அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார்

4 Min Read

புலவர்கள் என்றால் ஏதோ பரிசுகளுக்காகவும், பதவி – உதவிகளுக்காகவும் பாடுவோர் – ‘பராக்குக் கூறுவோர்’ என்று – ஒரு பழிச் சொல் உண்டு. அதில் ஒரு பகுதி உண்மையென்றாலும், எல்லாப் புலவர்களும் அத்தகையோர் அல்லர். ஒல்காப் புகழ் கொண்டவர்கள் என்று – தமிழுக்கும், தமிழருக்கும்  இழுக்கோ, இருட்டடிப்போ ஏற்படும்போது, அமைதியாகக் கேட்டுக் கொண்டிராது, அஞ்சாது, மேடையில் மறுப்புக் கூறி, தமது நியாயங்களையும், தமிழ் மானம் – தன்மான உணர்வோடு, தமிழினத்தின்  சிறப்பை, ‘முதுகெலும்புள்ள முதுபெரும் புலவர்கோ இவரல்லவா’ என்று பெருமை கொள்ளும் வகையில் சீறி எழுந்து சிறப்புப் பதிலடி தரத் தயங்காதவர்களும் சிலர் உள்ளனர்.

பெருமைக்குரிய இனமானப் பேராசிரியர்கள் – கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து நிறுத்தும் அஞ்சா நெஞ்சர்களான புலவர் வரிசையில் – எக்கட்சியையும் சாராத பெரும்புலவர், நமது மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் அய்யா கார்மேகனார் ஆவார்!

திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களுடன் சென்று (1950–1951)   மாணவப் பருவத்தில் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புலவர் கோ அவர்களது பேருரையைக் கேட்டு மகிழும் வாய்ப்பை பெற்றேன்.

புரட்சிக் கவிஞர் அவர்களால்

‘புலவர் தம் நெடுங் குழாத்தின் பதி அவர்’’

என்றும்,

‘திரு அவர் தமிழ்க்கெல்லாம்…

மாணவர் மாணவியருக்கே அவர் ஒரு சுடர் விளக்கு’ என்று பாடப்பட்ட பெருமைக்குரிய பெரும் புலவர்!

அவர்பற்றி திருவாளர் ம.பெ. சீனிவாசன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘சாகித்திய அகாதெமி’யினால் 2021இல் வெளியிடப்பட்ட நூல் ஒன்றை புலவர் பெருமான் பேரன்,  பேராசிரியராக உள்ள  பிரதீப் கண்ணா மூலம் கிடைக்கப் பெற்றேன்.

அதில் புலவர் பெருமானின்  தன்மான தமிழ்த் துணிவுக்குப் பல நிகழ்வுகள் கொத்தாகத் தரப்பட்டுள்ளன –  பதிப்பாசிரியர் அவர்களால்.

அதனை அப்படியே வாசகர்களுக்குச் சிந்தனை விருந்தாகப் படைக்க விரும்புகிறேன்.

‘‘அஞ்சாமை: பேச்சும் எழுத்தும்

14–01-1955இல் பொங்கல்திருநாள் அன்று-மதுரையில் புகழ்பெற்ற ‘நடேசையர் வாசக சாலை’யின் திறப்பு விழா நடைபெற்றது. அப்போதைய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் விழாவிற் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஒரு நூலகத்தில் போற்றிப் பாதுகாக்கத் தக்க உலகப் பெருநூல்களாக விளங்குவன கீதை, குரான், பைபிள் என்பவையே” என்று குறிப்பிட்டார்.

அப்பெருநூல் வரிசையில் உலகப் பொதுமறையான திருக்குறள் இடம் பெறாதது கண்டு பேராசிரியர் கார்மேகனாரின் நெஞ்சம் கனன்றது. ‘குடியரசுத் துணைத்தலைவர் திருக்குறளைக் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என்று அவர் நினைத்தார். ‘செங்கோலுக்கு முன்னே சங்கீதம் செல்லாது’ என்று பயந்து அந்த நினைப்பைத் தம் நெஞ்சுக்குள்ளேயே அடக்கிவிடவில்லை. எழுந்தார்; மேடை நோக்கிச் சென்றார். “உலகம் போற்றும் தத்துவப் பேரறிஞரான நம் குடியரசுத் துணைத்தலைவர் தம் திருவாயால் திருக்குறளையும் சேர்க்காமல் போனது நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று அஞ்சாமல் அவர் முன்னே எடுத்துரைத்தார். அது கேட்ட குடியரசுத் துணைத்தலைவர் அறியாமல் நேர்ந்த குறிக்கத்தக்க இவ்விடுதலுக்காக (Notable Omission) அவையோர்க்குத் தம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாராம்.”

1956ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள்முதல் ஜூன் 5 முடிய ஏழுநாள்கள் தொடர்ந்து மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நடைபெற்றது. அவ்விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய இராஜாஜி, ‘வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியாது’ என்னும் பொருள்படப் பேசினார். பின்னர்ப் பேச எழுந்த கார்மேகனார், இராஜாஜியின் கருத்தை மறுத்துத் ‘தானே தனித்தியங்கவல்ல செம்மாப்பும் தலைமையும் உடையது தமிழ்’ என்றார். மொழிக்கும் தாழாத – மேலான இலக்கிய இலக்கண வளமுடைய செம்மொழி தமிழ் என்பதைச் சான்றுகளுடன் நிறுவிக் காட்டினார். அவையோரின் கைதட்டலுக்கும் பாராட்டுதலுக்குமிடையில் அவரது பேச்சு  நிறைவு பெற்றது. இராஜாஜி அவர்களும் மறுமாற்றம் எதுவுமின்றி அவர் கருத்தைக் கேட்டுச் சென்றதாக ஒரு செய்தி உண்டு.!

“தவறு என்று தமக்குப்பட்டதை அஞ்சாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற தமிழறிஞர் சிலருள் நாவலர் ச.சோ. பாரதியார், ஆ.கார்மேகனார் ஆகிய இருவரும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்” என்கிறார் மா.இராசமாணிக்கனார். அத்தகைய அஞ்சாமை பற்றிப் பேராசிரியர் நா.பாலுசாமியும் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஔவையார்’ என்னும் தமிழ்த் திரைப்படம் நாடு முழுவதும் விரும்பிப் பார்க்கப்பட்ட காலத்தில் அதில் உள்ள வரலாற்றுப் பிழைகளைச் கட்டிக்காட்டி விமர்சித்தவர் கார்மேகனார். “புலமையிலும் அரசியலறிவிலும் பண்பட்டு விளங்கிய ஔவையாரும், பெருநாவலராகிய திருவள்ளுவரும் ஒழுக்கம் தவறிய இருவருக்குப் பிறந்தனர் என்னும் பொய்க் கதையினையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத பிறசெய்திகளையும் கொண்டு ஒளவையார் வரலாறு படமாக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் கருதினார். அக்கருத்தினை மதுரையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பலருமறியத் துணிவோடு தெரிவித்தார்.

கார்மேகனார் தம் பேச்சுக்கிடையில், “தமிழ்ச் சமுதாயத்திற்கே இழிவைத் தரும் இத்தகைய படங்களைப் பொதுமக்களும் அரசியலாரும் ஏன் தடுக்கவில்லை? இது பற்றி அவர்கள் வாளா இருப்பது ஏன்?’’ என்று வினவினார். இங்ஙனம் அவர்கள் கேட்ட கேள்வி, மான உணர்ச்சியுடைய தமிழர் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வியன்றோ? என்கிறார் மா.இராசமாணிக்கனார். கார்மேகனார் அன்று பேசிய பேச்சு தமிழ்நாடு, தினத்தந்தி ஆகிய நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது என்றும் குறித்துள்ளார் அவர். பேச்சு மேடையில் அஞ்சாமையுடன் தம் கருத்துகளைத் தெரிவித்தது போலவே எழுத்திலும் தமது மறுப்பினைப் பதிவு செய்ய அவர் தயங்கியதில்லை.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *