தமிழுக்கும், தமிழருக்கும் தாழ்வு என்றால், எழுத்திலும் தமது மறுப்பினைப் பதிவு செய்யத் தயங்காதவர் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். அதற்குச் சான்றாக ‘ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் நேற்றைய தொடர்ச்சி இங்கு வழங்கப்படுகிறது.
1918 ஆம் ஆண்டு, ‘செந்தமிழ்’ மாத இதழில் (தொகுதி 16; பகுதி 11/புரட்டாசி) வெளிவந்த ‘அச்சிட்ட குறுந்தொகை உரை’ என்னும் கட்டுரை இதற்குச் சான்று. திருக் கண்ணபுரத்துப் பண்டிதர் திரு. சவு. அரங்கசாமி அய்யங்கார் அவர்களின் குறுந்தொகைப் பதிப்பில் (1915) ஓரிடத்துக் காணப்பட்ட தவறான உரையினை மறுத்து உண்மைப் பொருள் காட்டும் முறையில் எழுதிய மறுப்புரை அது.
‘‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே’’
என்னும் குறுந்தொகைப் பாட்டின் இரண்டாமடியில் இடம்பெறும் பறி என்றதற்கு. ‘ஆயர்கைக் கொண்ட மீன்பிடி கருவி’ என்று சொல்லப்பட்ட பொருள் பொருந்தாது என்பதைச் சங்கநூற் சான்றுகள் காட்டியே மறுக்கும் பேராசிரியர், ‘ஆயர் துயிலுதற்காகப் பனையோலையாலமைத்துக் கொண்ட பாயல்’ என்பதே உரிய பொருளாகும் என்று நிறுவுகிறார். ஆயரைக் குறிக்கும், ‘பறியோலைச் சயனத்தர்’ என்னும் பெரியாழ்வாரின் திருமொழி (1-1–5) கொண்டும் தம்கருத்துக்கு அரண்சேர்க்கின்றார்.
இதனையடுத்து, ‘கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன்’ என்றவிடத்து, “கூழ்-உணவு; இழிந்தோர் உண்ணும் உணவுமாம்” என்று பண்டிதர் எழுதியிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்கிறார் கார்மேகனார்.
”உணவு’ என்னும் முன்னைய பொருள் பொருந்துமேனும் ”இழிந்தோர் உணவு’ என அடுத்துக் கூறுவது பொருந்தாது” என்பது அவர் கருத்து.
அவரின் மறுப்புரை வருமாறு:
“கூழ் என்பதனைத் தெண்ணீர் அடு புற்கை – எனக் கருதினார் போலும்; அங்ஙனம் கருதினும் ‘வறியோர் உண்ணும் உணவு’ என்றன்றோ எழுதல் வேண்டும்! ‘இழிந்தோர்’ எனக் கூறுதல் எங்ஙனம் பொருத்தும்?” என வினவுகிறார். நச்சினார்க்கினியர் போன்ற முன்னை உரையாசிரியர்கள் கூழ் என்பதற்குப் பாற்சோறு எனப் பொருள் காண்பதை எடுத்துக் காட்டித் தாம் உரைத்த பொருளே பொருந்தும் என்பதை அறிஞர் ஆய்ந்து கொள்வாராக – என முடிக்கிறார்.
கார்மேகனாரின் இம்மறுப் புரையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் தமிழ்மறைக்கேற்ப, ‘மனிதருள் இழிந்தோர் எவரும் இலர்’ என்பது மேலோங்கி நிற்கிறது. ஜாதியடியாக உயர்வு, தாழ்வு கூறுவதைத் தட்டிக் கேட்கும் சுயமரியாதை இயக்கங்கள் தலைதூக்குவதற்கு முன்பே மேல் ஜாதி மனோபாவத்துக்கு எதிராக அவர் முன்னிறுத்திய எதிர்க்கருத்து இது.
இங்ஙனம் சவு.அரங்கசாமி அய்யங்காரின் உரையிற் கண்ட முரண்பாட்டை எடுத்துக் காட்டிய போதிலும் பெரிதும் பயன்படத்தக்க அவரின் அரும்பணியை மனமுவந்து பாராட்டுகிறார். தமிழுக்குச் செய்த பெரு நன்றியாகவே அவரது குறுந்தொகைப் பதிப்பினைச் சுட்டுகிறார். “உண்மைப் பொருள் காணவேண்டி ஈண்டிதை எழுதினேனே யன்றிக் குறைகாணக் கருதி எழுதினேனல்லேன்” என்கிறார். இம்முடிப்புரை அவரது புலமைப் பெருமிதத்திற்கும் சான்றாண்மைக்கும் முடிமணியாக ஒளிர்கிறது.
இவ்வாறே, ‘களவழியிற் குறித்த கழுமலம்’ (செந்தமிழ்த் தொகுதி 16; பகுதி 6,1918) என்னும் கட்டுரையும், “பிறழ உணர்வார் தெருளுதற் பொருட்டு எழுதப்பட்டதாகும்” என்கிறார்.
இவ்வெடுத்துக் காட்டுகளால் தவறுகள் கண்டவிடத்து மெய்ப்பொருள் காட்டும் அஞ்சாமையுடன் அவரது பேச்சும் எழுத்தும் அமைந்திருந்தன என்றறியலாம்.
தமிழாசிரியருக்கு மதிப்பு
மறவாமல் சுட்டிச் சொல்லத் தக்க மற்றொரு செய்தியும் உண்டு. தமிழ் நன்னிலை பெறாதகாலத்தில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றவர் கார்மேகனார். மாணவர்கள் மட்டுமன்றி, பிற துறை ஆசிரியர்களும் தமிழ்படித்தவர்களை மதிக்காத காலம் அது. பிற துறையாசிரியர்களுக்கு இணையான ஊதியமும் தமிழாசிரியர்களுக்கு அந்தநாளில் வழங்கப்படவில்லை. அத்தகைய பொல்லாத காலச் சூழலில் தம்முடைய திறமான புலமையினால் கல்லூரி அளவிலும் கற்றோரிடையிலும் அவர் பெரிதும் மதிக்கப் பெற்றார்.
மாணவர் மகிழவும் மற்றையோர் வியக்கவும்
தமிழ்மொழி பயிற்றித் தனிமதிப் படைந்தோன்
என்று அவரின் மாணாக்கரும் பின்னாளில் அவரிடத்தே பணியாற்றியவருமான பேராசிரியர் ப.ஜோதிமுத்துவின் கூற்றும் இதனை மெய்ப்பிக்கும்.
கண்டவர்தம் மனம்வழங்கும் தோற்றப் பொலிவினாலும் தமிழ்கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையினாலும் பெருமிதமிக்க பெருவாழ்வு வாழ்ந்தார் கார்மேகனார். தமிழ்நிலமுழுதும் இடம் பெயரும் உரைசால் புகழுக்கும் உரியவரானார். இதன் விளைவாகத் தம்மையொத்த தமிழாசிரியர்களுக்கும் மதிப்பினைத் தேடித்தந்தார். தகுதிமிக்க ஒருவனால் அவனைச் சார்ந்தோரும் மதிப்புப் பெறுதல் போலத் தமிழாசிரியர் உலகம் இவரால் பெருமை பெற்றது என்பர். இவ்வகையில் வடதமிழ்நாட்டில் -சென்னையில் வாழ்ந்த சீர்மிகு கா.நமசிவாயரோடு கார்மேகனாரை ஒப்பிட்டுக் காட்டுகிறார் பைந்தமிழ்ப்பாவலர் அ.கி.பரந்தாமனார்.
‘தமிழ்ப்புலவர் தமைமதியா அந்த நாளில்
தனிமதிப்பைச் சென்னையிலே அடையச் செய்தான்
அமிழ்தமென இருந்தஎங்கள் நமசி வாயன்;
அருந்தமிழ்த்தென் மதுரையிலே அவனைப் போன்று
நிமிர்ந்திருந்து புலவர்களை மதிக்கு மாறு
நின்திறலால் கார்மேக வள்ளால் செய்தாய்!
இமிழ்கடல்சூழ் உலகினிலே புலவர்க் கெல்லாம்
இம்மதிப்பைப் பெறச்செய்தாய் வாழி! வாழி!’
என்பது அவரின் புகழ்ப்பாட்டு.
உரிமைக்குக் குரல் கொடுக்க புலவர் பெரு மக்கள் அஞ்சக்கூடாது என்பதற்கு அவரது துணிவும், தெளிவும் போற்றப்பட வேண்டியவை மட்டுமல்ல – பின்பற்றப்பட வேண்டியவையுமாகும்!
