பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை!

9 Min Read

அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், ஈரோடு!

ஈரோடு – சித்தோட்டில் மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

ஈரோடு, ஏப். 3– ‘‘பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை! அந்த வகையில், அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், இந்த ஈரோடு!’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காலை (2.4.2026) ஈரோட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆற்றிய உரை வருமாறு:–

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நின்று, தமிழ்நாட்டிற்கு புதிய விடியலைத் தந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு நான் இங்கே வந்திருக்கிறேன்.

பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் வாழ்ந்து வளர்ந்த ஊர்!

இது, பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் வாழ்ந்து வளர்ந்த ஊர், இந்த ஈரோடு! பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை! அண்ணா இல்லை என்றால் கலை ஞர் இல்லை! கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை! அந்த வகையில், அனைத்திற்கும் தொடக்கமாக விளங்கும் திராவிடப் பேரூர்தான், இந்த ஈரோடு!

திராவிடப் பேரூரில் நின்று நான் கேட்கிறேன்… மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்குத் தயாரா? (தயார் என மக்கள் கூறினர்). மகிழ்ச்சி! அதற்காகத்தான், இந்த மாவட்ட வேட்பாளர்கள் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருகிறார்கள்.

9 வேட்பாளர்களையும்
வெற்றி பெறச் செய்வீர்!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நமது வெற்றி வேட்பாளர் மாவட்டக் கழகத்தின் செயலாளர் –அமைச்சர் – நம்முடைய அன்புச் சகோதரர் சு. முத்துசாமி நிற்கிறார். மிக நீண்ட அரசியல்அனுபவம் கொண்டவர். அமைதியாகப் பேசி எதையும் சாதிக்கக் கூடியவர். அதேபோன்று, என்னிடம் பேசி இந்த ஈரோடு மாவட்டத்திற்குப் பல்வேறு திட்டங்களைப் பெற்று செயல்படுத்திக் காட்டியவர். எனவே, ஈரோடு மேற்கு தொகுதி மக்கள், அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எல்.சுந்தரம் அவர்கள். முன்பே சட்டப்பேரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர். பவானிசாகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பி.எல். சுந்தரம் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்கள். பொறியியல் பட்டதாரியான இவர், மக்கள் பணிகளைச் செய்யக் களம் காண்கிறார். கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் நம்முடைய வெற்றிச் சின்னத்தில் நிற்கும் அவருக்கு, கழகத்தின் சார்பில் இருக்கும் நண்பர்கள் கடுமையாகக் களப்பணி ஆற்ற வேண்டும். செந்தில்நாதன் அவர்களுக்கு, மொடக்குறிச்சி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்களின்பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள். இவரது பெயரையே பெருந்துறை வெங்கடாசலம் என்று சொல்லும் அள விற்குத் தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்தவர். பெருந்துறை தொகுதி மக்கள் தோப்பு வெங்கடாசலம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் எம்.சிவபாலன் அவர்கள். ஒன்றியக் கழகச் செயலாளராகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய ஒரு நல்ல இளைஞர். அந்தியூர் தொகுதி மக்க ளுக்காகப் பணியாற்ற உங்களிடம் நிற்கிறார். சிவபாலன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம் அவர்கள். நான் இளை ஞரணியின் செயலாளராக பொறுப்பேற்றுப் பணி யாற்றிய நேரத்தில், இளைஞரணியில் இருந்து கழகப் பணியைத் தொடங்கி, இன்றைக்கு மாவட்டச் செயலா ளராக அவர் உயர்ந்திருக்கிறார். தொகுதி மக்களுக்கு நன்றாக பணிசெய்ய நல்லசிவம் நிற்கிறார். அவருக்கு கோபிசெட்டிபாளையம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து அவரைப் பெருவாரியான வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, பவானி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கே.ஏ. சந்திரசேகர் அவர்கள். ஒன்றியச் செயலாளராக இருந்து கழகத்தை வளர்ப்பவர். இப்போது பவானி தொகுதியை வளர்க்க உங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறார். அவரையும் நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் ஆதரவளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மூத்த தலைவர் மறைந்த அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும், அவரது அன்பு மகன் திருமகன் ஈ.வெ.ரா.வும் நின்று வென்ற தொகுதி. விரைவில், நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வேட்பாளர் பெயரை அறிவிக்க இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த வேட்பாளருக்கு, கை சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று, நம்முடைய அமைச்சராக இருக்கும் சாமிநாதன் அவர்கள், காங்கேயம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் நிற்கிறார். அவருக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மாவட்டத்தில் நிற்கும் 9 வேட்பாளர்களை நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராகிவிட்டீர்களா? நன்றி!

உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்போடும் உரிமையோடும் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். வெற்றி உறுதியா? வெற்றி உறுதி. வேட்பாளர்கள் உட்காரலாம்.

கடந்த 5 ஆண்டுகளாக நான் நடத்திய ஆட்சியை நீங்கள் எல்லாம் நன்றாக கவனித்திருப்பீர்கள். ‘திராவிட மாடல்’ என்று சொன்னோம். அது, டெவலப்மெண்ட் மாடல்! அதுவும், வளர்ச்சி என்பது, அனைத்துத் துறை வளர்ச்சியாக – அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியாக – அனைத்து மாவட்டங்களுக்கான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய திட்டங்களால் பயனடையும் பயனாளிகள் வீட்டிற்கு ஒருவராவது நிச்சயம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள் உங்களுக்கு, இந்த திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று. அந்தளவிற்கு ஒவ்வொரு திட்டத்தையும் உன்னிப்பாக கவனித்து செயல்படுத்தினோம்.

