கொல்கத்தா, ஏப்.2- மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் வேறு மாநில வாக்காளர்களைச் சேர்க்க பா.ஜனதா முயன்று வருவதாக மம்தா குற்றம் சாட்டினார்.
மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலையொட்டி, பஸ்சிம் மெடுனிபூரின் சந்திரகோனா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:-
இங்கு நிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மறந்து விடுங்கள். 294 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் நேற்று முன்தினம் (31.3.2026) என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். புதிதாக வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் தெரிந்து, தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு ஓடியதாக அவர் கூறினார்.
வெளிமாநில வாக்காளர்கள்
அதாவது, தங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவை மாற்றுவதற்காக, பீகார், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள வாக்காளர்களை மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக சேர்க்க பா.ஜனதா முயன்று வருகிறது.
ரயில்கள் மூலம் அந்த வாக்காளர் களை வரவழைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். பீகாரில் அப்படித்தான் செய்தனர்.
அசைவ உணவுக்கு தடை
பா.ஜனதாவுக்கு மேற்கு வங்காளம் மீதோ, அதன் மக்கள் மீதோ எந்த மரியாதையும் இல்லை. தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக் கொண்டு, சிறப்பு திருத்தம் என்ற பெயரில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் பெயர்களை நீக்கி வருகிறது.
மக்களின் குடியுரிமை, அரசியலமைப்பு சட்ட, ஜனநாயக உரிமைகளை பறித்து வருகிறது. அதற்கு எதிராக இறுதி வரை போராடுவோம்.”
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், வங்காளிகள் அசைவ உணவு உண்பதற்கு தடை விதித்துவிடும். பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வருவதை முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கர்பேடா என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் மம்தா பேசியதாவது:-
நமது கட்சி போராடாவிட்டால், பா.ஜனதா 5 கோடி பேரின் பெயர்களை நீக்கி இருக்கும். பா.ஜனதாவிடம் எச்சரிக்கையாக இருங்கள். மற்ற மாநிலங்களில் செய்தது போல், உங்களுக்கு விருப்பமான உணவுக்கு தடை போட்டு விடும்.
அனைத்து அரசியலமைப்பு சட்ட அமைப்புகளையும் அரசியலாக்கி விட்ட ஒன்றிய அரசை கவிழ்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மேற்கு வங்காள தேர்தல் முடிந்த பிறகு, டில்லியை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
