சென்னை, ஏப்.2 எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11இல் நடந்து வரும் மேம்பாலப்பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீத பணிகளும் முடிந்து, வரும் 5.4.2026 முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளன.
எழும்பூர் ரயில் நிலையத்தில், 734.91 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நடைமேடை 10, 11இல் இதற்கான பணிகள் துவங்கி இருப்பதால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில், கடந்த 19.2.2026ஆம் தேதி முதல், 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக கால அட்டவணைப்படி, 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்குவதால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11இல் பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த பிப்., 19இல் துவங்கப்பட்டன.
தவிர்க்க முடியாத நிலையில், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணியரின் சிரமத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, எழும்பூர் நடைமேடை 10, 11இல் இரவு பகலாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, 80 சதவீதம் பணிகள் முடித்துள்ளோம். எஞ்சியுள்ள பணிகள் அனைத்தும், வரும் ஏப்., 5க்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். அதன்பின், ஏற்கனவே இயக்கியதுபோல், இந்த தடத்தில் அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