நம் திட்டங்கள் – பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு!

அதனால்தான், நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள், சகோதரிகள், மாணவிகள், இளைஞர்கள் என்று எல்லோரும் கூடி, அளவில்லா அன்புடன் வர வேற்கிறார்கள்! குடும்பத்தில் ஒருவராக நினைத்துப் பாசத்தைப் பொழிகிறார்கள். மகளிர் சிறந்து விளங்கினால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமும் சிறந்து விளங்கும் என்று, மகளிரின் உயர்வுக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் நாம் எடுத்திருக்கும் முன்னெடுப்புகள், பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகிறது!

உரிமைத்தொகை – விடியல் பயணம் – புதுமைப்பெண் – தோழி விடுதி மட்டுமல்ல, பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு குறைத்திருக்கிறோம்! அதேபோன்று, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் புதிதாக வீடு ஒதுக்கும்போது, அந்தக் குடும்பத்தின் பெண்கள் பெயரில்தான் வீடுகளை இன்றைக்கு ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறோம்.

அதேபோன்று, குழந்தைத் திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பாலின வள மய்யங்களை உருவாக்கியிருக்கிறோம். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்க ளுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவிற்குச் சட்டத்தைக்கொண்டு வந்திருக்கிறோம். டிஜிட்டல் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்றி யிருக்கிறோம்.

ஒரு குற்றம் நடந்தால் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்பதில்தான், ஓர் அரசின் செயல்பாடு மதிப்பிடப்படும். அப்படிப் பார்த்தால், 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்தான். இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வது, நம்முடைய தமிழ்நாட்டில்தான்! இங்கு சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கிறது; பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்! அதனால்தான், தைரியமாக வேலைக்குச் செல்கிறார்கள்! ஏராளமான தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய அரசின் சாதனைகள் என்று சொல்லப் பழனிசாமியிடம் எதுவும் இல்லை; தமிழ்நாட்டிற்கு எலக்‌ஷன் டூர் வரும் பிரதமரிடமும் எதுவும் இல்லை! சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தால், மதுரை எய்ம்ஸை செங்கல் செங்கல்லாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாதனை… அவர்களிடம் சாதனை லிஸ்ட்டே இல்லை. ஆனால், நம்மிடம் அவர்களின் துரோக லிஸ்ட் இருக்கிறது. சொல்லட்டுமா…

நீட் துரோகம்! மெட்ரோ ரயில் திட்டங்களைத் தராமல் துரோகம்! நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்த துரோகம்! சிறுபான்மை யினருக்கு சி.ஏ.ஏ. துரோகம்! விவசாயிகளுக்கு வேளாண் சட்ட துரோகம்! அமெரிக்க வரிவிதிப்பில் நெசவாளர்களைக் காப்பாற்றத் தவறிய துரோகம்! மேற்காசியப் போரில் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முடங்க வைத்திருக்கும் துரோகம்! ஹிந்தி மொழியைத் திணிக்க, நம்முடைய குழந்தைகளுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தராத துரோகம்! ஜி.எஸ்.டி இழப்பீடு தராத துரோகம்! மாநில உரிமைகளை பறிக்கும் துரோகம்! இவ்வாறு துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான், பழனி சாமியும் – அவரின் கூட்டாளி பா.ஜ.க.வும்! குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்து, தமிழ்நாட்டு மக்கள் முன்பு குற்றவாளி கூண்டில் நிற்பது என்.டி.ஏ. கூட்டாளிகள்!

கொள்கைகளால் நாங்கள்
ஒன்று சேர்ந்திருக்கிறோம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்தோம். இங்கே அண்ணன் முத்தரசன் வந்திருக்கிறார். கொள்கை மாறாமல் இன்றைக்கு நாங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட பயணம், மாநில உரிமைகளைக் காக்க – தமிழை உயர்த்த – இனமான உணர்வைப் போற்ற – தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்க – கொள்கைகளால் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்!

ஆனால், என்.டி.ஏ. கூட்டணியைப் பாருங்கள். 2016 இல் அமித் ஷா என்ன சொன்னார். அ.தி.மு.க. அமைச்சரவைதான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவை என்று சொன்னார். ஆனால், அந்த ஊழல்கூட்டம் மொத்தமும் இப்போது அதே அமித்ஷாவுடன் நிற்கிறது.

என்.டி.ஏ. எனும் துரோகக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள்

ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கே இலஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவர். இன்னொருவர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுப்பதில் மாட்டி யவர். உதிரிகளைப் பற்றியெல்லாம் நான் சொல்ல வேண்டுமா? இப்படி குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் கூட்டணியாக வந்து, இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள்தான், அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரப் போகிறார்கள். இந்த மேடையில் இருந்து சொல்கிறேன். என்.டி.ஏ. எனும் துரோகக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 23 ஆம் நாள் நிச்சயம் தூக்கி எறிவார்கள். அது, உறுதி! உறுதி!

டபுள் எஞ்சினாவது, டப்பா எஞ்சினாவது! தமிழ்நாட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நுழைய நினைத்தால், தடம் புரளுவது மாதிரி விரட்ட வேண்டும்! நம்முடைய போராட்டம்; தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமல்ல; கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடாதீர்கள்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பீர்!

எனவே, தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்போடு கேட்கிறேன்; உரிமையோடு கேட்கிறேன்; ஏன் கலைஞரின் மகனாகக் கேட்கிறேன்.

தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட நீங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும்! அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தன்னிகரில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்! உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்த்துவோம்!

எனவே, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!

வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *