சென்னை, ஏப்.2 புதிய மாதத்தின் தொடக்க மான நேற்று (1.4.2026) எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு உருளைகளுக்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விலை கடந்த மாதத்தைத் தொடர்ந்து இந்த மாதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வணிக எரிவாயு உருளை விலை ரூ. 203 உயர்ந்து, தற்போது ரூ. 2,246 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டில்லி: தலைநகர் டில்லியில் ரூ. 195.50 உயர்ந்து, ரூ. 2,078.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 1-ஆம் தேதியே இதன் விலை ரூ. 114.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டு சமையல் எரிவாயு உருளை மாற்றமில்லை பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையில் இந்த மாதம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 7-ஆம் தேதி வீட்டு சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 60 உயர்த்தப்பட்டது. தற்போது சென்னையில் இதன் விலை ரூ. 928.50 ஆகவும், டில்லியில் ரூ. 913 ஆகவும் நீடிக்கிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடர்கிறது.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகவே எரிவாயு விலை உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வணிக சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
