மதவாதம் இந்திய ஒற்றுமைக்கு வைக்கப்படும் அணுகுண்டே!

3 Min Read

ஒன்றிய அரசின் கீழ் வரும் விளையாட்டுக் கழகம் ‘ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா’ சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி மற்றும் ஊக்கத்தொகை தரப்படும் ‘சாய் இண்டர்ஷிப்’ நேர்காணலில் வந்திருப்பவர் இஸ்லாமியர் என்று தெரிந்த உடனே, ‘‘மன்னிக்கவும் இது உங்களுக்கானது அல்ல’’ என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

டில்லியில் செயல்பட்டும் வரும் ‘ஸ்போர்ட் அதாரிடி ஆப் இந்தியா’வின் சார்பில் விளையாட்டில் திறமையான மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, அவர்களின் கல்விச்செலவு மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்று விளையாட ஊக்கத் தொகை தரும் அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு 2026–2027 ஆம் ஆண்டிற்கான நேர்காணல் டில்லியில் நடந்தது.

இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 1000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ஷான் முகமதுவும் ஒருவர். இவருக்கு விளையாட்டுக்கழகத்தின் சார்பில் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் அவர் டில்லி சென்று நேர்காணலில் கலந்துகொள்ளச்சென்றார். இவர் கல்வி மற்றும் விளையாட்டில் திறமையானவர்; ஒன்றிய விளையாட்டுக்கழகம் இவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அறைக்குள் நுழைந்தார். நேர்காணலில் அமர்ந்திருந்த குழுவினர் முதலில் அவரைப் பார்த்து அவர்களுக்குள் ஏதோ கூறிக்கொண்டனர். முகமது மலர்ந்த முகத்தோடு தனது பெயரைச் சொன்ன அடுத்த வினாடியே நிலைமை தலைகீழானது. நேர்காணல் குழுவினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். ‘‘இது உங்களுக்கானது அல்ல” (This isn’t for you) என்ற ஒற்றை வரியுடன், எந்தவித கேள்வியும் கேட்பதற்கு இடமளிக்காமல் ‘‘வெளியே செல்லுங்கள்; உங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’’ என்று கூறிவிட்டனர்.

அவரது கல்வி – விளையாட்டு – இதர திறன் சோதனைகள்  பற்றி எந்தக் கேள்வியையும் கேட்காமல், பெயரை மட்டும் கேட்டுவிட்டு, ஒரு (இஸ்லாம்) மாணவரை வெளியேற்றியுள்ளனர். இந்நிகழ்வு ஒன்றிய அரசின் கீழ் வரும் அமைப்பின் உறுப்பினர்களின் கண்ணோட்டம் குறித்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக் காலமாக இந்தியாவில் அனைத்து அமைப்புகளிலும் திறமையை விட பெயர் மற்றும் மதம் முன்னிலைப்படுத்தப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றிய அரசின் அமைப்புகளில் ஊடுருவியுள்ள மதவாத நஞ்சினை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஓர் அமைப்பு வளர வேண்டுமெனில் அங்கு பன்முகத்தன்மையும்,  தகுதியும் (விளையாட்டுப் போட்டிகளில் இதுதானே முக்கியம்) அடிப்படைத் தேவைகளாக இருக்க வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்தில் திறமைக்கு மாற்றாக மத அரசியல் அடையாளம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

‘‘ஒரு மாணவனின் பல ஆண்டு கால உழைப்பும், கனவும் அவனது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நிராகரிக்கப்படுவது – ஒரு ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல’’ என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக வேலைவாய்ப்பு நிறுவனங்களைப் பார்க்கிறார்கள். அங்கும் மத அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது சரியா? தகுதியிருந்தும் இளைஞர்கள் நிராகரிக்கப்படும்போது, அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும், சமூகத்தின் மீதான கசப்பும் உருவாகிறது. தகுதியான நபர்களை விடுத்து, (மத) அடையாளத்தின் அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது அவர்களின் திறனையும் பாதிக்கும். அவர்களின் திறன் தேவைப்படும் துறைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் நிலவும் இந்தப் பாரபட்சம் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நஞ்சாக மாறுகிறது. ஷான் முகமதுவுக்கு நேர்ந்தது வெறும் தனிப்பட்ட நிராகரிப்பு அல்ல; அது  ஒட்டுமொத்த ஒன்றிய அரசின் துறைகளுக்கு விடப்பட்ட சவால்! ஒன்றிய அரசு இது குறித்து மவுனம் காப்பது மேலும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

இதுநாள் வரை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீது நீண்ட  நெடுங்காலமாக இருந்து வந்த நிராகரிப்பு – காழ்ப்புணர்ச்சி தற்போது சிறுபான்மையினர் பக்கமும் திரும்பி உள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் எல்லாத் துறைகளிலும் ‘அவாளே’ இருக்கவேண்டும் என்ற ஆபத்தான திசையை நோக்கி மீண்டும் திரும்பி உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த அரசமைப்புச் சட்டத்தின்கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, பதவிப் பொறுப்பை ஏற்பவர்கள், நடைமுறையில் அதற்கு நேர் எதிராக மதவாதக் கண்ணோட்டத்தோடு, வன்மத்தோடு எதையும் அணுகுவது இந்திய ஒற்றுமைக்கு வைக்கப்படும் அணுகுண்டாகும். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பிஜேபியின் வளர்ச்சியும், அதிகார பலமும் நாட்டை அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லும்; மக்களை வாழ விடாது செய்யும் – எச்சரிக்கை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *