கடந்த 2022ஆம் ஆண்டு முதல் எனது மகன் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறான். அவனுக்கு இது ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சை போலச் செயல்படுகிறது. ஆரம்பத்தில் தூக்கக் குறைபாடு இருந்த அவனுக்கு, இப்போது நீச்சல் மற்றும் உடற்பயிற்சி காரணமாக நல்ல தூக்கம் கிடைக்கிறது. தற்போது அவன் மிகவும் ஒழுக்கமானவனாகவும், சுறுசுறுப்பானவனாகவும் மாறியுள்ளான்” எனத் தெரிவித்தார்.
இக்குழந்தைகளிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைச் சரியான முறையில் பயன்படுத்தினால், அவர்களும் சமூகத்தில் சரிசமமாக மிளிர முடியும் என்பதற்கு இந்த கடல் நீச்சல் சாதனை ஒரு சிறந்த உதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஆட்சியர், காவல்துறை
துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட
குரூப்-1 பதவிகளுக்கு
ஏப். 15, 16-இல் நேர்முகத் தேர்வு
சென்னை, ஏப்.3 துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளுக்கு ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, டிஎன்பி எஸ்சி செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பானோத் ம்ருகேந்தர்லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-1 பதவிகளின் (துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண் காணிப்பாளர்) நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுகள் டிசம்பரில் நடைபெற்றன. அத்தேர்வை 1,568 பேர் எழுதினர். எழுத்துத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்கள் உள்ளிட்ட விதிகளின்படி அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 160 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெறும். எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்வு மூலமாக துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நல உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 78 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
