தேர்தல் முடிந்த பின் ஒன்றிய தொல்லியல் துறையின் ‘‘ஆரியத்தனத்தை’’ எதிர்த்து, ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்துக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

6 Min Read

* 982 பக்கங்கள் கொண்ட கீழடி ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டிலேயே 
கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தார்!
* மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிக்கையைத் திருத்தி, மாற்றி அனுப்புமாறு 
இந்தியத் தொல்லியல் துறை தாக்கீது கொடுப்பதா?
* தன் நிலையில் உறுதியாக இருந்து மறுத்துள்ளார் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா!

கீழடி – திராவிட நாகரிகமே என்று உரிய முறையில் ஆய்வு செய்து 982 பக்கங்களில் உரிய தரவுகளுடன் ஒன்றிய தொல்லியல் துறை தலைமைக்கு, கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அளித்த நிலையில், மூன்றாண்டுகளுக்குப் பின், அதைத் திருத்தி, மாற்றி எழுதி, அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று தொல்லியல் துறை வற்புறுத்துவது அசல் ஆரியத்தனமே! தேர்தல் முடிவுக்குப் பின்  ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:

கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய

அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவாம்!

– என் ஆய்வு சரியானது என்று பதிலடி!

கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா வெளியிட்ட கீழடிபற்றிய அறிக்கை

இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. அதில், முதல் இரண்டு கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார்.

அது குறித்த அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்அய்) சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருள்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மூன்றாண்டுகள் கழித்து
இந்திய தொல்லியல் துறை – அறிக்கையை மாற்றி
எழுதித் தர உத்தரவு

அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே கீழடி அறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘‘அறி வியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளைக் கொண்டுதான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை’’ எனவும் பதிலளித் திருந்தார்.

இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையே மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்கத்தின் (என்எம்எம்ஏ) இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில் அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

2014-2016 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கி.மு.800-500 ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழைமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஏஎஸ்அய் மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக் குழு (critical evaluation) அந்த அறிக்கையை ‘தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது’ என விமர்சித்தி ருந்தது.

இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏஎஸ்அய்யின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது’ என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், மார்ச் 27 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏஎஸ்அய், அவரது பதிலை மறுபரி சீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏஎஸ்அய் அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், ராமகிருஷ்ணா உடனடியாக இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை பாயுமாம்!

கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளு மன்ற கேள்விகள்’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங் களால், ‘கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பி யுள்ளது.

அந்த குறிப்பாணையில், ‘உங்களது செயல்பாடு, திட்டமிட்ட கட்டுப்பாடு இன்மை, கடுமையான அலட்சியம் மற்றும் பணி ஒழுங்கு இல்லாமை எனப் பார்க்கப்படுகிறது. இது துறை சார்ந்த ஒழுங்கு விதிகளை மீறுவதாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் மத்திய குடிமைப் பணிகள் விதிகள் (1965) விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன், பதில் வராத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில்
இப்படியொரு ஒழுக்கக்கேடா?

– இப்படி ஒரு திணிப்புக்கான முயற்சி ஒரு ஜனநாயக நாட்டில் நடைபெறுவது ஏற்புடையதா? மகாமகா வெட்கக்கேடு அல்லவா?

ஓர் அனுபவம் மிக்க தொல் பொருள்துறை கண்காணிப்பாளர் – தனது புதைபொருள் தரவுகளைக் கொண்டு – தக்க காரண, காரியங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்து தந்துள்ள, வருங்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகும் ஓர் ஆவணம் போன்ற அறிக்கை தங்களது ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு ஒத்த வகையில் அது இல்லையென்ற ஒரே காரணத்தால், ‘‘மாற்றி, திருத்தி எழுதி அனுப்புங்கள். இதில் நீங்கள் பிடிவாதம் காட்டினீர்கள் என்றால், உங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’’ என்று அச்சுறுத்துவது நியாயமா? நேர்மையா? நீதியா?  சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

இத்தகைய அச்சுறுத்தல், உடற்கூராய்வு (Post Mortem) செய்யப் பணித்து பொறுப்பை வழங்கிய டாக்டரிடம், ‘‘எங்கள் கருத்துக்கேற்ப இல்லை, அது கொலை அல்ல, இயல்பான மரணம்  என்று அதற்கேற்ப உங்களது அறிக்கையை மாற்றி எழுதுங்கள்; இல்லை யேல், உங்களைத் தண்டிப்போம்’’ என்று மிரட்டி, பணிய வைப்பது போன்ற அருவெறுப்பானதும், அரசியலமைப்புச் சட்ட மீறலும் அல்லவா இது?

முதலமைச்சரின் கண்டனம்!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் லட்சிய முதலமைச்சர் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியில் இந்த ‘ஆரியத்தனம்’ பற்றி தனது கண்டனத்தினைப் பதிவு செய்து உள்ளார்.

கீழடி ஆய்வு அறிக்கை தந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், கற்றுத் துறைபோகிய, அகழ்வாராய்ச்சியில் தலைசிறந்த விற்பன்னர்!

தனது அறிக்கையை மாற்றி எழுதித் தர முடியாது என்று அவர் பதிலளித்துள்ளது – கடமை தவறாத, மாறாக கருத்துரிமை மற்றும்  உண்மையின் பக்கமே என்றும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை ஜீவாதார உரிமையே ஆகும்!

நாடு தழுவிய கண்டனங்கள் ஒத்தக் கருத்துள்ள அனைவராலும் ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை நோக்கி எழுப்பப்படவேண்டும்.

திராவிட நாகரிகம் – வேத கால நாகரிகத்தைவிட முந்தையது என்று ஆகிவிடக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு எதிரானது கீழடிபற்றிய இந்த உள்ளடி!

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்து, ஓட்டுகள் எண்ணப்படும் மே 4 ஆம் தேதி இடைவெளியில் இதற்கென ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்திட, ஒத்த கருத்துள்ளவர்கள், கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு திராவிடர் கழகம் உரிய முடிவு செய்யும்.

அதிகாரியைப் ‘பலிகடா’ ஆக்கும் கசாப்புத் தனத்திற்கு சிறிதும் இடந்தர அனுமதியோம்!

 

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை

3.4.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *